பெங்களூரு,
பெங்களூரு தகவல் தொழில்நுட்ப மாநாடு பெங்களூருவில் கடந்த 17-ந்தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற்றது. இதில் கடைசி நாள் மாநாட்டில் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா கலந்து கொண்டு பேசினார். அவர் 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாற அனைவரும் பங்களிப்பு வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். மேலும் அவர் பெங்களூருவின் போக்குவரத்து நெரிசல் குறித்து பேசியது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதுகுறித்து அவர் பேசியதாவது:-
“விண்வெளிக்கு பயணம் மேற்கொள்வதை விட பெங்களூரு சாலைகளில் உள்ள வாகன நெரிசலில் பயணிப்பது கடினமாக உள்ளது. நான் இங்கு பேசிய நேரத்தை விட மாரத்தஹள்ளி வழியாக வாகன நெரிசலில் பயணித்து நான் இந்த மாநாட்டிற்கு வந்து சேர்ந்த நேரம் 3 மடங்கு அதிகமானது.”
இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு அந்த மாநாட்டில் பங்கேற்ற மாநில தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி பிரியங்க் கார்கே உடனே பதில் அளித்தார். அவர் கூறுகையில், “பெங்களூருவில் வாகன நெரிசல் அதிகமாக இருப்பது உண்மைதான். விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு வருவதை காட்டிலும் மராத்தஹள்ளியில் இருந்து இந்த மாநாட்டிற்கு வந்து சேருவது சற்று கடினம் தான். வாகன நெரிசல் பிரச்சினைக்கு அரசு தீர்வு காணும். எதிர்காலத்தில் இத்தகைய தாமதம் ஏற்படுவதை தடுப்போம்” என்றார்.
பெங்களூரு போக்குவரத்து நெரிசல் குறித்து சுபான்ஷூ சுக்லா பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பேசு பொருளாக மாறியுள்ளது.