Shubman Gill: இந்திய அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் துணை கேப்டன் சுப்மன் கில் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை. முடிவடைந்த 4 போட்டிகளிலும் விளையாடிய இவர் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. மழை காரணமாக ரத்தான முதல் போட்டியில் 37*, இரண்டாவது போட்டியில் 5, மூன்றாவது போட்டியில் 15 மற்றும் நான்காவது போட்டியில் 46 ரன்கள் மட்டுமே அடித்திருக்கிறார். ஸ்ட்ரைக் ரைட்டும் மோசமாகவே உள்ளது.
Add Zee News as a Preferred Source
டி20 உலகக் கோப்பையில் கில் விளையாடுவது சந்தேகம்
இந்த நிலையில், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சுப்மன் கில் பேட்டிங்கில் தடுமாறினால், வர இருக்கும் டி20 உலகக் கோப்பையில் அவர் விளையாடுவது சந்தேகத்திற்குரியதுதான் என முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். சிது தொடர்பாக பேசிய அவர், இந்திய அணியின் தொடக்க வீரராக சஞ்சு சாம்சன் மட்டும் விளையாடி இருந்தால் எவ்வித குழப்பமும் இருந்திருக்காது. சுப்மன் கில் அனைத்து போட்டிகளில் விளையாடி வருவதால், சஞ்சு சாம்சன் ஓரங்கட்டப்பட்டுள்ளார்.
தற்போது ஜிதேஷ் சர்மாவை 5வது அல்லது 6வது இடத்தில் பயன்படுத்துகிறார்கள். இதன் காரணமாக அந்த இடமும் சஞ்சு சாம்சனுக்கு கிடைக்காமல் போய்விட்டது. எதிர்கால டி20 கேப்டனாக சுப்மன் கில்லை பிசிசிஐ தேர்வு செய்திருப்பதால், சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்காமல் போய்விட்டது. ஆனால் சஞ்சு சாம்சனின் ஸ்ட்ரைக் ரேட் 150 என்ற அளவில் வைத்திருக்கிறார். கில் நல்ல வீரர் இல்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவரை தேவையில்லாமல் இந்திய டி20 அணியில் ஆதரிக்கின்றனர். ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடினாலும் டி20 கிரிக்கெட்டில் தனது சிறந்த பேட்டிங்கை தேடி வருகிறார்.
தெளிவான முடிவு கிடைத்துவிடும்
இதுவரை டி20 கிரிக்கெட்டில் கில் பெரிய இன்னிங்ஸ் ஒன்றும் ஆடிவிடவில்லை. டி20 உலக கோப்பைக்கு முன்பாக ஆட்டநாயகன், தொடர் நாயகன் விருது வாங்கும் அளவிற்கு அவரது செயல்பாடுகள் இருக்க வேண்டும். அவர் சிறப்பாக விளையாடினால் யாரும் சஞ்சு சாம்சன் மற்றும் ஜெய்ஸ்வால் குறித்து பேசப்போவதில்லை. ஒருவேளை தென்னாப்பிரிக்கா தொடரில் கில்லுக்கு ஓய்வு அளிக்கப்பட்டால், தொடக்க வீரராக ஜெய்ஸ்வால் அல்லது சஞ்சு சாம்சன் களமிறங்குவார்கள். அதன் பின் நமக்கு ஒரு தெளிவான முடிவு கிடைத்துவிடும் என முகமது கையிப் தெரிவித்துள்ளார்.
About the Author
R Balaji