பாட்னா: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி சீதாமரி, பெத்தியா நகரங்களில் பிரதமர் மோடி நேற்று பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது: கடந்த 6-ம் தேதி நடைபெற்ற பிஹார் முதல்கட்ட தேர்தலில் பெண்கள், இளைஞர்கள் பெரும் எண்ணிக்கையில் திரண்டு வந்து வாக்களித்தனர். ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (என்டிஏ) ஆதரவாக அவர்கள் வாக்களித்து இருப்பதாக பரவலாக பேசப்படுகிறது. இதன்மூலம் காட்டாட்சி (ஆர்ஜேடி) நபர்களுக்கு 65 வால்ட் மின் அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.
ஆர்ஜேடி தேர்தல் பிரச்சாரத்தில் சிறுவர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இந்த சிறுவர்களை, ரவுடிகளாக உருவாக்க ஆர்ஜேடி விரும்புகிறது. இதை ஒருபோதும் அனுமதிக்க மட்டோம். பிஹாரை சேர்ந்த சிறுவர், சிறுமியர் எதிர்காலத்தில் இன்ஜினீயர்களாக, மருத்துவர்களாக, வழக்கறிஞர்களாக, நீதிபதிகளாக உருவெடுக்க வேண்டும்.
அதற்காக தேசிய ஜனநாயக கூட்டணி அயராது பாடுபட்டு வருகிறது. மாணவர்களுக்கு ஆர்ஜேடி துப்பாக்கிகளை வழங்குகிறது. அதேநேரம் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மாணவ, மாணவியருக்கு மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன. காட்டாட்சி காலத்தில் பிஹார் முழுவதும் வன்முறையும் ஊழலும் கோலோச்சின. அந்த ஆட்சிக் காலத்தில் மாநிலம் பெரும் பின்னடைவை சந்தித்தது. சுமார் 15 ஆண்டு கால காட்டாட்சியில் பிஹாரில் ஒரு ஆலை கூட புதிதாக தொடங்கப்படவில்லை. பெரிய மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் கட்டப்படவில்லை.
பிஹாரில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மாநிலம் அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. புதிய ஆலைகள், பெரிய மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டு வருகின்றன. சில நபர்கள் (ராகுல் காந்தி) பிஹாரின் மீன் உற்பத்தி தொழிலை பார்வையிட வந்துள்ளனர். அவர்கள் குளத்தில் மூழ்கி நீச்சல் அடிக்க பயிற்சி பெற்றுள்ளனர். வரும் தேர்தலில் அவர்கள் முழுமையாக மூழ்க உள்ளனர். அதற்கு அவர்கள் இப்போதே தண்ணீரில் மூழ்கி பயிற்சி செய்து வருகின்றனர்.
பிஹார் மண், அமைதியின் பிறப்பிடம் ஆகும். ஆனால் காட்டாட்சி காலத்தில் இந்த மண் வன்முறை பூமியாக மாற்றப்பட்டது. தற்போது முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் நல்லாட்சி நடைபெறுகிறது. இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் குடும்பத்தை சேர்ந்த ஒருவரும் (ராகுல் காந்தி), பிஹாரின் மிகப்பெரிய ஊழல் குடும்பத்தை சேர்ந்த ஒருவரும் (தேஜஸ்வி யாதவ்) இணைந்து மீண்டும் காட்டாட்சியை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். பிஹாரில் காட்டாட்சி ஏற்பட்டால் சட்டம், ஒழுங்கு சீர்கெடும்.
அனைத்து துறைகளிலும் ஊழல் அதிகரிக்கும். சமூக ஒற்றுமைக்கு ஆபத்து ஏற்படும். வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க பிஹார் மாநிலம் வளர்ச்சி அடைய வேண்டும். அதற்கு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டுகிறேன்.இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.