டெல்லி,
தலைநகர் டெல்லியில் இன்று 7வது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் இந்தியா, இலங்கை உள்பட பல்வேறு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இதனிடையே, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மாநாட்டில் பங்கேற்கும்படி வங்காளதேச தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரஹ்மானுக்கு இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில், அஜித் தோவலின் அழைப்பை ஏற்று வங்காளதேச தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரஹ்மான் இன்று இந்தியா வந்தார். அவர் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மாநாட்டில் பங்கேற்றார்.
இந்த மாநாட்டின்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை வங்காளதேச தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, பாதுகாப்பு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் கடந்த சில மாதங்களாக விரிசல் நிலவி வரும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
முன்னதாக வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள நிலையில் அவருக்கு வங்காளதேச கோர்ட்டு மரண தண்டனை விதித்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் அஜித் தோவலுடன் வங்காளதேச தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரஹ்மான் மேற்கொண்ட சந்திப்பு பேசுபொருளாகியுள்ளது.