Doctor Vikatan: என் மகளுக்கு 14 வயதாகிறது. ஏற்கெனவே காது குத்தியிருக்கிறோம். இப்போது ஃபேஷனுக்காக காதின் பக்கவாட்டில், இன்னும் இரண்டு துளைகள் போட வேண்டும் என அடம் பிடிக்கிறாள். அப்படிக் குத்தினால் ஏதேனும் இன்ஃபெக்ஷன் வருமோ என பயமாக இருக்கிறது. அதைத் தவிர்க்க என்ன செய்வது?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்.
காதுகளின் பக்கவாட்டில் சைடு பியர்சிங் (இரண்டாவது துவாரம் போட்டுக்கொள்வது) செய்து கொள்ள முடிவெடுத்தால், முக்கியமான சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அந்த வகையில் எங்கே குத்தப் போகிறீர்கள் என்பதில் முதலில் கவனமாக இருக்க வேண்டும். ஒரே நேரத்தில் முதல் துளை, இரண்டாவது துளை என இரண்டையும் குத்தத் திட்டமிட்டிருக்கிறீர்கள் என்றால், முதல் துளை குத்தி, அது முழுமையாக ஆறிய பிறகுதான் அடுத்ததைக் குத்த வேண்டும். ஒரே நேரத்தில் வேலை முடிந்துவிடும் என அவசரப்பட்டு இரண்டையும் ஒரே நேரத்தில் செய்ய வேண்டாம்.
இயர்லோப் எனப்படும் காதின் அடிப்பகுதியில் (வழக்கமாக துளையிட்டு, தோடு அணிகிற இடம்) ரத்த ஓட்டம் நன்றாக இருக்கும் என்பதால், அங்கே துளையிட்டால் சீக்கிரம் காயம் ஆறிவிடும். அதுவே, காதின் மேற்புறத்தில் உள்ள கார்ட்டிலேஜ் எனப்படும் குறுத்தெலும்பு பகுதியில் துளையிடும்போது, அது அவ்வளவு சீக்கிரம் ஆறாது. இந்த இடத்தில் ரத்த ஓட்டம் சிறிது குறைவாக இருப்பதுதான் காரணம்.

சுகாதாரமான இடத்தில், முறைப்படி பயிற்சிபெற்ற நபரிடம் மட்டுமே காது குத்திக் கொள்ள வேண்டும். காது குத்திய பிறகான பராமரிப்பும் மிக முக்கியம்.
காது குத்திய பிறகு ஆன்டிபயாடிக் ஆயின்மென்ட்டை சில இடங்களில் பரிந்துரைப்பார்கள். அதை உபயோகிப்பதும் நல்லதுதான். சில இடங்களில் கன் (gun) போன்ற கருவியை வைத்துத் துளையிடுகிறார்கள்.
ஆனால், அதைவிடவும் ‘ஹாலோபோர் ஊசி’ ( hollow bore needle ) தான் சிறந்தது. இவை எல்லாவற்றையும்விட முக்கியம், துளையிட்ட பிறகு நீங்கள் உபயோகிக்கப்போகிற நகை. கவரிங், பிளாஸ்டிக் போன்றவற்றால் ஆன ஆபரணங்கள், காது குத்திய இடத்தில் ஒவ்வாமையை உருவாக்கலாம்.
அந்த இடத்தில் அரிப்பு, சீழ் கோப்பது போன்றவற்றுக்குக் காரணமாகலாம். எனவே, இந்த எல்லா எச்சரிக்கை நடிவடிக்கைகளையும் மனதில் கொண்டு, காது குத்தும் முடிவை மேற்கொள்வதுதான் பாதுகாப்பானது.