CSK – RR IPL Trade Latest News: சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணிகளுக்கிடையிலான வீரர் பரிமாற்ற பேச்சுவார்த்தை, தோனியின் எதிர்கால முடிவை மையப்படுத்தி நடைபெறுவதாக முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். இந்தப் பரிமாற்றத் திட்டத்தின் கீழ், சிஎஸ்கே அணி தனது முக்கிய வீரர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரனை ராஜஸ்தான் அணிக்குத் தர, அதற்கு பதிலாக சஞ்சு சாம்சனை அணியில் இணைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்த நடவடிக்கையின் பின்னணியில், தோனியின் ஓய்வு தீர்மானம் மற்றும் எதிர்கால கேப்டன் தயாரிப்பு முக்கிய காரணம் என கைஃப் கூறியுள்ளார்.
Add Zee News as a Preferred Source
தோனியின் அடுத்த கட்டத் திட்டம்
தனது யூடியூப் சேனல் வாயிலாக பேசிய முகமது கைஃப், “இந்த பரிமாற்றம் வெற்றிகரமாக நடந்தால், அது தோனியின் கடைசி ஐபிஎல் சீசனாக இருக்கலாம். சஞ்சு சாம்சன் வரும்போது, அவர் நிர்வாகத்துடனும் தோனியுடனும் எளிதாகச் சேர்ந்து செல்ல முடிந்தால், தோனி சீசனின் நடுவே கூட கேப்டன் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்து விலக வாய்ப்புள்ளது. சிஎஸ்கே ஏன் ஜடேஜாவை விட்டுக்கொடுக்கிறது என்றால், அவர்களுக்கு எதிர்கால கேப்டன் தேவைப்படுகிறது. 2022-ல் ஜடேஜாவிடம் கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டாலும், அது வெற்றிகரமாக முடியவில்லை. தலைமைப் பொறுப்பு அவருக்கு பொருந்தவில்லை என்பதுதான் உண்மை,” என கைஃப் சுட்டிக்காட்டினார்.
திரைக்குப் பின்புலப் பேச்சுவார்த்தைகள்
ரவீந்திர ஜடேஜாவை ராஜஸ்தான் அணிக்குச் செல்லச் சம்மதிக்கச் செய்வதற்காக, அவர் தோனி, தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் ஆகியோருடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. “ஜடேஜாவின் மனநிலையைப் புரிந்து கொள்ள தோனியே நேரடியாக பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார். ஜடேஜா சம்மதித்த பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடங்கின,” என கைஃப் விளக்கினார்.
அவர் மேலும் கூறியதாவது: “சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணியில் இணைவது உறுதி ஆனால், திரைக்குப் பின்னால் பல பேச்சுகள் நடந்திருக்கும். சஞ்சுவும் தோனியுடன் நேரடியாகப் பேசி ‘தோனி பாய், என்ன நினைக்கிறீங்க?’ என்றபடி கலந்துரையாடியிருக்கலாம். சிஎஸ்கே அணியை நடத்துவது தோனிதான். சஞ்சுவை அணிக்குக் கொண்டு வருவது அவரின் நீண்டகாலத் தலைமைத் திட்டத்தின் ஒரு பகுதியே,” என்றார்.
சாம்சனே சரியான தேர்வு!
ரிஷப் பண்ட், கே.எல். ராகுல் போன்ற விக்கெட் கீப்பர்களை விட சஞ்சு சாம்சனே சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு சிறந்த தேர்வாக இருப்பார் எனவும் கைஃப் தெரிவித்தார். “சஞ்சு சாம்சனின் பேட்டிங் பாணி சேப்பாக்கம் பிச்சுக்கு மிகச் சரியாகப் பொருந்தும். அவர் 3 அல்லது 4ஆம் இடத்தில் களம் இறங்கி, மிடில் ஓவர்களில் சிக்ஸர்களை பறக்கவிடும் திறன் கொண்டவர். அதனால் சிஎஸ்கே ரசிகர்களுக்கு புதிய உற்சாகத்தைத் தருவார்,” என கைஃப் கூறினார்.
About the Author
R Balaji