கோவை அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற பூத் கமிட்டி கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி கலந்து கொண்டார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “எஸ்ஐஆர் பணிகள் மிகவும் தொய்வாக உள்ளன. கோவை மாவட்டத்தில் திமுகவினர் அதிகாரிகளைத் தவறாகப் பயன்படுத்துகின்றனர்.

அதிமுக ஆட்சியின்போது கோவை மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டமும், ஏராளமான மேம்பாலங்களும் கொண்டு வரப்பட்டன. கோவையில் மெட்ரோ ரயில் கொண்டு வரப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
மெட்ரோ ரயில் திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு விளக்கம் கேட்டால் நிவர்த்திசெய்து அனுப்ப வேண்டும். கோவை, மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடியிடம் கடிதம் கொடுத்துள்ளார். 2026 தேர்தலில் வென்று எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகப் பதவியேற்றதும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்படும்.

தொழில் வளர்ச்சிக்கான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவும் மோடியிடம் வழங்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் கோவைக்கு எந்தத் திட்டமும் செயல்படுத்தப்படவில்லை.
கோவை மெட்ரோ ரயில் திட்டம் ஆரம்பகட்ட பணிகளுக்காக அதிமுக ஆட்சியில் ரூ. 3 கோடி ஒதுக்கப்பட்டது. கோவையின் அனைத்து வழித்தடங்களிலும் மெட்ரோ செல்லும் வகையில் நாங்கள் திட்டமிட்டிருந்தோம். திமுக ஆட்சியில் வெறும் இரண்டு வழித்தடங்களில் மட்டும் மெட்ரோ ரயில் திட்டமிட்டுள்ளனர்.

திமுகவில் 40 எம்பிக்கள் உள்ளனர். அவர்கள்தான் திட்டத்தைக் கேட்டு பெற வேண்டும். இங்கு போராடி என்ன பயன்? டெல்லி சென்று போராடுங்கள். நாடாளுமன்றத்தை முடக்கி திட்டத்தைப் பெறுங்கள்” என்றார்.