லாகூர்,
கடந்த செப்டம்பர் மாதம் இறுதியில் துபாயில் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, பாகிஸ்தானை பந்தாடி 9-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. முன்னதாக லீக் மற்றும் சூப்பர்4 சுற்றிலும் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது.
இந்த தொடரில் இவ்விரு அணிகளும் 3 முறை (லீக், சூப்பர்4 மற்றும் இறுதிப்போட்டி) நேருக்கு நேர் சந்தித்தன. அந்த 3 போட்டிகளிலும் இந்திய அணியே வெற்றி கண்டிருந்தது.
முன்னதாக இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினை காரணமாக இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இருதரப்பு தொடர்களில் மோதுவதை தவிர்த்து வருகின்றன. ஐ.சி.சி. மற்றும் ஆசிய கிரிக்கெட் வாரியங்கள் நடத்தும் தொடர்களில் மட்டுமே மோதி வருகின்றன.
இதன் காரணமாக கிரிக்கெட்டில் இந்தியா – பாகிஸ்தானை பரம எதிரிகள் என்று வர்ணனையாளர்கள் கூறுவார்கள். ஆனால் தம்மைப் பொறுத்த வரை இனிமேல் இந்திய அணிக்கு பாகிஸ்தான் எதிரி அல்லது போட்டியாளர் கிடையாது என்று சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார்.
இரு அணிகள் 15-20 போட்டிகளில் விளையாடி, 7-7 அல்லது 8-7 என்ற கணக்கில் வெற்றி தோல்வி இருந்தால், அதை நல்ல கிரிக்கெட் என்று சொல்லலாம். அதைப் போட்டி என்று அழைக்கலாம். ஆனால், 13-0 அல்லது 10-1 என்று இருந்தால், இது என்ன என்று எனக்குத் தெரியவில்லை. இது இனி ஒரு போட்டியல்ல என்று கிண்டலாக கூறினார். இதனை பாகிஸ்தானை சேர்ந்த பலர் விமர்சித்தனர்.
இந்நிலையில் சூர்யகுமார் யாதவ் கூறியது உண்மைதான் என்று பாகிஸ்தான் வீரரான அசான் கான் ஒப்புக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், “ஐ.சி.சி போட்டிகளைப் பார்த்தால், எனக்குத் தோன்றுகிறது… இதைச் சொல்லலாமா வேண்டாமா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் தொழில்நுட்ப ரீதியாக அவர் (சூர்யகுமார் யாதவ்) சொல்வது சரிதான்” என்று கூறினார்.