நியூயார்க்,
போரால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான சிரியாவின் அதிபர் அகமது அல்-ஷரா அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். 80 ஆண்டுகளில் அமெரிக்காவுக்கு செல்லும் முதல் சிரிய அதிபர் அல்-ஷரா ஆவார்.
அவரை அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் வரவேற்றார். இந்த சந்திப்பின்போது, நகைச்சுவையான சில விசயங்கள் நடந்தன. டிரம்ப், வாசனை திரவியம் அடைக்கப்பட்ட பாட்டில் ஒன்றை ஷராவிடம் கொடுத்து விட்டு, இது ஆண்களுக்கான நறுமண திரவியம் என்றார்.
இதனை கேட்டு ஷரா சிரித்து விட்டார். அப்போது, ஷராவுக்கு சென்ட் அடித்து விட்டு, இது சிறந்த நறுமணம் என டிரம்ப் கூறினார். மற்றொரு பாட்டில் (வாசனை திரவியம் கலந்தது) உங்களுடைய மனைவிக்கு என கூறி விட்டு, உங்களுக்கு எத்தனை மனைவிகள் உள்ளனர்? என கேட்டார்.
டிரம்ப் கேட்ட கேள்வியால் சிரிப்பலை எழுந்தது. அதற்கு ஷரா, ஒரே ஒரு மனைவிதான் என்றார். அவருடைய தோளில் தட்டி கொடுத்து விட்டு, நண்பர்களே, எனக்கு இதுபற்றி ஒன்றும் தெரியாது என டிரம்ப் கூறினார்.
இதன்பின் பதிலுக்கு டிரம்பிடம் உங்களுக்கு எத்தனை மனைவிகள்? என ஷரா கேட்டார். அதற்கு டிரம்ப், ஓ, இதுவரை ஒன்றுதான் என கூறி சிரிப்பை ஏற்படுத்தினார். இதுதொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.