கரூர்: ஆன்லைன் மோசடி வழக்கில் கரூர் ஜேஎம் 1 நீதிமன்றத்தில் ஆஜராகி குற்றப்பத்திரிகை நகல் பெற்ற சவுக்கு சங்கரை நவ. 17-ம் தேதி ஆஜராக மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார்.
கரூரை சேர்ந்த கிருஷ்ணன் (44) கரூரில் பிரியாணி கடை நடத்தி வந்தார். இவர் சென்னையை சேர்ந்த விக்னேஷ் மூலம் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்காக ரூ.7 லட்சம் அளித்திருந்தார். 2, 3 மாதங்களில் லாபத்துடன் பணத்தை தருவதாக கூறியவர் அதன் பிறகு தொடர்புக் கொண்டப்போது தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்தார்.
விக்னேஷ் கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் 5-ம் தேதி கரூர் வந்தபோது கிருஷ்ணன் அவரை சந்தித்து பணத்தை கேட்டப்போது தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்து கல்லால் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த கிருஷ்ணன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
விக்னேஷ் மீது மோசடி, தகாத வார்த்தைகளால் திட்டுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் கரூர் நகர போலீஸார் கடந்த ஜூன் 5-ம் தேதி வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கில் விக்னேஷ் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சவுக்கு சங்கர் 2-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.
இவ்வழக்கில் கரூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1-ல் நீதிபதி எஸ்.பி.பரத்குமார் முன் சவுக்கு சங்கரை கரூர் நகர போலீஸார் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 9-ம் தேதி ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் 4 நாட்கள் எடுத்து விசாரணை நடத்தினர். அதன்பின் இவ்வழக்கில் சில வாரங்கள் புழல் சிறையில் இருந்த சவுக்கு சங்கர் ஜாமீன் பெற்றார்.
இந்நிலையில் இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை நகல் பெறுவதற்காக இன்று (நவ.12-ம் தேதி) கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் மாஜிஸ்ட்ரேட் எஸ்.பி.பரத்குமார் முன் ஆஜரான சவுக்கு சங்கர் குற்றப்பத்திரிகை நகலை பெற்றுக் கொண்டார். இவ்வழக்கில் நவ. 17-ம் தேதி ஆஜராக மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார்.
இது குறித்து சவுக்கு சங்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த மே மாதம் யூடியூப்பில் காவலர்களை அவதூறாகப் பேசியதாக கைது செய்யப்பட்டு நான் சிறையில் இருந்தப்போது என் மீது குண்டர் தடுப்பு சட்டம் போடக்கூடாது. என் மீது போட்டது பொய்வழக்கு என நீதிமன்றத்தில் விக்னேஷ் வழக்கு தொடர்ந்தார்.
அவர் தொடர்ந்து யூடியூப் சானலை நடத்தி வந்தார். இதனால் கரூரை சேர்ந்த பிரியாணி கடை உரிமையாளரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் திருச்சி அழைத்து வந்து, அப்போதைய திருச்சி எஸ்பி வருண்குமார் விசாரணை நடத்தி என்னிடம் வேலைக்கு செல்லக்கூடாது எனக்கூறி சித்ரவதை செய்து கரூர் அழைத்து வந்து நீதிமன்றத்தில ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தவெக நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போட்ட கரூர் நகர இன்ஸ்பெக்டர் ஜி.மணிவண்ணன், இவ்வழக்கில் என்னை ஏ 2-வாக சேர்த்துள்ளார். தமிழகத்தில் நிறைய ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பைத்தியம் முற்றிவிட்டது. முதல்வர் பொம்மை முதல்வராக இருப்பதால் தப்பு செய்தால் நடவடிக்கை எடுப்பார் என அச்சம் இல்லாததால் ஐபிஎஸ் அதிகாரிகள் பயப்படுவதில்லை. எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட அனைவரும் இன்னும் டிஜிபியை நியமிக்காமல் இருப்பது குறித்து கேள்வி எழுப்பியும் பொறுப்பு டிஜிபியை வைத்துள்ளனர்.
முதல்வர் கையலாதகாத பொம்மை முதல்வவராக இருப்பதால் ஐபிஎஸ் அதிகாரிகள் பயமின்றி உள்ளனர். வருண்குமார், திருச்சி எஸ்பி ஆகியோர் சீருடையில் டரோன் வைத்து ரீல்ஸ் எடுத்து போட்டு கொண்டு உள்ளனர். ஜெயலலிதா, கருணாநிதி, பழனிசாமி முதல்வராக இருந்திருந்தால் அதிகாரிகளுக்கு அச்சம் இருக்கும்.
முதல்வருக்கு தகவல் தெரிந்தாலும் நடவடிக்கை எடுக்கமாட்டார் என்பதால், ஐபிஎஸ் அதிகாரிகள் அனைவரும் மனநோய் பாதிக்கப்பட்டது போல இஷ்டத்திற்கு செயல்பட்டு கொண்டு இருப்பதால் மக்கள் அவதிப்பட்டு கொண்டு உள்ளனர்.” என்றார்.