டெல்லி குண்டுவெடிப்பு: 25 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை; அல் பலா பல்கலைக்கழக நிறுவனர் கைது

புதுடெல்லி: டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் அல் – பலா மருத்துவக் கல்லூரி தொடர்புடைய 25 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

கடந்த 10-ம் தேதி இரவு டெல்லி செங்கோட்டை அருகே ஒரு கார் வெடித்துச் சிதறியது. காஷ்மீரின் புல்வாமா பகுதியை சேர்ந்த மருத்துவர் உமர் நபி கார் குண்டு தாக்குதலை நடத்தியது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரணை நடத்தி வருகிறது. காஷ்மீர், டெல்லி, ஹரியானா, குஜராத், உத்தர பிரதேச போலீஸாரும் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

என்ஐஏவின் முதல்கட்ட விசாரணையில் காஷ்மீர், உத்தர பிரதேசத்தை சேர்ந்த மருத்துவர்கள் பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பில் இணைந்து டெல்லி குண்டுவெடிப்பை நிகழ்த்தி இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக 5 மருத்துவர்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். சுமார் 200 பேர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளனர். இதில் சந்தேகத்துக்குரிய 60 பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது.

டெல்லி குண்டுவெடிப்பில் தற்கொலைப் படை தீவிரவாதியாக செயல்பட்ட மருத்துவர் உமர் நபி மற்றும் மருத்துவர்கள் ஷாகின், முஜம்மில் ஷகீல் ஆகியோர் ஹரியானாவின் பரிதாபாத்தில் உள்ள அல் – பலா மருத்துவக் கல்லூரியில் பணியாற்றி வந்தனர். அந்த மருத்துவக் கல்லூரியை மையமாக கொண்டே டெல்லி குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டு இருக்கிறது.

இந்த சூழலில் அல் -பலா மருத்துவக் கல்லூரி மற்றும் அங்கு பணியாற்றிய தீவிரவாத மருத்துவர்களின் பணப் பரிமாற்றங்கள் குறித்து அமலாக்கத் துறை தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதன்படி அல் – பலா மருத்துவக் கல்லூரி உட்பட அதனோடு தொடர்புடைய 25 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். அப்போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதுகுறித்து அமலாக்கத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: அல்-பலா அறக்கட்டளை சார்பில் மருத்துவக் கல்லூரி நடத்தப்படுகிறது. இந்த அறக்கட்டளையுடன் 9 போலி நிறுவனங்களுக்கு தொடர்பு இருக்கிறது. போலி நிறுவனங்களுக்கு எந்த முகவரியும் இல்லை. ஒரே மொபைல் போன், இ-மெயில் முகவரி 9 நிறுவனங்களுக்கும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

சோதனையின் போது அல் – பலா மருத்துவக் கல்லூரியில் இருந்து முக்கிய ஆவணங்களை கைப்பற்றி இருக்கிறோம். அல் – பலா மருத்துவக் கல்லூரியின் நிறுவனர் ஜாவத் அகமது சித்திக் மீது பண மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஜாவத் அகமது சித்திக் கைது செய்யப்பட்டார். சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் (பிஎம்எல்ஏ) அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சித்திக்கின் தம்பி சவுத் சித்திக் வீடு டெல்லியில் உள்ளது. அங்கு சோதனை நடத்தப்பட்டது. டெல்லியின் ஷாகின் பாக் பகுதியில் அல் – பலா மருத்துவக் கல்லூரி நிர்வாகி ஒருவரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இதேபோல காஷ்மீரின் குல்காம் பகுதியில் சந்தேகத்துக்கு உரிய மருத்துவர் உமர் பருக் பட் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு உள்ளது.

வங்கி கணக்கு விவரங்கள், லேப் டாப், செல்போன்கள், டிஜிட்டல் கருவிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றன. அவற்றை ஆய்வு செய்து அல் – பலா அறக்கட்டளையின் பணப் பரிமற்றங்கள் கண்டறியப்படும். கடந்த சில மாதங்களுக்கு முன்பே அல் – பலா மருத்துவமனைக் கல்லூரி நிர்வாகம் மீது சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதன்படி கறுப்புப் பணம், வெளிநாட்டு நன்கொடை விதிகள் மீறப்பட்டது. சட்டவிரோதமாக நிதி திரட்டப்பட்டது குறித்து விசாரணை நடத்தினோம். இந்த பழைய வழக்கையும் தீவிரமாக விசாரிக்க முடிவு செய்துள்ளோம்.

வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி: வெளிநாடுகளில் இருந்து அல் -பலா அறக்கட்டளைக்கு நிதியுதவி கிடைப்பதாக உளவுத் துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக வளைகுடா நாடுகளில் இருந்து பணம் அனுப்பப்படுவதாக தெரிகிறது. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்படுகிறது. இந்தியா வில் யாரெல்லாம் அல் – பலா அறக் கட்டளைக்கு நிதியுதவி வழங்குகின்றனர் என்ற விவரங்களையும் சேகரித்து வருகிறோம். அல்-பலா மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்கும் காஷ்மீர் மாணவர்களின் முழுமையான பின்னணி விசாரிக்கப்படுகிறது. இவ்வாறு அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.