சவுதி அரேபியாவில் நடந்த பேருந்து விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்திலிருந்து சவுதி அரேபியாவிலுள்ள மெக்கா மற்றும் மதினாவுக்கு புனித யாத்திரை மேற்கொண்ட 45 முஸ்லிம்கள் பேருந்து விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். டீசல் டேங்கர் மீது இவர்கள் பயணம் செய்த பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 45 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 18 பெண்கள், 10 சிறுவர்கள், 17 ஆண்கள் உள்ளனர்.
உயிரிழந்த 45 பேரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத் ராம் நகரைச் சேர்ந்த இந்த குடும்பத்தினர் உம்ரா புனிதப் பயணத்தை நிறைவேற்றுவதற்காக மக்கா சென்று விட்டு அங்கிருந்து மதினா சென்றுள்ளனர். கடந்த 8 நாட்களுக்கு முன்பு இந்தியாவிலிருந்து புறப்பட்டுச் சென்ற அவர்கள், வரும் சனிக்கிழமை மீண்டும் தாயகம் திரும்ப திட்டமிட்டிருந்ததாக அவர்களது உறவினர்கள் கூறுகின்றனர். உயிரிழந்தவர்களில் 9 பெரியவகள், 9 குழந்தைகள் இருந்ததாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த மற்றவர்கள் ஹைதராபாத் மல்லேபல்லி, பஜார் காட், ஆசிஃப் நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. மதினாவுக்கு 25 கி.மீ முன்னதாக இவர்கள் சென்ற பேருந்து, எதிரே வந்த டீசல் டேங்கர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை 1.30 மணியளவில் இந்த கோர விபத்து நடந்துள்ளது. அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த போது நடந்த இந்த விபத்தில், பேருந்து முழுவதும் உடனடியாக தீப்பிடித்து எரிந்தது.
அந்த பேருந்தில் இருந்து வெளியே வர அவர்கள் முயற்சித்தும் பலனின்றி போனது. இந்த கோர விபத்தில் 45 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். அப்துல் ஷோயப் எனும் ஒருவர் மட்டுமே உயிர் தப்பி உள்ளார். அவரும் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் என்று ஹைதராபாத் போலீஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்து குறித்து பிரதமர் மோடி, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பலர் தங்களின் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.