வாஷிங்டன்,
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைன் மீதான போரை இந்தியா மறைமுகமாக ஆதரித்து வருவதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இதற்கிடையில், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் பரஸ்பர வரி விதிக்கப்படுவதாக அறிவித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பின்னர் ரஷிய நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை காரணமாக காட்டி, இந்தியா மீதான வரியை 50 சதவீதமாக உயர்த்தினார்.
இதனால் இந்தியா-அமெரிக்கா இடையிலான பொருளாதார உறவுகளில் சிக்கல் ஏற்படும் சூழல் உருவானது. அதே சமயம், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை படிப்படியாக நிறுத்துவோம் என பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் உறுதி அளித்துள்ளதாக டொனால்ட் டிரம்ப் கூறி வருகிறார். இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை மோடி நிறுத்திவிட்டார் என்று டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார். இது தொடர்பாக ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-
“இந்தியா உடனான நமது பேச்சுவார்த்தைகள் நல்ல முறையில் சென்று கொண்டிருக்கின்றன. பிரதமர் மோடி ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டார் என்பது நல்ல விஷயம். அவர் எனது நண்பர், சிறந்த மனிதர். என்னை அவர் இந்தியாவிற்கு வருமாறு அழைத்தார். நான் அடுத்த வருடம் இந்தியாவிற்கு செல்ல திட்டமிட்டுள்ளேன்.
நான் முடிவுக்குக் கொண்டு வந்த எட்டு போர்களில், ஐந்து அல்லது ஆறு போர்கள் வரி விதிப்புகளால் முடிவுக்கு வந்தன. உதாரணமாக இரண்டு அணு ஆயுத நாடுகளான இந்தியாவும், பாகிஸ்தானும் மோதலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். எட்டு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.
அவர்களிடம், ‘நீங்கள் சண்டையை நிறுத்தாவிட்டால், நான் உங்கள் மீது வரி விதிப்பேன்’ என்று சொன்னேன். 24 மணி நேரத்திற்குள் நான் போரை முடித்து வைத்தேன். வரிவிதிப்பு இல்லையென்றால், அந்த போரை என்னால் நிறுத்தியிருக்க முடியாது. வரிகள் ஒரு சிறந்த தேசிய பாதுகாப்பு முறை.”
இவ்வாறு டிரம்ப் தெரிவித்தார்.