2016-ஆம் ஆண்டு வெளியான ‘ஹேப்பி வெட்டிங்’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் கிரேஸ் ஆண்டனி.
அதன்பின், 2019-ஆம் ஆண்டு வெளியான ‘கும்பலங்கி நைட்ஸ் ‘ என்ற படத்தில் சிம்மி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து ‘ரோர்ஷாச்’, ‘தமாஷா’,’அப்பன்’ போன்று பல படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழில் 2022 ஆம் ஆண்டு வெளியான ‘சதுரங்க வேட்டை – 2’ நடித்திருந்தார். அதன்பிறகு ராம் இயக்கத்தில் வெளியான ‘பறந்து போ’ படத்தில் நடித்திருந்தார்.
சமீபத்தில் தான் அவருக்கு திருமணம் நடந்தது. தொடர்ந்து படங்களில் நடித்து வரும் கிரேஸ் ஆண்டனி உடல் எடையைக் குறைத்திருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கும் பதிவில், ” 8 மாதங்களில் 15 கிலோ குறைத்திருக்கிறேன். அதாவது 80 கிலோவில் இருந்து 65 கிலோ குறைத்திருக்கிறேன்.
உடல் எடையை குறைத்த இந்த பயணம் அவ்வளவு எளிதாக இல்லை. போராட்டமாக இருந்தது. நிறைய நாட்கள் அழுதிருக்கிறேன். என்னைப் பற்றி எனக்கே நிறைய சந்தேகங்கள் வந்தன.
என்னால் இதனை பண்ண முடியுமா? என்ற கேள்விகள் எல்லாம் எனக்குள் வந்தன. ஆனால் அந்தப் போராட்டங்களில் என்னுடைய வலிமையை நான் அறிந்தேன்.
எவ்வளவு சோர்வடைந்தாலும் தன்னம்பிக்கையை கைவிடவில்லை. என்னை சரியாக வழிநடத்திய பயிற்சியாளருக்கு நன்றி. இந்த மாற்றம் ஒரு புகைப்படம் மட்டும் அல்ல.
நீங்களும் முயற்சி செய்கிறீர்கள் என்றால் தொடர்ந்து செய்யுங்கள். ஒருநாள் திரும்பிப் பார்த்தால், ஒவ்வொரு கண்ணீர்க்கும், ஒவ்வொரு சந்தேகத்துக்கும், ஒவ்வொரு முயற்சிக்கும், மதிப்புண்டு என்று உங்களுக்கே தெரியும்” என்று பதிவிட்டிருக்கிறார்.