HBD Kamal: முதல் பாட்டு; மலையாளப் படம்; சாமிப் பாடல் – சக ஹீரோக்களுக்காகப் பாடிய கமல்ஹாசன் | Rewind

நாளை கமல்ஹாசனின் பிறந்த நாள். இந்திய சினிமாவில் கலை, தொழில்நுட்பம் தொடங்கி, துறை சாராத விஷயங்கள் வரை அத்தனையிலும் கற்றுத் தேர்ந்தவர் கமல்ஹாசன்தான் என்பார்கள்.

நடிப்பு தவிர, நடனம், தயாரிப்பு, இயக்கம், பாடகர், பாடலாசிரியர், பிக்பாஸ் என கமல் தொடாத துறைகளே இல்லை. அவர் நடிக்கும் படங்களில் அவர் பாடிய பாடல்கள் இப்போதும் ஆல் டைம் ஃபேவரிட் தான்.

‘யார் யார் சிவம்..’, ‘கண்மணி அன்போடு காதலன்..’, ‘அம்மம்மா வந்தது இங்கு செல்லக்குட்டி’, ‘ராஜா கைய வச்சா…’, ‘சுந்தரி நீயும்..’, ‘தென்பாண்டி சீமையிலே..’, ‘விக்ரம்.. விக்ரம்..’, ‘பத்தல பத்தல..’, ‘நினைவோ ஒரு பறவை..’, ‘இஞ்சி இடுப்பழகி’, ‘உன்ன விட..’ என கமல் பாடிய பாடல்கள் இப்போது மட்டுமல்ல எப்போதும் இனிக்கும் இன்பம் தான்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

இதில் ஆச்சரியமான ஒரு விஷயம். மற்ற ஹீரோக்களுக்காகவும் அவர்களது படங்களில் பாடியிருக்கிறார் கமல். சக ஹீரோக்களின் படங்களில் ‘இந்தப் பாடல் கமல் பாடினால்தான் சிறப்பாக வரும்’ என இசையமைப்பாளர்களோ அல்லது இயக்குநர்களோ விரும்பினால் கமலிடம் கேட்டுவிட்டால் போதும்.

மறுக்காமல் பாடிக்கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். சமீபத்தில் வெளியான பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி நடித்த ‘மெய்யழகன்’ வரை உதாரணங்களை அடுக்கலாம். அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக, ஒரு மினி பார்வை இது..

கமல், ரஜினி
கமல், ரஜினி

முக்தா சீனிவாசன் இயக்கத்தில் 1975ல் தான் கமல் முதன் முதலில் ஒரு பாடலைப் பாடினார். ஜி.தேவராஜன் இசையில் ‘ஞாயிறு ஒளிமழையில்..’ என்ற பாடலைப் பாடினார். அந்தப் பாடல் தெவிட்டாத தேன் பாடலாக ஒலிக்கவே, கமல் தனது படங்களில் பாடுவதைத் தொடர்ந்தார். அப்போது மலையாளத்திலும் நடித்து வந்ததால், அங்கேயும் பாடல்கள் பாடினார்.

மற்ற ஹீரோக்களுக்காக அவர் பாடிய முதல் படமாக விஜயன் ஹீரோவாக நடித்த ‘தெரு விளக்கு’ என்ற படத்தில் இடம்பெற்ற ‘மதுரைப் பக்கம் மச்சான் பாரு..’ பாடல். ஒரு காலத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் பாடலாக இருந்திருக்கிறது. அதன்பிறகு பக்திப் படத்திலும் கமல் பாடியிருக்கிறார்.

மனோரமாவின் மகன் பூபதி, ராதாரவி, பூர்ணிமா நடித்த படம் ‘சரணம் ஐயப்பா’. சந்திரபோஸ் இசையமைத்திருக்கும் அந்தப் படத்தில் ‘அண்ணா வாடா..’ என்ற பாடலைப் பாடினார். இப்போதும் அதை யூடியூப்பில் கேட்க முடியும்.

எண்பதுகளில் கமல் சில படங்களில் கையில் மைக் வைத்துக் கொண்டு சில படங்களில் நடித்திருந்தார். அதன் பிறகு அந்த மைக் மோகனின் கைக்கு மாறிவிட்டது என்பார்கள். ஆனால், மோகன், கமலின் ரசிகர். 1984ல் மோகன், ஊர்வசி நடித்த ‘ஓ மானே.. மானே’ படத்தில் ‘பொன்மானைத் தேடுதே..’ என்ற பாடலை மோகனுக்காகப் பாடியிருக்கிறார் கமல்.

கமல், கே.பாலசந்தர், ரஜினி
கமல், கே.பாலசந்தர், ரஜினி

மாதவன், கீது மோகன்தாஸ் நடித்த ‘நள தமயந்தி’யில் ‘சூடு பட்டதா..’ என்ற பாடலையும், ‘Stranded On the Streets’ என்ற ஆங்கில பாடலையும் மாதவன், இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம் கேட்டதற்காக பாடிக் கொடுத்தார்.

இது தவிர இந்தியிலும் பாடியிருக்கிறார். பங்கஜ் கபூர் நடித்த ‘ஹப்பி’ என்ற படத்தில் ‘ஜிந்தகி திஷ்…’ என்ற பாடல் கமல் பாடினதுதான். அஜித்தின் ‘உல்லாசம்’ படத்தில் கமல் பாடிய ‘முத்தே முத்தம்மா…’ இப்போது பலரின் ப்ளே லிஸ்ட்டில் முதலிடத்தில் இருக்கும் பாடல்.

தனுஷின் ‘புதுப்பேட்டை’யில் நா. முத்துக்குமாரின் வரிகளில் ‘நெருப்பு வாயினில்..’ பாடலை யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடியிருக்கிறார். சமீபத்திய ‘மெய்யழகன்’ படத்தில் ‘போறேன் நா போறேன்.. யாரோ இவன் யாரோ..’ பாடலில் கமலின் குரல், கரையாத உள்ளத்தையும் கரைத்துவிடும்.

இப்படி சினிமாவிலேயே தொடர்ந்து உழைத்து வரும் கமலின் பயணம் இன்னும் தொடர வாழ்த்துகிறோம்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.