புதுடெல்லி,
வங்காள கவிஞர் பங்கிம் சந்திர சாட்டர்ஜி இயற்றிய ‘வந்தே மாதரம்’ பாடல் முதன்முதலில் 1875-ம் ஆண்டு நவம்பர் 7-ந்தேதி ‘பங்கதர்ஷன்’ என்ற இலக்கிய இதழில் வெளியிடப்பட்டது. ‘வந்தே மாதரம்’ பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூரும் வகையில், ஓராண்டுக்கு(2026 நவம்பர் 7-ந்தேதி வரை) நடைபெறக் கூடிய தேசிய பாடல் கொண்டாட்டங்களை டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கத்தில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
மேலும் இது தொடர்பான நினைவு அஞ்சல் தலை மற்றும் நாணயத்தையும் அவர் வெளியிட்டார். இந்த நிலையில், ‘வந்தே மாதரம்’ என்பது தேசிய ஒற்றுமைக்கான பிரகடனம் என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
“பத்தொன்பதாம் நூற்றாண்டில், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான சன்யாசி கலகத்தின் பின்னணியில் அமைக்கப்பட்ட ‘வந்தே மாதரம்’ என்ற அழியாத பாடலை பங்கிம் சந்திர சட்டர்ஜி இயற்றினார். 1905-ம் ஆண்டு சுதேசி இயக்கத்தின்போது இது மக்களுக்கு உத்வேகத்தின் ஆதாரமாக மாறியது.
பாரத அன்னையை புகழ்ந்து பாடும் இந்த பாடல், நம் நாட்டு மக்களின் உணர்ச்சி உணர்வு மற்றும் ஒற்றுமையின் பிரகடனமாக இருந்து வருகிறது. அது என்றும் அவ்வாறே நிலைத்திருக்கும். சுதந்திரத்திற்குப் பிறகு, இதனை தேசிய பாடலாக நமது நாடு மரியாதையுடன் ஏற்றுக்கொண்டது. இந்த பாடலின் 150-வது ஆண்டு நிறைவை கொண்டாடும் சமயத்தில், நாட்டு மக்களாகிய நாம் அனைவரும், இந்த பாடலின் அர்த்தத்திற்கு ஏற்ப, இந்தியாவை வளமாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்திருப்போம் என்று உறுதிமொழி எடுப்போம். வந்தே மாதரம்!”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.