தரவு, திரை, மனநிலை – நவீன தேர்தல் யுக்தியின் மூன்று முகங்கள் செயல்படுவது எப்படி?

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

இந்திய அரசியலில் தேர்தல் என்பது வெறும் வாக்குப்பதிவு நிகழ்ச்சி அல்ல; அது ஒரு ஜனநாயகப்பூர்வமான அறிவியல் போர் போல மாறிவிட்டது.

ஒருகாலத்தில் மாநாடு, பொதுகூட்டங்கள், கைதட்டல்கள், சுவரில் போஸ்டர்கள், மற்றும் வாய்மொழி பிரசாரம் தான் தேர்தல் யுக்தியின் அடிப்படை கருவிகள். ஆனால் இன்று தேர்தல் என்பது தகவல், மனநிலை, மற்றும் தரவு எனும் மூன்று முகங்களால் இயக்கப்படும் புதிய அரசியல் நுணுக்க விளையாட்டு ஆகிவிட்டது.

இந்த மூன்றும் ,

  • அடித்தள இயக்கம் (Grassroots Mobilization),

  • தகவல் அரசியல் (Data Politics),

  • வாக்காளர் மனநிலை பொறிமுறை (Voter Behaviour Engineering)

நவீன தேர்தல் யுகத்தின் யுக்திகளின் மையக் கூறுகளாக விளங்குகின்றன.

அடித்தள இயக்கம் (Grassroots Mobilization)

அடித்தள இயக்கம் என்பது கட்சியின் வாக்காளர் அடிப்படைக்கு ஆதாரத்தை நிலைநிறுத்தி வளர்க்கும் உயிரணு ஆகும்.

தேர்தல் களப்பணிகள் முந்தைய தலைமுறையை விட பல மடங்கு நுட்பமானவை. ஒரு நல்ல அடித்தள அமைப்பு இல்லாமல் எந்த பிரமாண்ட தேர்தல் பிரசாரமும் வெற்றி பெறாது.

இதன் நோக்கம் “ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு வாக்காளரிடமும்” கட்சியின் சிந்தனையை கொண்டு செல்வதாகும்.

இதில் முக்கிய பங்காற்றுவது வாக்குச்சாவடி அளவிலான நெட்வொர்க் அமைப்பு.

ஒவ்வொரு தொகுதியும் சிறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, தன்னார்வலர்கள் மக்கள் பிரச்சினைகளை கேட்டறிந்து, அதை அரசியல் மொழியாக மாற்றுகிறார்கள். இதைச் சில கட்சிகள் “பூத் கமிட்டி மாடல்” என அழைக்கின்றன.

பல  மாநில கட்சிகள் இதனை நீண்ட காலமாகப் பயன்படுத்தி வருகின்றன. சில தேசிய கட்சிகள் இதனை செயற்கை நுண்ணறிவு, ஆப் முறை இணைப்பு, டிஜிட்டல் பிரச்சாரம் ஆகியவற்றோடு கலந்துவிட்டன.

இன்றைய அடித்தள இயக்கம் என்பது வெறும் வீடு வீடாகச் செல்வது அல்ல, முன்னர் வீடு வீடாகச் செல்வதே பிரசாரம் எனக் கருதப்பட்டது.

இன்று மொபைல் திரைதான் புதிய வீடு. ஒரு சமூக வலைதள குழு கூட வாக்காளரின் மனதை மாற்றும் அளவுக்கு முக்கியமடைந்துள்ளது. அடித்தளம் இப்போது தெருவில் மட்டுமல்ல, திரையிலும் உள்ளது.

தகவல் அரசியல் (Data Politics)

இரண்டாவதாக,  “யார் வாக்களிக்கிறார்?” என்பது இன்று மிகப் பெரிய கேள்வி அல்ல; “ஏன் அவர் வாக்களிக்கிறார்?” என்பதே முக்கியம்.

அதற்கான விடையை வழங்குவது தான் தகவல் அரசியல். தேர்தல் காலத்தில் பெரிய தரவு (Big Data) மையங்கள் கட்சிகளின் ரகசிய ஆயுதமாக மாறியுள்ளன. வாக்காளர் பட்டியல்கள், சமூக ஊடகப் பழக்கங்கள், மதம், சாதி, வயது, கல்வி, பாலினம், வருமான நிலை போன்ற அனைத்தும் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன.

இதன் மூலம் ஒவ்வொரு வாக்காளருக்கும் தனிப்பட்ட அரசியல் செய்தி உருவாக்கப்படுகிறது. இது “மைக்ரோ டார்கெட்டிங்” என்று அழைக்கப்படும் முறை. உதாரணமாக, நகர்ப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, கிராமப்புற விவசாயிகளுக்கு மானியம், பெண்களுக்கு பாதுகாப்பு என தனித்தனி பிரச்சாரங்கள் நடத்தப்படுகின்றன.

பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா விவகாரம் முதல் இந்திய தேர்தல் வரை, தகவல் அரசியல் இன்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையம் கூட இப்போது சமூக ஊடக கண்காணிப்பை தனித்த பிரிவாக அமைத்துள்ளது என்பது இதன் ஆழத்தைக் காட்டுகிறது.

தேர்தல்
தேர்தல்

வாக்காளர் மனநிலை பொறிமுறை

மூன்றாவது முகம் மிகவும் ஆபத்தானதுமான நுண்ணறிவு — மனநிலை பொறிமுறை. இதன் நோக்கம் நேரடி பிரச்சாரத்தை விட வாக்காளரின் மனதில் “உணர்ச்சிப் பதில்” உருவாக்குவது.

இதற்காக மீம் கலாசாரம், உணர்ச்சிப் பூர்வமான வீடியோ,  பேச்சுகள், அனுபவப் பிரச்சாரம் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன.

இளைஞர்களை ஈர்க்க சமூக ஊடகத்தில் ஹாஷ்டேக் இயக்கங்கள் நடத்தப்படுகின்றன; முதியோர்களை பாதிக்க உணர்ச்சிவசப்படுத்தும் கதைகள் பரப்பப்படுகின்றன. சில கட்சிகள் மனநிலை ஆராய்ச்சி நிபுணர்களின் ஆலோசனையுடன் பிரச்சார மொழியை உருவாக்குகின்றன.

எந்த வார்த்தை அதிக தாக்கம் ஏற்படுத்தும், எந்த முகம் நம்பிக்கையளிக்கும் என்பதெல்லாம் ஆராயப்படுகிறது.
இதுவே “வாக்காளர் பொறிமுறை” எனப்படும் புதிய அரசியல் மனவியல்.

இன்று ஒரு தலைவரின் சொல் மட்டும் போதாது; அவரது முகபாவனை, குரல், உடை, மற்றும் சமூக ஊடக ஆளுமை எல்லாம் வாக்கின் முடிவை தீர்மானிக்கிறது.

பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025
பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025

நவீன தேர்தல் யுக்தி என்பது வெறும் அரசியல் களமல்ல — அது அடித்தள இயக்கம், தரவு,  மற்றும் மனநிலை எனும் மூன்று பரிமாணங்களின் இணைப்பு. இதன் மூலம் ஒரு கட்சி வெற்றி பெறுவது மட்டுமல்ல; சமூகத்தின் சிந்தனையும் மாறுகிறது.

அதனால் தேர்தல் யுக்தி இன்று ஜனநாயகத்தின் “மூளை நரம்பு மையம்” (செயல்தளமாக உருமாற்றமடைந்துள்ளது” ஆகிவிட்டது.

நாளைய தேர்தல்கள் வெல்லப் போவது பெரிய கூட்டங்கள் அல்ல — பெரிய தரவு, நுண்ணறிவு பிரச்சாரம், மற்றும் மனநிலை பொறிமுறை தான்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.