நடந்து முடிந்த பீகார் சட்டமன்ற தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் படுதோல்வியை சந்தித்துள்ளது. இத்தோல்வி முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவிற்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. கூட்டணியை இறுதி செய்வதில் இருந்தே சறுக்கலை சந்தித்து வந்த ராஷ்ட்ரீய ஜனதா தள முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் இப்போது தேர்தலில் படுதோல்வியை சந்தித்து இருக்கிறார். இத்தோல்வியை தொடர்ந்து லாலு பிரசாத் யாதவ் மகள் ரோஹினி ஆசாரியா புதிய குண்டை போட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,”நான் அரசியலையும், குடும்பத்தையும் துறக்கிறேன். சஞ்சய் யாதவ் மற்றும் ரமீஸ் ஆகியோர் கேட்டுக்கொண்டதால் இதை செய்கிறேன். அனைத்து தவறுகளுக்கும் நான் பொறுப்பேற்கிறேன்”என்று குறிப்பிட்டுள்ளார்.
சஞ்சய் யாதவ் லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவிற்கு மிகவும் நெருக்கமானவர் ஆவார். அனைத்து தவறுகளுக்கும் தான் பொறுப்பு ஏற்பதாக ரோஹினி குறிப்பிடுவது பீகார் சட்டமன்ற தேர்தலைப்பற்றியதா என்று தெரியவில்லை.

ஆனால் மறைமுகமாக அதைத்தான் குறிப்பிடுவது போல் தெரிகிறது. 2022ம் ஆண்டு லாலு பிரசாத் யாதவ் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட போது அவருக்கு ரோஹினிதான் தனது ஒரு சிறுநீரகத்தை கொடுத்து தனது தந்தையை காப்பாற்றினார்.
தற்போது முடிந்துள்ள தேர்தல் லாலு பிரசாத் குடும்பத்தில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே லாலு பிரசாத் யாதவ் மூத்த மகன் தேஜ் பிரதாப் குடும்பத்தில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார். அவர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். தேஜ் பிரதாப் குடும்பத்தில் இருந்து நீக்கப்பட்டது ரோஹினிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ரோஹினி தனது குடும்பத்தினரிடமும் தனது அதிருப்தியை தெரிவித்திருந்தார். அதோடு கடந்த செப்டம்பர் மாதம் அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை சமூக வலைத்தள பக்கத்தில் பாலோ செய்வதில் இருந்து ரோஹினி வெளியில் வந்தார்.
மேலும் தன்னை பற்றி தவறான தகவல் தகவல்கள் பகிரப்படுவதாகவும் குறிப்பிட்டு இருந்தார். “நான் எனது தந்தைக்கு சிறுநீரகத்தை தானமாக கொடுத்ததற்காக எனக்காகவோ அல்லது வேறு யாருக்காகவோ யாரிடமாவது ஏதேனும் கோரிக்கை விடுத்தேன் என்பதை யாராவது நிரூபிக்க முடிந்தால், நான் அரசியல் மற்றும் பொது வாழ்க்கையிலிருந்து விலகுவேன்” என்று அவர் எக்ஸ் தள பக்கத்தில் எழுதியிருந்தார்.