இந்தியன் பிரீமியர் லீக் 2026க்கான மெகா ஏலம் நெருங்கி கொண்டிருக்கும் வேளையில், அனைத்து அணிகளும் தங்கள் வீரர்களை தக்கவைப்பது மற்றும் விடுவிப்பது குறித்த தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை, ரவீந்திர ஜடேஜா அணியின் அசைக்க முடியாத தூணாக கருதப்படுகிறார். ஆனால், கிரிக்கெட் வட்டாரங்களில் தற்போது ஒரு அதிர்ச்சிகரமான விவாதம் எழுந்துள்ளது. சென்னை அணி சஞ்சு சாம்சனிற்கு பதிலாக ஜடேஜாவை Trade செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் சிஎஸ்கே அணி ஜடேஜாவை Trade செய்வது சிறந்த முடிவாக இருக்குமா? என்ற கோணத்திலும் யோசித்து பார்க்க வேண்டும்.
Add Zee News as a Preferred Source

அணியில் ஜடேஜாவின் பங்களிப்பு
கடந்த ஐபிஎல் 2025 சீசனில், சிஎஸ்கே அணியில் ரவீந்திர ஜடேஜாவின் பங்கு என்ன என்பது தெளிவாக வரையறுக்கப்படவில்லை. ஒரு மூத்த ஆல்-ரவுண்டராக, அவர் அணியின் முக்கிய வீரராக இருக்க வேண்டும். ஆனால், சில சமயங்களில் அவர் பேட்டிங் வரிசையில் முன்னரே அனுப்பப்பட்டார், ஆனால் அந்த சோதனைகள் பெரிய வெற்றியை தரவில்லை. பந்துவீச்சிலும், அவர் ஒரு விக்கெட் வீழ்த்தும் பந்துவீச்சாளராக பயன்படுத்தப்படவில்லை. மாறாக, ஓவர்களை கட்டுப்படுத்தவும், குறிப்பிட்ட பேட்ஸ்மேன்களுக்கு எதிராகவும் மட்டுமே அவர் பந்துவீச அழைக்கப்பட்டார்.
அதே சமயம், சிவம் துபே மற்றும் டெவால்ட் பிரெவிஸ் போன்ற வீரர்கள் கீழ் வரிசையில் அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்கின்றனர். இதனால், ஜடேஜாவின் பேட்டிங் பங்களிப்பு அணிக்கு அவசியமானதாக இல்லாமல். அவரது மிகப்பெரிய ஊதியத்தை கருத்தில் கொள்ளும்போது, அணியில் அவருக்கென ஒரு தெளிவான, தாக்கத்தை ஏற்படுத்தும் பங்கு இல்லாதது அணியின் சமநிலையையே பாதிக்கிறது. எனவே, அவரை Trade செய்வதன் மூலம், அந்த இடத்திற்கு சரியான பங்களிப்பை வழங்கக்கூடிய ஒரு வீரரை அணி நிர்வாகம் தேர்வு செய்யலாம்.
பந்துவீச்சில் குறைந்த தாக்கம்
ரவீந்திர ஜடேஜாவின் மிகப்பெரிய பலம் அவரது துல்லியமான சுழற்பந்து வீச்சு. ஆனால், கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களாக அவரது பந்துவீச்சு புள்ளிவிவரங்கள் கவலைக்குரியதாகவே உள்ளன. ஐபிஎல் 2025 சீசனில், அவர் 14 போட்டிகளில் விளையாடி வெறும் 10 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார். அவரது சராசரி 32.40 ஆகவும், எகானமி ரேட் 8.56 ஆகவும் இருந்தது. அதற்கு முந்தைய 2024 சீசனிலும் அவர் 8 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்திருந்தார்.
ஒரு காலத்தில் பவர்பிளே ஓவர்களில் பந்துவீசி விக்கெட் எடுத்த ஜடேஜா, இப்போது மிடில் ஓவர்களில் கூட பெரிய தாக்கத்தை ஏற்படுத்தத் திணறுகிறார். பேட்டிங்கில் அவர் 301 ரன்கள் குவித்திருந்தாலும், அவரது ஸ்ட்ரைக் ரேட் (135.58) போதுமானதாக இல்லை. அணியில் அதிக சம்பளம் வாங்கும் ஒரு வீரர், ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவராக இருக்க வேண்டும். ஆனால் ஜடேஜாவின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் அப்படி இல்லை. எனவே, சிஎஸ்கே அணி ஆட்டத்தின் அனைத்து கட்டங்களிலும் சிறப்பாக பந்துவீசக்கூடிய ஒரு முன்னணி பந்துவீச்சாளரை தேடலாம்.
தோனி – ஜடேஜா ஃபினிஷிங்
ஒரு காலத்தில், எம்.எஸ். தோனி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் களத்தில் நின்றால், ஆட்டம் சிஎஸ்கே பக்கம்தான் என எதிரணிகள் அஞ்சின. ஆனால், அந்த காலம் மலையேறிவிட்டது. கடந்த சீசனில் சிஎஸ்கே அணியின் மிடில் மற்றும் லோயர் ஆர்டர் பேட்டிங் பெரும் சரிவை சந்தித்தது. தோனி மற்றும் ஜடேஜாவின் ஃபினிஷிங் ஜோடி, முன்பு போல் அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை. ஜடேஜாவின் ஸ்ட்ரைக் ரேட் 135.58 ஆகவும், தோனியின் ஸ்ட்ரைக் ரேட் 135.17 ஆகவும் இருந்தது. டெத் ஓவர்களில், எதிரணிகள் சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டு வந்து இவர்களின் ரன் வேகத்தை கட்டுப்படுத்தின. நவீன டி20 கிரிக்கெட்டில், கடைசி கட்ட ஓவர்களில் இந்த ஸ்ட்ரைக் ரேட் போதுமானதல்ல. இந்த ஜோடியின் மீதான அதீத நம்பிக்கை, அணியின் ஒட்டுமொத்த பேட்டிங் உத்திக்கும் தடையாக உள்ளது.
ரவீந்திர ஜடேஜா சிஎஸ்கே அணிக்கு ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. அவர் ஒரு உண்மையான ‘லெஜண்ட்’. அவரை Trade செய்வது என்பது உணர்வுபூர்வமாக கடினமான முடிவு தான். ஆனாலும், ஐபிஎல் என்பது உணர்ச்சிகளை தாண்டி, புள்ளிவிவரங்களையும், உத்திகளையும் சார்ந்து இயங்கும் ஒரு தொழில்முறை விளையாட்டு. ஜடேஜாவின் அதிக சம்பளம், அணியில் அவரது தெளிவற்ற பங்கு மற்றும் சமீபத்திய சரிவான ஆட்டம் ஆகிய இந்த மூன்று காரணங்களும், சிஎஸ்கே நிர்வாகம் மெகா ஏலத்திற்கு முன் ஒரு கடினமான முடிவை எடுக்கத் தூண்டலாம்.
About the Author
RK Spark