ஆ.ராசா தலைமையிலான SIR கூட்டம்; புறக்கணித்த சேகர்பாபு; புகைச்சலில் அறிவாலயம்

2026 சட்டமன்றத் தேர்தல் தொடர்பான ஆலோசனையின்போது தி.மு.க எம்.பி. ஆ.ராசாவுக்கும் அமைச்சர் சேகர்பாபுவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகச் சொல்லப்பட்ட நிலையில், ஆ.ராசா தலைமையிலான SIR கூட்டத்தை அமைச்சர் சேகர்பாபு புறக்கணித்திருப்பது அறிவாலயத்தில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 09.11.2025 அன்று நடைபெற்ற காணொலி காட்சி கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களின்படி, SIR தொடர்பான பணிகளை முழுமையாக முடிப்பது குறித்து சென்னை மண்டல மாவட்டங்களுக்கு ஆலோசனைக் கூட்டம், சென்னை மண்டலத் தேர்தல் பொறுப்பாளரும் கழகத் துணைப் பொதுச்செயலாளருமான ஆ.ராசா தலைமையில் 13.11.2025 அன்று நடைபெற்றது. தியாகராய நகரிலுள்ள ஓட்டல் அக்கார்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தலைநகரிலுள்ள அனைத்து மாவட்டச் செயலாளர்களும், அமைச்சர்களும் பங்கேற்பார்கள் எனச் சொல்லப்பட்டது.

எஸ்.ஐ.ஆர் ஆலோசனை கூட்டம்

அதன்படி அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன், மா.செ-க்கள் மயிலை வேலு, மாதவரம் சுதர்சனம், ஆர்.டி. சேகர், சிற்றரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆனால் சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான சேகர்பாபு வருவதாகச் சொல்லிவிட்டு நிகழ்ச்சிக்கு வராமல் புறக்கணித்துவிட்டதாகத் தெரிகிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தி.மு.க புள்ளிகள் சிலர், “வாக்குரிமையைப் பறிக்கும் ஒன்றிய பாஜக அரசின் சூழ்ச்சிக்கு எதிராக திராவிட முன்னேற்றக் கழகம் சட்டரீதியாகவும், மக்கள் மன்றத்திலும் போராடிவருகிறது. இச்சூழலில் களத்தில் எப்படி கையாள்வது என்பது குறித்து மண்டல பொறுப்பாளர்கள் தலைமையில் மா.செ-க்கள் பங்கேற்கும் சிறப்புக் கூட்டத்தைக் நடத்த முதல்வர் ஆணையிட்டிருந்தார். ஆனால் கூட்டம் ஆ.ராசா தலைமையில் நடப்பதாலேயே அமைச்சர் சேகர்பாபு அதில் பங்கேற்கவில்லை. கூட்டம் தொடங்கும் வரை ‘பி.கே.எஸ்’ வந்துவிடுவார் எனக் கூட்ட அரங்கில் பேசிக்கொண்டிருந்தனர்; ஆனால் அவர் வரவேயில்லை” என்றனர்.

சேகர்பாபு
சேகர்பாபு

அமைச்சர் சேகர்பாபுவுக்கும் ஆ.ராசாவுக்கும் என்ன பிரச்னை என விசாரித்தபோது, நம்மிடம் பேசியவர்கள், “தலைநகர் தொகுதியிலுள்ள தனித்தொகுதிகளை யாருக்கு தர வேண்டும் என ஆலோசனையின்போது ஆ.ராசாவுக்கும் சேகர்பாபுவுக்கும் கருத்து முரண்பாடு ஏற்பட்டது. சீனியரான ஆ.ராசாவைப் அமைச்சர் அவமரியாதையாகப் பேசியதாகவே முணுமுணுக்கப்பட்டது. பின்னர் இருவரும் நேரில் சந்தித்து பரஸ்பரம் பேசிக்கொண்டதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் ஆ.ராசா தலைமையில் நடந்த, SIR குறித்தான மிக முக்கியமான கூட்த்தில் சேகர்பாபு பங்கேற்கவில்லை. அந்த கூட்டத்தில் நடந்தவற்றை அடிமட்ட நிர்வாகிகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதுதான் திட்டம். சேகர்பாபு பங்கேற்காததால் கிழக்கு மாவட்ட தி.மு.க நிர்வாகிகளுக்கு செயல்திட்டங்கள் எப்படி சென்றடையும்? தேர்தல் நெருங்கும் சூழலில் மாவட்டச் செயலாளரும் மண்டல பொறுப்பாளருமான இருவரும் ஈகோ யுத்தத்தில் இறங்கியிருப்பது அறிவாலயத்தில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஈகோ யுத்தத்தை முதல்வர்தான் முடித்துவைக்க வேண்டும்” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.