மலையாள சினிமாவில், ராணுவத்தை மையப்படுத்தியப் படங்களை எடுத்து பரிச்சயமானவர் மேஜர் ரவி. இந்திய ராணுவத்தில் இருந்த இவர் ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றப் பிறகு சினிமாவின் பக்கம் வந்துவிட்டார்.
‘கீர்த்தி சக்ரா’, ‘கந்தகர்’, ‘கர்மயோதா’, ‘1971: பியாண்ட் பார்டர்ஸ்’ உள்ளிட்ட பல படங்களை மோகன்லாலை வைத்து இவர் இயக்கியிருக்கிறார்.
வலதுசாரி சித்தாந்தங்களை பின்பற்றும் இயக்குநர் மேஜர் ரவி தன்னுடைய அடுத்தத் திரைப்படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
ஆப்ரேஷன் சிந்தூரை மையப்படுத்திய அத்திரைப்படத்திற்கு ‘பஹல்காம்’ எனத் தலைப்பிட்டிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து மலையாள சினிமா ரசிகர்கள் பலரும் #BoycottMajorRavi ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகிறார்கள். இத்திரைப்படத்தில் மோகன்லால் நடிக்கவிருக்கிறார் என்ற பேச்சுகளும் இருந்து வருகின்றன.
அதனைத் தொடர்ந்து அவருடைய ரசிகர்களும், மலையாள சினிமா ரசிகர்களும் இந்த ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகிறார்கள்.
தரமற்ற திரைப்படங்களையும், தவறான சித்தாந்தங்கள் கொண்ட திரைப்படங்களை எடுக்கும் மேஜர் ரவி இயக்கத்தில் மோகன்லால் நடிக்கக் கூடாது என்பதே ரசிகர்கள் பலரின் கருத்தாக இருக்கிறது.
‘எல் 2: எம்புரான்’ படத்தின் ரிலீஸ் சமயத்தில் எழுந்த சர்ச்சைக்கு மேஜர் ரவி பேசிய விஷயங்களும் ரசிகர்கள் பலரை கோபமடையச் செய்திருக்கிறது. அத்திரைப்படத்தைப் பார்த்த மேஜர் ரவி முதலில் அத்திரைப்படத்தைப் பாராட்டியிருந்தார்.
பின்பு, இந்துத்துவா அமைப்புகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மேஜர் ரவியும் படத்தின் மீது விமர்சனத்தை முன்வைத்தார்.
இது குறித்து அவர் அப்போது, “மோகன்லால் எப்போதும் தன்னுடைய படங்களின் ப்ரிவியூ காட்சிகளைப் பார்க்கமாட்டார். சர்ச்சையாகி இருக்கும் பகுதிகளை இயக்குநர் படத்தின் ப்ரிவியூ காட்சிக்குப் பிறகு இணைத்திருக்கிறார்.” எனக் கூறியிருந்தார்.
இவரின் இந்த செயல்பாடுகளும் மோகன்லால் ரசிகர்களை அப்போது கடுமையாக கோபமடையச் செய்திருந்தது. இதுவே, இந்த ஹாஷ்டேக் டிரெண்டிற்கு முக்கியமான காரணமாகவும் பார்க்கப்படுகிறது.

மேஜர் ரவியை விமர்சித்து சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் மோகன்லால் ரசிகரொருவர், “லாலேட்டா, நீங்கள் இந்த படத்தில் நடிக்காதீர்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.
உன்னிடமிருந்து இன்னும் நல்ல படங்களைப் பார்க்க விரும்புகிறேன்.
புதிதாக ஏதாவது தேடிப்போங்கள். பழைய குப்பையை அல்ல.” எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.