ஏதோ ஒரு ஞானத்தையும், ஒரு திறப்பையும், பல புரிதல்களையும் நம்முள் விதைக்கும் வீரியம் புத்தகங்களுக்கு உண்டு. பலரின் வாழ்வை மாற்றிய புத்தகங்கள் உண்டு. ஒரு சினிமா ரசிகனாக, சினிமா பற்றிய புத்தகங்கள் எப்போதுமே என்னை வசீகரித்திருக்கின்றன.
திரைக்கதை பற்றிய புத்தகங்கள், திரைப்படங்கள் உருவான விதத்தைப் பற்றிய புத்தகங்கள், படைப்பாளர்களின் நேர்காணல்கள், அவர்கள் போராடி வென்ற கதைகள் — எனத் திரைக்கதைகளைப் படிப்பதிலிருக்கும் சுவாரசியம், திரைப்படம் பற்றிய புத்தகங்களைப் படிப்பதிலும் கிடைக்கும்.
அப்படியொரு அனுபவத்தைத் தந்த புத்தகம் சுரேஷ் ஜின்டால் எழுதிய “My Adventures with Satyajit Ray.” சமீப ஆண்டுகளில் நான் படித்த மிகச் சிறந்த புத்தகம் இது. சினிமா பிடித்திருந்தால், சத்யஜித் ரே பிடித்திருந்தால், இந்தப் புத்தகம் உங்களுக்கு ஓர் பொக்கிஷம் என்பேன்.

சத்யஜித் ரே’ன் முதல் இந்தித் திரைப்படம் “Shatranj Ke Khilari” (தமிழில் “Chess Players”). அதற்கு முன்பே அவர் “பதேர் பாஞ்சாலி”, “அபாரஜிதோ”, “சாருலதா” போன்ற பல படங்களின் மூலம் உலகளவில் இந்திய சினிமாவின் அடையாளமாகி விட்டார்.
உலகின் முக்கியமான திரைப்பட விழாக்களில் பல விருதுகளை வென்று, தனது படங்களுக்கு தனித்துவமான ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கி விட்டார். எனினும் “Shatranj Ke Khilari” தான் அவரது முதல் மற்றும் ஒரே ‘நேரடி’ இந்தித் திரைப்படம்.
இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் ஜின்டால் – சத்யஜித் ரேவை கண்டு வியந்தும், அவரது படைப்புகளை கொண்டாடியுமிருந்த ஒரு இளம் தயாரிப்பாளர்.
அவரின் முதல் தயாரிப்பான இந்தித் திரைப்படம் பெரும் வெற்றி பெற்று, லாபத்தை அள்ளித் தந்தது. அதன் பிறகு, மீண்டும் ஒரு மசாலா படம் எடுக்காமல், சத்யஜித் ரேவை வைத்து இந்தியில் ஒரு அர்த்தமுள்ள படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இதற்காக அவர் நண்பர் மூலம் ரேவை அணுகுகிறார்.
அச்சமயம் ரேயும் ப்ரேம் சந்தின் ஒரு சிறுகதையை இந்தியில் படமாக்கும் எண்ணத்தில் இருந்தார். இருவரும் இணைந்தனர். “Shatranj Ke Khilari” உருவானது. இந்த படம் உருவான விதம்தான் இந்தப் புத்தகம். ஆனால் சிறப்பு என்னவெனில், இந்த உருவாக்கக் கதையை சுரேஷ் ஜின்டால் மட்டும் விவரித்து இருப்பது அல்ல.
படம் குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது முதல் சுரேஷிற்கும் சத்யஜித் ரேவுக்கும் இடையில் எண்ணற்ற கடிதப் பரிமாற்றங்கள் நடைபெற்றுள்ளன.
படத்திற்கு முன்பும் பின்பும். அந்த அத்தனை கடிதங்களையும் சுரேஷ் சேமித்து வைத்துள்ளார். இந்த புத்தகம் முழுவதும் அக்கடிதங்கள் தான்!

படத்தின் கதை கொஞ்சம் கொஞ்சமாக உருவான விதம், ரே திரைக்கதை எழுதும் முறை, படத்தின் ப்ரீ-ப்ரொடக்ஷன், லொக்கேஷன், நடிகர்கள் தேர்வு, படத்திற்கு வந்த பற்பல தடைகள், காலத் தாமதம், படப்பிடிப்பு, வெறும் 40 ரூபாய்க்காக சுரேஷ் ஜின்டாலுக்கும் சத்யஜித் ரேவுக்கும் ஏற்பட்ட பிரச்னைகள், சண்டைகள், போஸ்ட்-ப்ரொடக்ஷன், சுரேஷ் படத்தை விட்டு வெளியேறியது, ரேயின் சமாதானம், பட வெளியீடு, வணிகத் தோல்வி உள்ளிட்ட அனைத்தும் இருவருக்கு இடையேயான கடிதங்களின் மூலம் வெளிப்படுகிறது.
சத்யஜித் ரே தன் திரைக்கதைகளை எப்படி புத்தகமாக எழுதி தைத்து வைத்திருப்பார், அதை எந்த நாட்டின் திரைப் பிரிவு வாங்கி பாதுகாத்து வைத்துக் கொள்ளும் என்பதிலிருந்து தொடங்கி, அந்தக் கலைஞனை இன்னும் வியந்து பார்க்கச் செய்யும் பல தகவல்கள் இதில் உள்ளன.
குறிப்பாக, திரைக்கதை புத்தகத்தில் ரே தன் கதாப்பாத்திரங்களை, அவர்களது உடைகளை, ஸ்டோரி போர்டுகளை எப்படி வரைந்து வைத்திருப்பார், அக்காட்சிக்கான இசைக் குறிப்புகளை எப்படி எழுதி வைத்திருப்பார் என்பதைப் படிப்பதும் பார்ப்பதும் (ஆம், Shatranj Ke Khilari யின் திரைக்கதை புத்தகத்திலிருந்தே அந்தப் பக்கங்கள் இதில் இணைக்கப்பட்டிருக்கின்றன) சிலிர்ப்பானதொரு அனுபவம்.

சின்னச் சின்ன கம்மல்கள், பட்டைகள் முதற்கொண்டு, பெண்களின் உடைகளின் வேலைப்பாடுகள், காலணிகள், தலைப்பாகைகள் வரை ஒவ்வொன்றையும் நுணுக்கமாக வரைந்திருக்கிறார்.
வரைந்ததைப் போலவே அதை உருவாக்கி திரையிலும் கொண்டு வந்திருக்கிறார் ரே. வெறும் பணம் போட்டு ஒதுங்கி நின்று மேற்பார்வை செய்வது மட்டுமல்ல ஒரு தயாரிப்பாளரின் வேலை. ஒரு கதையின் உருவாக்கத்திலிருந்து, திரை உருவாக்கத்தின் பல்வேறு கூறுகள் வரை அவரின் ஈடுபாடும் பங்களிப்பும் எப்படியிருக்க வேண்டும், அவை எப்படி படத்தை மேம்படுத்தும் என தயாரிப்பாளர்களுக்குமான நூல் இது.
கடிதங்களினால் ஆன நூல் என்பதால், படத்தின்போது இருவருக்கும் இடையே உருவான நட்பு, மனக்கசப்பு, கோபம், இடைவெளி, மீண்டும் துளிர்த்த நட்பு என இரண்டு மனிதர்களின் கதையாகவே இது விரிகிறது. அதனாலேயே என்னவோ ஒரு புனைவு நாவலை படிப்பதைப் போன்ற லயிப்புடன் இதை படிக்க முடிகிறது.
இப்போதும் நாம் மற்ற மொழிப் படங்களையும் கலைஞர்களையும் வியந்து கொண்டிருக்கையில், அப்போதே பிறமொழிக் கலைஞர்களும் படைப்பாளிகளும் ரேயை எப்படி வியந்து பார்த்திருக்கின்றனர் என்பது கடிதங்களூடே ஆங்காங்கே வெளிப்படுகிறது.
உலகம் போற்றும் நடிகர்கள் பலரும் ‘உங்கள் படத்தில் நான் ஒரு காட்சியாவது நடிக்க வேண்டும் சத்யஜித்’ என்று கூறியிருப்பதை படிக்கையில் கிட்டத்தட்ட புல்லரித்தது.
தன் வாழ்நாளின் மிகச்சிறந்த வருடங்கள் என இப்படம் உருவான காலத்தில் ரேயுடன் பழகிய நாட்களை குறிப்பிடும் சுரேஷ் ஜின்டால், அது ‘சினிமாவையும் வாழ்க்கையையும் தனக்கு கற்றுத்தந்த நாட்களாக இருந்தன’ என்று எழுதுகிறார். இந்தப் புத்தகத்திற்கும் அதே அடிக்குறிப்பு பொருந்தும்.
ஒரு மாபெரும் கலைஞனின் வாழ்க்கையிலிருந்து சில பக்கங்களை திறந்து காட்டுவதன் மூலம், இப்புத்தகம் நிறைய சினிமாவையும் கொஞ்சம் வாழ்க்கையையும் கற்றுத் தருகிறது.

எல்லாவற்றையும் விட எனக்கு பெருவியப்பைத் தந்த, வாய்பிளக்க வைத்த விஷயம் ஒன்றுதான். 1960 களில் ரே ஹாலிவுட் ஸ்டூடியோ ஒன்றுடன் இணைந்து ஆங்கிலப் படம் பண்ணும் சூழல் ஒன்று வருகிறது.
அதற்காக ‘ஏலியன்’ என்று ஒரு திரைக்கதையை முழுக்க ஆங்கிலத்திலேயே எழுதி அந்த ஹாலிவுட் ஸ்டூடியோவிற்கு அனுப்புகிறார் (நம்மூரில் தயாரிப்பாளர்கள் போல அங்கே ஸ்டூடியோக்கள். அவர்களிடம் தான் கதைகள் அனுப்பப்படும்).
அந்த திரைக்கதை புத்தகத்தில் வழக்கம்போல் தன் கதாப்பாத்திரங்களை (ஏலியன்) வரைந்து வைத்திருக்கிறார். பின் பல காரணங்களால் அப்படம் நிகழாமல் போகிறது. அந்த திரைக்கதை புத்தகத்தை சுரேஷிற்கும் காட்டியிருக்கிறார் ரே.
பல வருடங்கள் கழித்து 1977-ல், வெளிநாட்டில் ஒரு திரைப்பட விழாவிற்கு ரேயும் சுரேஷும் செல்கின்றனர். அங்கே ஸ்பீல்பெர்கின் ‘Close Encounters of the Third Kind’ படம் திரையிடப்படுகிறது. அப்படத்தின் இறுதிக் காட்சிகளை பார்க்கப் பார்க்க இருவரும் அதிர்கின்றனர்.
காரணம், அதில் வரும் ஏலியன்கள் அச்சு அசலாக ரே தன் ‘ஏலியன்’ திரைக்கதை புத்தகத்தில் வரைந்த ஏலியன்கள் போலவே இருக்கின்றன. அதற்குப் பின் ஸ்பீல்பெர்க் இயக்கி உலகப் புகழ் பெற்ற ஏலியன் திரைப்படமான ‘E.T’ படத்திலும் ரே வரைந்ததைப் போலவே இருக்கும் ஏலியன்கள் தோன்றுகின்றன.
இம்முறை தோற்றத்தில் மட்டுமல்ல, ஏலியன்களின் குணம், அவற்றின் பாத்திர வடிவமைப்பு, அவற்றின் செயல்கள், பழகும் விதம், தன்மைகள் என பலவும் ரேயின் ‘ஏலியன்’ திரைக்கதையில் இருந்தது போலவே இருக்கின்றன.

தனது திரைக்கதையை படித்திருக்காமல் இது சாத்தியமில்லை என ரே கூற, ஹாலிவுட் பத்திரிக்கையாளர்கள் இதுகுறித்து ஸ்பீல்பெர்கிடம் கேட்கின்றனர். அதற்கு அவர், ‘ரே எழுதுன ‘ஏலியன்’ ஸ்க்ரிப்ட் ஹாலிவுட்ல சுத்திட்டு இருந்தப்ப நான் ஸ்கூல் படிச்சுட்டு இருந்தேன்’ என்று சொல்கிறார்.
‘நான் காப்பிலாம் அடிக்கல. அப்போ நான் சினிமாக்கே வரல’ என்ற அர்த்தத்தில் தான் ஸ்பீல்பெர்க் சொல்கிறார். ஆனால் அதன்மூலம் பற்பல வருடங்களாக ரேயின் ‘ஏலியன்’ திரைக்கதை ஹாலிவுட் முழுக்க சுற்றிக் கொண்டிருந்தது என்கிற உண்மையும் வெளிப்பட்டிருக்கிறது.
அப்படியொரு கனவுத் திரைப்படத்தின் திரைக்கதை புத்தகம், அதுவும் படங்கள், குறிப்புகள் என ஒவ்வொரு விஷயமும் நுணுக்கமாக வரையப்பட்ட திரைக்கதை புத்தகம் அனாமத்தாக ஹாலிவுட்டில் சுற்றிக் கொண்டிருந்ததே அதை உருவாக்கிய கலைஞனுக்கு இழைக்கப்பட்ட அநீதி இல்லையா?
ஆனால் ஸ்பீல்பெர்க்கின் பேட்டி வந்ததுமே அவர் சொன்னது தவறு என்றும் ‘ஏலியன்’ திரைக்கதை ஹாலிவுட் ஸ்டூடியோக்களில் வட்டமடித்துக் கொண்டிருந்த நாட்களில் ஸ்பீல்பெர்க் படித்துக் கொண்டிருக்கவில்லை, ஹாலிவுட்டில் இயக்குனர் வாய்ப்பு தேடிக்கொண்டிருந்தார் என்றும் ஆங்கிலப் பத்திரிக்கைகள் தெளிவுபடுத்தி விட்டன.
எனவே ரேயின் ‘ஏலியன்’ திரைக்கதையை படித்திருக்காமல், பார்த்திருக்காமல் ஸ்பீல்பெர்க் தன் ஏலியன்களை உருவாக்கியிருக்க வாய்ப்பில்லை என்பது நிரூபணமாகியிருக்கிறது. ஆனால் சின்ன சலசலப்பைத் தவிர வேறொன்றும் நடக்கவில்லை. நடப்பதற்கு வாய்ப்பும் இல்லை.

இப்போது பரவலாக நடைபெறும் கதைத் திருட்டைப் போன்ற ஒரு சம்பவம், அப்போதே, சத்யஜித் ரே போன்ற ஒருவரின் கனவுத் திரைப்படத்திற்கே, அதுவும் ஸ்பீல்பெர்க் போன்ற ஒருவரின் மூலம் நடந்திருப்பது ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது.
அன்றிலிருந்து இன்று வரை, ஸ்பீல்பெர்க்கின் படத்தில் வந்தபடி, சரியாக சொல்வதென்றால் சத்யஜித் ரே வடிவமைத்தபடி தான் உலகெங்கும் தோன்றிக் கொண்டிருக்கின்றன ஏலியின்கள்.
இதை சுரேஷ் ஜின்டால் இப்படி குறிப்பிடுகிறார். அடுத்தமுறை நீங்கள் ஏதேனும் திரைப்படத்திலோ, தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிலோ, இல்லை ஒரு புகைப்படத்திலோ, ஒல்லியான, சாம்பல் நிறத்தில் மின்னும், பெரிய கண்களை உடைய ஏலியன்களை பார்த்தால், அது உலகின் மகத்தான இயக்குனர்களுள் ஒருவரின், படைப்பாற்றல் மிகுந்த மனத்திலிருந்து உருவானது என்பதை நினைவில் கொள்ளுங்கள்!
– ஜெயச்சந்திர ஹாஷ்மி