போபால்,
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள பாத்நகர் பகுதியை சேர்ந்த 45 வயது பெண் கடந்த 8 நாட்களுக்கு முன்பு மாயமானார். பல இடங்களில் தேடியும் அந்த பெண்ணை கண்டுபிடிக்க முடியாததால், அவரது உறவினர்கள் இது குறித்து போலீசில் புகார் அளித்தனர். அந்த பெண்ணின் மகனுக்கு விரைவில் திருமணம் நிச்சயிக்கப்பட இருந்த நிலையில், அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டன.
இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, மாயமான பெண் 50 வயது நபர் ஒருவருடன் வசித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த பெண்ணையும், அவரது கள்ளக்காதலரையும் அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண் தனக்கு தனது கணவருடன் வாழ விருப்பம் இல்லை எனவும், தனது காதலருடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதற்கிடையில் அந்த பெண்ணின் உறவினர்களுக்கு இது தொடர்பான தகவல் தெரியவந்தபோது அவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் அந்த பெண்ணின் மகனுக்கும், அவரது கள்ளக்காதலரின் மகளுக்கும்தான் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. இவர்களது கள்ளக்காதலால் இவர்களது பிள்ளைகளின் திருமண வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது.
இந்த சம்பவத்தில் வழக்குப்பதிவு எதுவும் செய்யப்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட பெண்ணை அவரது உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர். தனது வருங்கால சம்பந்தியுடன் நடுத்தர வயது பெண் தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.