கராச்சி,
கடந்த செப்டம்பர் மாதம் இறுதியில் துபாயில் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, பாகிஸ்தானை பந்தாடி 9-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. முன்னதாக லீக் மற்றும் சூப்பர்4 சுற்றிலும் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது.
முன்னதாக இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினை காரணமாக இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இருதரப்பு தொடர்களில் மோதுவதை தவிர்த்து வருகின்றன. ஐ.சி.சி. மற்றும் ஆசிய கிரிக்கெட் வாரியங்கள் நடத்தும் தொடர்களில் மட்டுமே மோதி வருகின்றன. ஐ.பி.எல். தொடரிலும் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் கொடூர தாக்குதலுக்கு பதிலடியாக 2025 ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் அணியுடன் கைகுலுக்காமல் இந்தியா வெளியேறியது பெரிய சர்ச்சையானது. அதற்கு பழி வாங்கும் நோக்கத்தில் இந்தியா வென்ற கோப்பையை கொடுக்காத பாகிஸ்தான் மற்றும் ஆசிய கவுன்சில் தலைவர் மோசின் நக்வி கையோடு எடுத்துச் சென்றார்.
இந்நிலையில் விளையாட்டில் இந்தியா அரசியல் செய்வது நிறுத்தப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் கேட்டுக் கொண்டுள்ளார். குறிப்பாக ஐபிஎல் தொடரில் பாகிஸ்தான் வீரர்களுக்கு விளையாட இந்தியா தடை விதித்துள்ளதை மறைமுகமாக விமர்சித்துள்ளார். எனவே இந்த விவகாரத்தில் ஐ.சி.சி. தலையிட்டு இந்தியாவின் ஒரு தலைப்பட்சபோக்கை நிறுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:– “மன்னிக்கவும். ஆனால் கிரிக்கெட்டில் எனக்குப் பிடிக்காதது அரசியல். விளையாட்டு அரசியலில் இருந்து விலகி இருக்க வேண்டும். லீக் கிரிக்கெட்டில் அனைத்து நாடுகளிலும் இருந்து வீரர்களை தேர்ந்தெடுங்கள். தைரியமாக இருங்கள். பெரியவர்களாக இருங்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது நடக்காது.
ஐ.சி.சி அங்குதான் வரவேண்டும் என்று நான் நினைக்கிறேன். லீக் தொடரை யார் நடத்துகிறார்கள் என்பது முக்கியமல்ல. அணிகளை யார் வைத்திருக்கிறார்கள் என்பதும் முக்கியமல்ல. ஒவ்வொரு நாட்டிலும் இருந்து வீரர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும்” என்று கூறினார்.