Gouri Kishan: “தோற்றத்தைக் குறிவைக்கும் கேள்விகள் எந்தச் சூழலிலும் தவறானவை" – கௌரி கிஷன் அறிக்கை

கோலிவுட்டில் நடிகை கெளரி கிஷன் விவகாரம் பெரும் பேசுபொருளாகியிருக்கிறது. அவர் நடித்திருக்கும் ‘அதர்ஸ்’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.

அப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் நிருபர் ஒருவர் அப்படத்தின் ஹீரோவிடம் கெளரி கிஷனின் உடல் எடை குறித்தான கேள்வியை எழுப்பியிருந்தார். அதைத்தொடர்ந்து, ‘செய்தியாளர் சந்திப்பில் இப்படியான உருவக் கேலி கேள்விகளை எழுப்புவது தவறு’ என நேர்காணல்களில் கெளரி கிஷன் பேசியிருந்தார்.

 Gouri Kishan
Gouri Kishan

அதனைத் தொடர்ந்து ரிலீஸுக்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பில், கேள்விக்கேட்ட அந்த நிருபரிடம் கெளரி கிஷன், “நீங்க எப்படி அதைக் கேட்கலாம். அதைத் தெரிஞ்சி என்ன பண்ண போறீங்க. இது முழுக்க முழுக்க பாடி ஷேமிங்” எனத் தக்கப் பதிலடி கொடுத்திருந்தார்.

இதைத் தொடர்ந்து கெளரி கிஷனுக்கு திரைத்துறையினர் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக தற்போது கெளரி கிஷன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில், “இந்த வார தொடக்கத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், எனக்கும் ஒரு யூடியூபருக்கும் இடையே எதிர்பாராத விதமாக பதற்றமான உரையாடல் நடந்தது.

இதன் பின்னணியில் உள்ள பெரிய பிரச்னையை ஒப்புக்கொள்வது முக்கியம் என்று நினைக்கிறேன். அதன்மூலம் கலைஞர்களுக்கும் ஊடகங்களுக்கும் இடையே எத்தகைய உறவை ஊக்குவிக்க விரும்புகிறோம் என்பதை நாம் அனைவரும் சேர்ந்து சிந்திக்க முடியும்.

 Gouri Kishan
Gouri Kishan

விமர்சனம் ஒரு பகுதி என்பதைப் புரிந்துகொள்கிறேன். ஆனால், ஒருவரின் உடல் அல்லது தோற்றத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ குறிவைக்கும் கருத்துகள் அல்லது கேள்விகள் எந்தச் சூழலிலும் தவறானவை.

நான் நடித்த படத்தைப் பற்றிய கேள்விகளைக் கேட்டிருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதே ஆக்ரோஷமான தொனியில் ஒரு ஆண் நடிகரிடம் இதே கேள்வியைக் கேட்பார்களா என்ற கேள்வி எனக்கு எழுகிறது.

கடினமான சூழலில் என் நிலைபாட்டில் நான் உறுதியாக நின்றதற்காக நான் பெருமைப்படுகிறேன். இது எனக்கு மட்டுமல்ல, இதே போன்ற அனுபவத்தை எதிர்கொண்ட யாருக்கும் முக்கியமானது.

இது புதிதல்ல, ஆனால் இது இன்னும் நிலவுகிறது. இப்படி உணர்ந்த யாருக்கும் இது ஒரு நினைவூட்டலாக இருக்கும் என்று நம்புகிறேன்.

நமது அசௌகரியத்தை வெளிப்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளோம், தவறு செய்யப்பட்டால் கேள்வி கேட்க அனுமதிக்கப்பட்டுள்ளோம்.

நான் பெற்ற அனைத்து ஆதரவுக்கும் ஆழ்ந்த நன்றி. சென்னை பிரஸ் கிளப், அம்மா சங்கம் (மலையாள திரைப்பட நடிகர் சங்கம்), தென்னிந்திய நடிகர் சங்கம் ஆகியவற்றின் அறிக்கைகளுக்கு நன்றி.

ஊடகங்கள், பத்திரிகை, பொதுமக்களின் அசைக்க முடியாத ஆதரவுக்கு நன்றி. என்னுடன் தொடர்பு கொண்டு ஒற்றுமையாக நின்ற துறையில் உள்ள அனைவருக்கும் என் சமகாலத்தவர்கள், சக ஊழியர்கள், நண்பர்களுக்கும், நன்றி” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.