Aaromaley Review: 90ஸ் கிட்ஸின் காதலும், மேட்ரிமோனியின் மறுபக்கமும்! எமோஷன் எடுபடுகிறதா?

கௌதம் மேனன் படங்களின் மீது கொண்ட மோகத்தில் காதலித்தே தீர வேண்டும் என்று பதின்ம பருவத்திலேயே முடிவெடுக்கிறான் அஜித் (கிஷன் தாஸ்). ஆனால் பள்ளி, கல்லூரி என ஒவ்வொரு காலகட்டத்திலும் காதல்கள் சொதப்புகின்றன.

இதில் ஒரு காதல் அவனை காவல் நிலையம் வரை கொண்டு செல்ல, பெற்றோரின் கண்டிப்பினால் மேட்ரிமோனி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்கிறான்.

ஆரோமலே விமர்சனம் | Aaromale Review
ஆரோமலே விமர்சனம் | Aaromale Review

அங்கே காதலை லட்சியமாகக் கொண்ட அஜித், திருமணத்தைத் தொழிலாக மட்டுமே திறமையாகச் செய்து வைக்கும் சீனியர் மேனேஜர் அஞ்சலியைச் சந்திக்கிறான். இதன் பின்னர் அவர்கள் வாழ்வில் என்ன நடக்கிறது என்பதே ‘ஆரோமலே’ படத்தின் கதை.

மூன்று பருவங்களிலும் காமெடி, எமோஷன் என எந்த உணர்வுகளையும் திணிக்காமல், இயல்பான உடல்மொழியைச் சமநிலையாகக் கடத்தியிருக்கிறார் கிஷன் தாஸ். ரொமாண்டிக் மட்டுமல்ல ‘பாய் நெக்ஸ்ட் டோர்’ பாத்திரத்திற்கும் சரிப்பட்டு வருவேன் என்கிறது அவரது நடிப்பு.

‘கடமையே கண்’ என்று வரும் நாயகி ஷிவாத்மிகா ராஜசேகர் ‘சிடு மூஞ்சி மேனேஜராக’ ஒரு பக்கம் ஸ்கோர் செய்ய, “என் வாழ்க்கையை நானே சரி செய்வேன்” என்று உறுதியாகப் பேசுமிடத்தில் முதிர்ச்சியான நடிப்பையும் கொடுத்திருக்கிறார்.

ஆரோமலே விமர்சனம் | Aaromale Review
ஆரோமலே விமர்சனம் | Aaromale Review

இருவருக்கும் இடையிலான உறவு வளர்வதற்கான வைக்கப்பட்ட காட்சிகள் கியூட் மாண்டேஜ்கள்.

சச்சினாக, தான் வருகின்ற காட்சிகளில் எல்லாம் சிரிப்பு சத்தத்தைச் சேர்த்தே கொண்டுவந்து சிக்ஸர் அடித்திருக்கிறார் ஹர்ஷத் கான். டைமிங்கில் அவர் போடும் ஒன்லைனர்ஸ் கலகல! நீண்ட வசனமாக வரும் இரண்டாம் பாதியின் முக்கிய இடத்தைக் காப்பாற்றுகிறார் கிஷன் தாஸின் அம்மாவாக வரும் துளசி. 

மற்றுமொரு முக்கிய கதாபாத்திரத்தில் வரும் விடிவி கணேஷ் காமெடியில் நியாயம் செய்தாலும், எமோஷன் காட்சிகளில் சற்றே தடுமாறியிருக்கிறார். சந்தானபாரதி, ஸ்டில்ஸ் பாண்டியன் ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரத்தைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.

கௌதம் ராஜேந்திரனின் ஒளிப்பதிவு ‘யூத் வைப்’பை படம் முழுக்க தக்க வைக்கிறது. காட்சி கோணங்களும், ஒளியும், நிறமும் படத்தின் தரத்தை உயர்த்துகின்றன. இருப்பினும் டீஜே அருணாசலம் வருகிற பிளாஷ்பேக் காட்சிகள் உயர்ரக விளம்பரம் போலப் படத்தோடு ஒட்டாத உணர்வினைக் கொடுத்தது துருத்தல்.

சித்து குமாரின் பின்னணி இசை படத்துக்குத் தேவையான உணர்வினைத் தக்கவைக்கிறது; பாடல்களும் ஸ்கோரும் கதையைத் தொந்தரவு செய்யவில்லை. முதல் பாதி இலகுவாக, வேகமாகச் செல்ல, இரண்டாம் பாதியின் நீளம் மலை ஏறுகிறது. அதில் படத்தொகுப்பாளர் பிரவீன் ஆண்டனி சற்றே கத்தரி போட்டிருக்கலாம்.

ஆரோமலே விமர்சனம் | Aaromale Review
ஆரோமலே விமர்சனம் | Aaromale Review

‘மேரேஜ் மெட்ரிமோனி’ என்ற புதுமையான இடத்தில் கதைக்களத்தை அமைத்து, அதில் சிறப்பான ஸ்டேஜிங், புத்துணர்ச்சியான விஷுவல் ஸ்டைலோடு என்ட்ரி கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் சாரங் தியாகு. ஆரம்ப காட்சிகள் முடிந்ததும், மேட்ரிமோனி அலுவலகத்துக்குள் அஜித் நுழைய சுவாரஸ்யமடைகிறது திரைக்கதை.

ஒரு ரொமாண்டிக் பையன் ‘அரேஞ்டு மேரேஜ்’ அலுவலகத்தில் வேலை செய்தால் என்ன நடக்கும் என்கிற எழுத்து புதுசு! அதில் ‘மயூர்’, ‘நிறுவனர் சந்தானபாரதி’ எனச் சில கதாபாத்திரங்களைச் சேர்த்து ரசிக்க வைத்திருக்கிறார்கள்.

அதேபோல துணைக்கதையாக வரும் தந்தை – மகன் உறவுக்கு ஆழம் சேர்க்கிறது அம்மா துளசி சொல்லும் பிளாஷ்பேக்! அதுவே ஒரு சிறுகதையின் நயத்தில் நீள்வது, அதே கதை மகனுக்கும் தற்போது நடப்பது நல்லதொரு ஹைக்கூ! நாயகியின் பிளாஷ்பேக்கை நீட்டிச் சொல்லாமல், நாயகனின் அம்மாவுக்குப் பின்கதை அமைத்ததும் பாராட்டத்தக்கது.

இரண்டாம் பாதியில், முதிர்ச்சியை வெளிப்படுத்தும் அஞ்சலியின் ‘பவுண்டரி’ வசனங்கள் கைதட்டல் வாங்குகின்றன. ஆனால், காமெடிக்கு வாங்கிய ஹார்ட்டின்கள் எமோஷன் காட்சிகளில் சற்றே மிஸ்ஸிங்! குறிப்பாகக் கிளைக்கதையாக வரும் மற்றொரு காதலைச் சேர்க்கும் விதம், விடிவி கணேஷ் திருமணம் ஆகியவற்றில் இன்னுமே ஆழம் இருந்திருக்கலாம்.

ஆரோமலே விமர்சனம் | Aaromale Review
ஆரோமலே விமர்சனம் | Aaromale Review

அதே போல, படத்தின் ஆரம்பத்திலும், இடையிலும் ஆங்காங்கே எட்டிப் பார்க்கும் கௌதம் மேனன் (ஹேங்கோவர்) அழகியலைச் சற்றே தவிர்த்திருக்கலாம். சிம்புவின் வாய்ஸ்ஓவரும் ஓவர்டோஸ் பாஸ்! அதே பாணியில் இடைவேளைக்குப் பிறகு காட்சிகளைக் குறைத்து உரையாடலை அதிகப்படுத்தியிருப்பதும் சற்றே அயர்ச்சியடையச் செய்கிறது.

இறுதிக் காட்சி எதை நோக்கிப் பயணிக்கிறது என்பதையும் எளிதாகக் கணிக்க முடிகிறது. இதில் நாயகியின் மனமாற்றத்துக்கு வலுவான காரணம் இல்லாததும் ஏமாற்றமே!

ஆனாலும், ‘காதலுக்கு முதிர்ச்சி வேண்டும்’ என்பதை ஜாலியாகவும், புதுமையான கதைக்களத்திலும் சொல்லியிருக்கும் இந்த ‘ஆரோமலே’-க்கு ஹார்ட்டின்களைப் பறக்கவிடலாம்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.