பைசன்: “பொழுதுபோக்கு படமல்ல; போற்றிக் கொண்டாட வேண்டிய சீர்திருத்தப் பாடம்" – சீமான்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், பா. ரஞ்சித் உள்ளிட்டோர் தயாரிப்பில், துருவ் விக்ரம், பசுபதி, அமீர், லால், ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன், அருவி மதன் உள்ளிட்டோர் நடிப்பில் தீபாவளி வெளியீடாக கடந்த அக்டோபர் 17-ம் தேதி பைசன் திரைப்படம் வெளியாகியிருந்தது.

இத்திரைப்படம், வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று படக்குழுவினருக்கு வெற்றிப்படமாக அமைந்தது.

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “பைசன் (எ) காளமாடன்! – பொழுதுபோக்கு படமல்ல; போற்றிக் கொண்டாட வேண்டிய சீர்திருத்தப் பாடம்!” என்று பாராட்டி எக்ஸ் தளத்தில் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

பைசன் காளமாடன்
பைசன் காளமாடன்

அந்த அறிக்கையில் சீமான், “’பைசன்’ (BISON) திரைப்படத்தைச் சிறப்புக்காட்சியில் கண்டு களித்தேன். கோயில் திருவிழாவிற்குச் சென்று வந்த குழந்தையின் உற்சாகம் படத்தைப் பார்த்து முடிக்கும்போதும் மனதில் தொற்றிக்கொண்டது.

ஒரு திரைப்படம் நம் கண் முன் ஓடிக்கொண்டிருக்கிறது என்ற உணர்வே எனக்கு வரவில்லை. நம்முடன் வாழும் சக மனிதர்களின் வாழ்வியலாகவே கதைக்களம் முழுவதும் மனம் ஒன்றிப்போனது.

அந்த அளவிற்கு ஆகச் சிறந்த திரைப்படைப்பை தம்பி மாரி செல்வராஜ் படைத்து அளித்துள்ளார்.

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை எனத் தன்னுடைய ஒவ்வொரு திரைக்காவியங்களிலும் அடுத்தடுத்த எல்லையைத் தொடும் தம்பியின் கலைத்திறன் இப்படத்தில் மேலும் மெருகேறியுள்ளது.

மாரி செல்வராஜின் வலி தோய்ந்த வார்த்தைகள்தான் படத்தின் உரையாடல்களாக வெளிப்பட்டுள்ளது.

“நான் பிறக்கிறதுக்கு முன்னாடியே என் மீது பழியும், பகையும் சுமத்தப்பட்டிருக்கிற இந்தச் சூழல எப்படி சார் புரிஞ்சிக்கறது?” என்பதாகட்டும்,

“வேலிய உடைக்கிறது மட்டுமல்ல, வேலியே போட முடியாத உயரத்திற்கு உயர்வதும் புரட்சிதான்!” என்பதாகட்டும்,

“உங்களுக்கும் எனக்கும் பாகிஸ்தான ஜெயிக்கனும்கிறதுதான் சார் இலக்கு; அவனுக்கு மட்டும்தான் உங்களையும், என்னையும் நம்ம எல்லோரையும் சேர்த்து ஜெயிக்கனுங்கிற வெறி இருக்கு; அவன்தான் சார் விளையாடனும்” என்பதாகட்டும், சிந்திக்க வைக்கும் அழுத்தமான உரையாடல்கள் ஒவ்வொன்றுமே காலம் கடந்தும் நிற்கும் தத்துவங்களாக உள்ளத்தில் ஊடுருவி சிந்தனைப் புரட்சிக்கு வித்திடுகிறது.

சீமான்
சீமான்

கனமான கதாபாத்திரத்தை ஏற்று கதையின் நாயகனாக நடித்திருக்கும் துருவ் விக்ரம், நடித்துள்ளார் என்பதை விட வனத்தி கிட்டானாகவே வாழ்ந்துள்ளார்.

அந்த அளவிற்கு தம் முந்தைய படங்களை விடவும் பன்மடங்கு கூடுதல் ஒப்படைப்புடன் ஏற்ற பாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார்.

ஒவ்வொரு படத்திற்கும் உடல் அளவிலும், உணர்வு அளவிலும் தந்தை விக்ரம் எந்த அளவிற்குக் கடினமான உழைப்பைச் செலுத்துவாரோ அதே அளவிற்குக் கடின உழைப்பை துருவின் நடிப்பில் காண்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

பைசன் திரைப்படம் துருவின் ரசிகனாகவே என்னை மாற்றிவிட்டது.

சாதிய மோதல்கள் நடக்கும் சமூகத்தில் தான் பெற்ற பிள்ளைகளைக் காக்க துடிக்கும் ஒரு தந்தையின் வலி மிகுந்த வாழ்வினை தம் அசாத்திய நடிப்பால் நம் கண் முன்னே கொண்டுவந்து கலங்கச் செய்துள்ளார் அன்புச்சகோதரர் பசுபதி.

அவரைப்போலவே படத்தின் முதன்மை கதாபாத்திரங்களை மிகச் சிறப்பாகச் செய்து, உயிரோட்டமாக நடித்திருக்கும் அன்புத்தம்பி அமீர் மற்றும் லால், படம் முழுதும் விளையாட்டு வாத்தியாராக வலம் வரும் அருவி மதன் உள்ளிட்ட அனைவருமே தங்களுடைய நடிப்புத்திறனை முழுமையாக வெளிப்படுத்தி, படத்தின் வெற்றிக்கு பெரும் பங்காற்றியுள்ளனர்.

படத்தின் நாயகியாக காதலை வெல்ல வைக்கப் போராடும் அனுபமா பரமேஸ்வரனும், நாயகனின் அக்காவாக தம்பியை வெல்ல வைக்க வாதாடும் ரஜிஷா விஜயனும் போட்டிப்போட்டு சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.

அவர்களைப்போலவே உண்மையான கபடி வீரரான பிரபஞ்சன், அழகம் பெருமாள், ரேகா நாயர் உள்ளிட்ட அனைவருமே நடிப்புத்திறனால் படத்தைத் தாங்கிப் பிடிக்கின்றனர்.

பைசன் காளமாடன்
பைசன் காளமாடன்

தீக்கொளுத்தி, இரெக்க இரெக்க, காளமாடன் கானம் உள்ளிட்ட மாரி செல்வராஜின் வலி தோய்ந்த பாடல் வரிகளுக்கும் தம் இசையால் உயிர் கொடுத்து உருக வைத்துள்ளார் நிவாஸ் பிரசன்னா.

காட்சிக்குக் காட்சி பரபரப்பைக் கூட்டும் எழில் அரசுவின் ஒளிப்பதிவும், சக்தி திருவின் படத்தொகுப்பும், குமார் கங்கப்பனின் கலை இயக்கமும் உணர்வுப்பூர்வமான காட்சிகள் மூலம் நம்மை ஒன்றச்செய்து இருக்கையோடு கட்டிப்போடுகின்றது.

அதிரடி சண்டைக் காட்சிகள் அழகாகப் படமாக்கப்பட்டு படத்திற்குக் கூடுதல் பலம் சேர்க்கிறது.

அனைவரும் ரசிக்கத்தக்க வகையில் தம்முடைய வலி மிகுந்த வாழ்வியலைக் கலைப்படைப்பாகத் தரும் மாரிசெல்வராஜின் அளப்பரிய திரைக்கதை சொல்லும் திறன் வியக்க வைக்கிறது.

“ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு மனம் இருக்கிறது. அதில் சில நல்ல குணங்களும் இருக்கத்தான் செய்கின்றன” என்பதை பைசன் படத்தின் வழியே வெளிக்காட்டியதன் மூலம் தம் படைப்புக்கு மிகப்பெரிய நேர்மையைச் செய்துள்ளார்.

உலகில் உள்ள பல விளையாட்டுகள் ஒருவர் கை மற்றவர் மீது பட்டுவிட்டால் ஆட்டத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற கட்டுப்பாட்டை விதித்துள்ளது.

ஆனால், எங்கள் தமிழின முன்னோர்கள் கண்டுபிடித்த கபடி விளையாட்டுதான் ஆகச்சிறந்த மூச்சுப் பயிற்சியாக உடலுக்குப் பெருநன்மை செய்வதோடு மட்டுமின்றி, எதிரணி வீரரைத் தொடுவதன் மூலமும், காலைப்பிடித்து, கட்டியணைத்து தடுப்பதன் மூலமும் வெற்றிக்கான புள்ளிகளைப் பெறமுடியும் என்ற விதிகளை வகுத்ததது, தொடக்கூடாது, பார்க்கக்கூடாது என்ற சமூகச் சாதியக் கொடுமைகளுக்கு எதிரான புரட்சிகர சிந்தனைதான் என்பது தமிழர்கள் நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டிய பண்பாட்டு விழுமியமாகும்.

அன்புமகன் துருவ் விக்ரம் உள்ளிட்ட பைசன் திரைப்படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!” என்று வாழ்த்தியிருக்கிறார்.

சீமானின் இந்தப் பாராட்டைத் தொடர்ந்து, “என் எல்லா திரைப்படங்களையும் தொடர்ந்து கவனித்து என்னை ஊக்கப்படுத்தும் உங்களின் அத்தனை சொல்லிற்கும் அன்பிற்கும் என் நன்றியும் பிரியமும் அண்ணா” என்று மாரி செல்வராஜ் ட்வீட் செய்திருக்கிறார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.