திருப்போரூர் அருகே உள்ள தையூர்: அழகீஸ்வரராய் அருளும் ஈசன், வழக்குகளில் வெற்றி தரும் முருகன்!

திருச்செந்தூரில் முருகப்பெருமான் சிவபெருமானை யுத்தம் முடிந்தபின் வழிபட்டார். அவரே யுத்தம் தொடங்கும் முன் வழிபட்ட தலம் தையூர். முருகப்பெருமான், திருப்போருரிலே தாரகாசுரனுடன் வான் மார்க்கமாக போரிடுவதற்கு முன்பாக, இத்தலம் வந்து சிவபெருமானை வழிபட்டார் என்கிறது தலபுராணம்.

சென்னை – பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ளது தையூர். காரப்பாக்கத்திலிருந்து சுமார் இரண்டரை கி.மீ. தொலைவிலும் மகாபலிபுரத்திலிருந்து 12 கி.மீ. தொலைவிலும் அமைந்திருக்கிறது.

திருவையாறு, திருமயிலை போல இவ்வூரிலும் சப்த சிவத்தலங்கள் இருந்திருக்கின்றன என்றால் இத்தலத்தின் மகிமையை என்னவென்று சொல்வது?!

தையூர் அழகீஸ்வரர்

`தை’ என்றால் அலங்காரமான என்று பொருள் கொள்ளலாம். இங்குள்ள ஈசன் அழகீஸ்வரர் என்ற திருநாமத்தோடே அருள்பாலிக்கிறார். பெயருக்கேற்ப இங்கே ஈசனின் திருக்கோலம் நம் மனதை மயக்குகிறது. சந்நிதியில் நின்ற கணத்தில் நம் மனதில் கவலைகள் எல்லாம் பறந்து மனம் இலகுவாகிறது. இதையே தமிழில் மிக அழகாக, ‘முருகீஸ்வரர்’ என்கிறார்கள்.

ஜடாவர்மன் சுந்தரபாண்டியனின் கல்வெட்டு ஒன்று இந்த ஈசனை `அழகிய சொக்கனார்’ என்று குறிப்பிடுகிறது. முற்காலத்தில் நிலவளமும் நீர்வளமும் நிறைந்த அற்புதபூமியாகத் திகழ்ந்திருக்கிறது இந்த தையூர்.

கிழக்குக் கடற்கரைச் சாலையில் இருக்கும் புகழ்பெற்ற திருக்கோயில் திருவிடந்தை நித்தியகல்யாண பெருமாள் கோயில்.

இந்த ஆலயத்தில் தையூர் அழகீஸ்வரர் கோயில் குறித்த 6 கல்வெட்டுகள் முக்கியமானவை. அவற்றில் மூன்று கல்வெட்டுகள், முதலாம் ராஜராஜன் காலத்திற்கும் முற்பட்டவை. அவற்றில் இவ்வூர் `தலசயனபுரம்’ என்று குறிப்பிடப்படுகிறது.

ஆலய முகப்பில் உள்ள மண்டபத் தூணில் முருகன் மயில் மீது ஏறி, வில் அம்போடு போர் புரிய புறப்படும் புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது. பிற்கால பல்லவர்கள் காலத்தில் இவ்வாலயம் கட்டப்பட்டதற்குச் சாட்சியாக, இங்கிருக்கும் பிள்ளையார் மற்றும் சண்டிகேஸ்வரர் திருமேனிகள் காட்சியளிக்கின்றன.

மூலவர் முருகீஸ்வரர், கிழக்கு நோக்கிய கருவறையில் காட்சியளிக்கிறார். கருவறை முகப்பில் இரு புறமும் குறுஞ்சிற்பங்கள் காணப்படுகின்றன. இவற்றில், ஆலயத்தில் நந்தா விளக்கு வைத்தவர்களின் உருவங்களும் செதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கருவறை முகப்பு, அர்த்த மண்டபம், மஹா மண்டபம் மற்றும் வெளிப்புறச் சுவர்களில் வியாக்கிரபாதரின் உருவம் காணப்படுகிறது. விமானம் ஒரு கோபுரத்தைப் போல் மூன்றடுக்கு கொண்டதாக விளங்குகிறது.

தையூர் மரகதாம்பிகை

மகா மண்டபத்தில் மணல் கல்லாலான முருகப் பெருமான் காட்சியளிக்கிறார். மணல்கல்லுக்கு `தைஜகம்’ என்று ஒரு பெயருண்டு. இந்த முருகனை வழிபட்டால் பகைவர் பற்றிய பயம் நீங்கி மனதில் நிம்மதி பிறக்கும் என்கிறார்கள்.

மேலும் வழக்குகளில் வெற்றி கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. தொடர்ந்து 9 திங்கட்கிழமைகள் இவரை வழிபட்டுவந்தால் கடன் பிரச்னைகள் விலகி செல்வ வளம் சேரும் என்பதும் நம்பிக்கை.

முருகனைச் சுற்றி தேவியர், சண்டிகேஸ்வரர், மற்றொரு முருகன், மகாவிஷ்ணு, பராசக்தி, காலபைரவர், சூரியன் ஆகியோர் காணப்படுகின்றனர். அம்பாள் மரகதாம்பிகை, தனிச் சந்நிதியில் அருள்கிறாள். பக்தர்களை நாடிச் சென்று அருள்புரிவதில் இந்த அம்பிகைக்கு நிகரில்லை.

கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒரு பெண் மணிக்கு பல ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லை. ஓரு நாள் அந்தப் பெண்ணின் கனவில் தோன்றிய மரகதாம்பிகை, ‘தையூருக்கு வந்தால், குழந்தை வரம் தருவேன்’ என அருளியிருக்கிறாள்.

இங்கு வழிபட்டுச் சென்ற ஓர் ஆண்டில் அப்பெண்ணுக்கு இரட்டைக் குழ்ந்தைகள் பிறந்தனவாம்.

தையூரைப் பற்றிய பண்டைய தகவல்கள், `உத்தண்டன் கோவை’ எனும் சிற்றிலக்கிய நூல் வாயிலாக வெளிப்படுகின்றன. இது பல பகுதிகளாகச் சுவடி வடிவில் கிடைத்ததனால், இதன் ஆசிரியர் யாரென உறுதிபட அறியமுடியவில்லை.

உத்தண்டன் என்பவன் இந்தப் பகுதியை ஆண்ட குறுநில மன்னன். இவன் காலத்தில் இவ்வூர் எத்தகைய சிறப்புகளைப் பெற்றிருந்தது என்பதை இந்நூல் குறிப்பிடுகிறது.

தையூர் முருகப்பெருமான்

வைகாசி விசாகத்தன்று இங்கு திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெறும். இதில் கலந்துகொள்ளும் திருமணமாகாத இளைஞர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.

ஐப்பசி அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை, ஆருத்ரா தரிசனம், மாசி சிவராத்திரி ஆகியவையும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. இந்த ஆலயம் காலை 7:30 முதல் 9:30 மணி வரையிலும்; மாலை 6 முதல் 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.