மதுரை மற்றும் கோவை மாநகரங்களுக்கு முன்மொழியப்பட்ட மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் தர மறுத்திருக்கிறது. இரண்டு நகரங்களிலும் மக்கள்தொகை 20 லட்சத்துக்கும் குறைவாக இருப்பதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, கோயம்புத்தூர் நகரத்தின் மக்கள்தொகை 15.84 லட்சமாகவும், மதுரை நகரத்தின் மக்கள்தொகை 15 லட்சமாகவும் இருப்பதாக, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் நவம்பர் 14, 2025 தேதி வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

மெட்ரோ ரயில் கொள்கை 2017ன் படி, மெட்ரோ ரயில் திட்டத்தைத் திட்டமிட நகரத்தின் மக்கள்தொகை 20 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்க வேண்டும்.
மேலும் அந்தச் செய்திக்குறிப்பில், “மெட்ரோ திட்டங்கள் செலவு மிகுந்தவை, நீண்டகால நிலைத்தன்மைக்காக கவனமாகத் திட்டமிடப்பட வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த நகரங்களுக்கு வலுவான பேருந்து அமைப்பு மற்றும் BRTS (விரைவான பேருந்து போக்குவரத்து) ஆகியவை பொருத்தமானதாக இருக்கலாம்” என்றும் கூறியுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட், கோயம்புத்தூர் மெட்ரோ ரயிலுக்கான விரிவான திட்ட அறிக்கையை ஜூலை 2023 இல் சமர்ப்பித்தது குறிப்பிடத்தக்கது.

‘நீண்டகால நிலைத்தன்மைக்காக’ மெட்ரோ ரயில் திட்டங்களைத் திட்டமிடுவதாகக் கூறும் மத்திய அரசு, 2011 மக்கள்கொகையைக் கொண்டு இத்திட்டத்தை நிராகரித்திருப்பது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் கடந்த 15 ஆண்டுகளாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடக்காத நிலையில் தற்போது கோவையில் 30 லட்சம் மக்கள் வாழ்வதாகவும் கூறப்படுகிறது.
போபால் மற்றும் பாட்னாவிற்கான மெட்ரோ திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், கோவை மற்றும் மதுரைக்கான மெட்ரோ திட்டத்தை வேண்டுமென்றே நிராகரித்துவிட்டதாகவும், இது கோவை மக்களுக்குச் செய்யும் துரோகம் என்றும் கோவை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி பி. ராஜ்குமார் குற்றம் சாட்டியிருப்பதாக தி இந்து தளம் செய்தி வெளியிட்டிருக்கிறது.
அத்துடன் மதுரை எம்.பி சு.வெங்கடேசன், “கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை 20 லட்சத்துக்கும் குறைவான மக்கள்தொகை இருப்பதாகக் கூறி நிராகரித்துள்ளது ஒன்றிய அரசு.
தமிழ்நாட்டின் மீதான ஒன்றிய அரசின் வஞ்சகம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
குருகிராம், புவனேஷ்வர், ஆக்ரா, மீரட் உள்ளிட்ட நகரங்ளின் மக்கள்தொகை 20 லட்சத்துக்கும் குறைவாக இருந்தபோதும் அங்கு மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதி வழங்கியது எப்படி?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.