புதுடெல்லி: டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் தீவிரவாத தாக்குதல் என்று மத்திய அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பூடானில் 2 நாட்கள் அரசு பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பிய பிரதமர் மோடி, டெல்லி கார் வெடிகுண்டு தாக்குதலில் காயம் அடைந்தவர்களை, டெல்லி எல்என்ஜேபி மருத்துவமனையில் நேற்று சந்தித்தார். அவர்களுடைய உடல்நலம் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார். மேலும், காயம் அடைந்தவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை தொடர்பான விவரங்களை மருத்துவர்களிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
இதுதொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், “டெல்லி எல்என்ஜேபி மருத்துவமனைக்குச் சென்று, காயம் அடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினேன். அவர்கள் விரைவாக குணமடைய ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன். இந்தச் சதிச் செயலுக்கு பின்னால் இருப்பவர்கள் நீதியின் முன்பு நிறுத்தப்படுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி வீட்டில்… டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக, டெல்லி லோக் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமர் மோடி வீட்டில் அவரது தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கூட்டம் (சிசிஎஸ்) நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மூத்த உளவுத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
டெல்லி குண்டுவெடிப்பை தொடர்ந்து செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், வழக்கின் விசாரணை நிலை உள்ளிட்டவை குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.
டெல்லி முழுவதுமே பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மேலும் டெல்லி குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர்களின் விவரங்கள், கிடைத்த ஆவணங்கள் குறித்து பிரதமரிடம் என்ஐஏ அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.
இதற்கிடையில், குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு ஜப்பான், வங்கதேசம், அர்ஜெண்டினா, இஸ்ரேல், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
அமைச்சரவை கூட்டத்துக்குப் பிறகு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதவாது: டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் இது தீவிரவாத தாக்குதல் என மத்திய அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை விரைவாக நடைபெறும் என்றும் இதில் தொடர்புடையவர்கள் தாமதமின்றி நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
ரூ.25,060 கோடி மதிப்பிலான ஏற்றுமதி வளர்ச்சி திட்டத்துக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 2025-26 முதல் 2030-31 வரையிலான காலத்துக்கு சர்வதேச வர்த்தகத்தில் இந்தியாவின் போட்டித் தன்மையை அதிகரிக்க இந்த திட்டம் வகை செய்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.