அரசியல் கட்சிகளின் ரோடு ஷோக்களை தடை செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: தலைவர்களைப் பார்ப்பதற்கு மக்கள் தானாக ஒன்று கூடுவார்கள் என்ற நிலை மாறி, மக்களைத் திட்டமிட்டுத் திரட்டும் போக்கு அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. இது அரசியலில் தனிநபர்வழிபாட்டுக்கும், கும்பல் கலாசாரத்துக்கும் இட்டுச் செல்வது மட்டுமின்றி மக்களை அரசியலற்ற வாக்குப் பண்டங்களாகவும் ஆக்குகிறது.
கடந்த சில ஆண்டுகளாக ‘ரோடு ஷோக்கள்’ என்ற பெயரில் சிறு நகரங்களிலும் பெருநகரங்களிலும் மக்கள் நடமாட்டம் உள்ள கடைவீதிகளில் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்படுவது மட்டுமின்றி உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. அதன் உச்சகட்டமாகவே கரூரில் 41 உயிர்கள் பறிபோய் உள்ளன. மக்களை, கூலி கொடுத்து திரட்டி, மணிக்கணக்கில் தெருவோரங்களில் காத்துக்கிடக்கச் செய்யும் ‘ரோடு ஷோ’ முற்றாகத் தடை செய்யப்பட வேண்டும்.