தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் (TFPC), பெரிய பட்ஜெட் படங்களில் நாயகன் மற்றும் முக்கிய படக்குழு உறுப்பினர்கள் வருவாய் பகிர்வு முறையில் மட்டுமே பணியாற்ற வேண்டுமென்றும் திரைப்படத்திலிருந்து வரும் லாபம் மற்றும் நஷ்டத்தை தயாரிப்பாளருடன் பகிர வேண்டுமென்றும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
சென்னை எழும்பூரில் ஞாயிறு அன்று (நவ. 7) நடைபெற்ற பொதுக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இன்று மொத்தமாக 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தயாரிப்பாளர்களுக்கு திரையரங்குகளில் இருந்து வரும் வருமானம் குறைந்துள்ளதாகவும் ஓடிடி மற்றும் செயற்கைகோள் உரிமை வியாபாரமும் நிதி அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவற்றை நிவர்த்தி செய்யவே இந்தக் கூட்டம் கூட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கூட்டத்தைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட பத்திரிகை செய்தியில், ஓடிடி ரீலீஸ் குறித்து எடுக்கப்பட்ட முடிவுகள் தெரிவுபடுத்தப்பட்டன. பெரிய நடிகர்களின் படங்கள் 8 வாரத்துக்குப் பிறகும் நடுத்தர நடிகர்களின் படங்கள் 6 வாரங்களுக்குப் பிறகும் சிறிய படங்கள் 4 வாரங்களுக்குப் பிறகும் ஓடிடியில் வெளியிடலாம் என விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது.
சிறிய படங்களுக்கு திரையரங்கங்கள் கிடைப்பதை உறுதி செய்ய திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளைக் கொண்ட திரைப்பட வெளியீட்டு ஒழுங்குமுறைக் குழுவை அமைக்க TFPC திட்டமிட்டுள்ளது.

டிஜிட்டல் புராஜெக்ட்டுகளுக்கு அதிகப்படியான விளம்பரம் செய்யப்படுவது ரசிகர்களுக்கு சினிமாவின் மீதான ஆர்வத்தைக் குறைத்துவிடக் கூடும் எனக் கருதும் தயாரிப்பாளர் சங்கம், நடிகர்களும், இயக்குநர்களும், முன்னணி தொழில்நுட்ப வல்லுநர்களும் வெப் சீரிஸ்களைவிட திரைப்படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதுதான் தொழில்துறை சூழலை ஆரோக்கியமானதாக வைத்திருக்கும் எனக் கோரியுள்ளது.
தீர்மானங்களைப் பின்பற்றாதவர்களுடன் ஒத்துழைப்பதை சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்கள் நிறுத்த வேண்டுமென்றும், திரையரங்க உரிமையாளர்கள் அவர்களின் படங்களைத் திரையிடுவதைத் தவிர்க்க வேண்டுமென்றும் கோரியிருக்கிறது.
TFPC உடன், தென்னிந்திய கலைஞர்கள் சங்கம் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் ஆகியவை, “திரைப்பட விமர்சனம் என்ற சாக்கில் எல்லை மீறும்” யூடியூப் சேனல்களுக்கு எதிராக சட்டப்பூர்வமாகவும் துறைரீதியிலாகவும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளன.
அத்துடன் விருது விழா மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடத்தும் தனியார் அமைப்புகள் TFPC மற்றும் தென்னிந்திய திரைக்கலைஞர்கள் சங்கத்திடம் முன்னனுமதி பெற வேண்டும் என்றும் விதிமுறை வகுத்துள்ளது. அனுமதி பெறாமல் நிகழ்ச்சி நடத்தப்பட்டால் சட்டப்படியும் தொழில்துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.