“டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” – பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர்

இஸ்லாமாபாத்,

டெல்லியில் கடந்த 10-ந் தேதி நிகழ்ந்த கார் வெடிப்பு பயங்கரவாத சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர். 27 பேர் படுகாயம் அடைந்தார்கள். இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் தேசிய புலனாய்வு அமைப்பு அதனை விசாரணைக்கு எடுத்தது. விசாரணை மிகத்தீவிரமாக சென்று கொண்டிருக்கிறது. இதற்கிடையில் சிகிச்சையில் இருந்த 2 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது.

இந்த கார் குண்டு தாக்குதலை நடத்தியது டெல்லி அருகே பரிதாபாத் பல்கலைக்கழகத்தில் டாக்டராக பணிபுரிந்து வந்த உமர் முகமது நபி என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தாக்குதல் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான் என்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் சவுத்ரி அன்வாருல்ஹக் தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கள் கிழமை நம்பிக்கையில்லாத வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததால், தனது பிரதமர் பதவியை பறிகொடுத்த சவுத்ரி அன்வாருல்ஹக், நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், “பலோசிஸ்தானை நீங்கள் (இந்தியா) தொடர்ந்து ரத்தம் சிந்த வைத்தால், செங்கோட்டை முதல் காஷ்மீரின் வனப்பகுதி வரை தாக்குதல் நடத்துவோம். எங்கள் ஷாகின்கள் அதை செய்தனர். அவர்களால் இன்னும் உடல்களை எண்ணி முடிக்க முடியவில்லை” என்று கூறினார்.

டெல்லி கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் பாகிஸ்தான் தலைவர் இவ்வாறு பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளையில் அவரது இந்த பேச்சுக்கு பாகிஸ்தான் அரசு எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இதற்கிடையே பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் கூறும்போது, இந்தியாவுடன் முழுமையான போர் சாத்தியத்தை நிராகரிக்க முடியாது. அதிகரித்து வரும் பிராந்திய பதட்டங்களுக்கு மத்தியில் பாகிஸ்தான் முழு விழிப்புடன் இருக்கிறது என்றார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.