பீஜிங்,
ஜப்பானில் நிலவிய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக பிரதமர் ஷிகெரு இஷிபா தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து அந்த நாட்டின் முதல் பெண் பிரதமராக சனே தகைச்சி (வயது 64) தேர்வு செய்யப்பட்டார். இதற்கிடையில், பிரதமராக பதவியேற்ற பிறகு தைவான் விவகாரம் குறித்து சனே தகைச்சி தெரிவித்த சில கருத்துகள் சீனா-ஜப்பான் இடையிலான உறவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 7-ந்தேதி ஜப்பான் நாடாளுமன்றத்தில் பேசிய சனே தகைச்சி, “தைவான் மீதான சீனா ஆயுதமேந்திய தாக்குதலை நடத்தினால், அது ஜப்பானுக்கான நேரடி அச்சுறுத்தலாக கருதப்படும்” என்று தெரிவித்தார். மேலும் ஜப்பானின் ‘கூட்டு தற்காப்பு’ கொள்கையின் அடிப்படையில், தைவானுக்கு ஆதரவாக ஜப்பான் ராணுவத்தை அனுப்ப வேண்டிய சூழல் ஏற்படும் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
அவரது பேச்சு சீனாவிற்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து ஜப்பான்-சீனா அரசுகளிடையே வார்த்தை மோதல்கள் வெடித்தன. இருப்பினும் தனது கருத்தை வாபஸ் பெறும் எண்ணம் இல்லை என்றும் ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். அதே சமயம், எதிர்காலத்தில் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு சில விவகாரங்களை குறிப்பிடுவதை தவிர்ப்பேன் என்று அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், ஜப்பான் நாட்டிற்கு செல்வதை தவிர்க்குமாறு தனது குடிமக்களுக்கு சீன அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜப்பானில் இருக்கும் சீன மக்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக சீனா குறிப்பிட்டுள்ளது. மேலும், ஜப்பானுக்கு சென்று படிக்கும் திட்டம் இருந்தால் அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தங்கள் நாட்டில் உள்ள மாணவர்களுக்கு சீன அரசின் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.