டெல்லி கார் வெடிப்பு: `Hyundai i20 கார், CCTV கேமராக்கள் ஆய்வு' – அமித் ஷா பேட்டி

டெல்லி செங்கோட்டைக்கு அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் எண் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த கார் வெடித்துச் சிதறியிருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இன்று (நவ 10) மாலை 6.50 மணியளவில் நடந்த இந்த கார் வெடிப்பு சம்பவத்தால் அருகே இருந்த நான்கு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்துள்ளன. பெரும் சத்தத்துடன் நடந்த இச்சம்பவம் அப்பகுதியையே பதற்றத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது.

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதுவரை 8 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 24 பேர் படுகாயமடைந்திருப்பதாகவும் முதற்கட்டத் தகவல் தெரிவிக்கின்றன. பலி எண்ணிக்கை உயரும் அச்சமும் ஏற்பட்டிருக்கிறது.

இதனால் டெல்லி நகரம் முழுவதும் உயர்மட்ட பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. வாகன சோதனை, இரவு நேர ரோந்து பணிகளை அதிகரிக்கவும், கூடுதல் காவலர்களை பாதுகாப்பு, கண்காணிப்புப் பணிகளின் ஈடுபடுத்தவும் தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

இச்சம்பவம் குறித்து ‘ANI’ செய்தி நிறுவனத்திடம் பேசியிருக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷா,”இன்று மாலை 7 மணியளவில், டெல்லி செங்கோட்டை அருகே உள்ள சுபாஷ் மார்க் போக்குவரத்து சிக்னலில் ஹூண்டாய் i20 கார் திடீரென வெடித்திருக்கிறது. இச்சம்பவத்தில் வெடித்த காரின் அருகே இருந்த கார்களும் தீ பிடித்து எரிந்துள்ளன. அந்த இடத்தில் இருந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. சிலர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெடிப்பு நிகழ்ந்த 10 நிமிடத்தில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டிருக்கின்றனர். மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

NSG மற்றும் NIA குழுக்கள், FSL உடன் இணைந்து, இப்போது முழுமையான விசாரணையைத் தொடங்கியுள்ளன. அருகிலுள்ள அனைத்து CCTV கேமராக்களையும் ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்று கூறியிருக்கிறார்.

பிரதமர் மோடியுடன் அலோசனை நடத்திய பிறகு அமித் ஷா இன்று இரவே பாதிக்கப்பட்டவர்களையும், சம்பவ இடத்தையும் பார்வையிட்டு அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தவிருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.