Dhoni vs Sanju Samson: ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மஞ்சள் ஜெர்சியில் விளையாடப்போகிறார் சஞ்சு சாம்சன். இவரை வாங்குவதற்காக பல ஆண்டுகளாக சென்னை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த ரவீந்திர ஜடேஜாவை ராஜஸ்தான் அணிக்கு கொடுத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். இருப்பினும், ஜடேஜா விரும்பியதாலேயே இந்த பிளேயர் எக்ஸ்சேஞ்ச் நிகழ்ந்ததையும் ராஜஸ்தான் அணியின் உரிமையாளர் வெளிப்படையாக தெரிவித்தார். இருப்பினும் சிஎஸ்கே கேப்டன் பொறுப்பை சஞ்சு சாம்சனுக்கு சிஎஸ்கே கொடுக்கவில்லை. ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன் பொறுப்பில் இருப்பார் என சிஎஸ்கே அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது.
Add Zee News as a Preferred Source
இது ஒருபுறம் இருக்க, மஞ்சள் ஜெர்சிக்கு வந்திருக்கும் சாம்சன், தோனிக்கு மாற்றாக பார்க்கப்படுகிறார். அவருடைய இடத்தை நிரப்புவதற்காகவே சென்னை அணி, எதிர்கால திட்டத்தோடு சஞ்சு சாம்சனுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாங்கியுள்ளது. அதனால், தோனி மற்றும் சாம்சன் இதுவரை விளையாடிய ஐபிஎல் போட்டிகளின் அடிப்படையில் யார் பெஸ்ட்? என்ற புள்ளிவிவரத்தை இங்கே பார்க்கலாம்.
தோனி Vs சாம்சன்
எம்.எஸ். தோனி 2008 முதல் ஆடும் ஜாம்பவான் பிளேயர். சாம்சனிடம் கேட்டால்கூட இதைத்தான் சொல்வார். ஆனால், சஞ்சு சாம்சன் 2013-ல் தான் தனது ஐ.பி.எல் பயணத்தைத் தொடங்கினார். இதனால், ஒட்டுமொத்தப் புள்ளிவிவரங்களில் தோனி பல மடங்கு முன்னால் இருக்கிறார். அவர் இதுவரை 242 இன்னிங்ஸ்களில் 5439 ரன்கள் எடுத்திருக்கிறார். ஆனால், இருவரின் ஆரம்பகால ஆட்டத்தை ஒப்பிட்டுப் பார்க்க, இருவரும் சமமாக ஆடிய முதல் 172 இன்னிங்ஸ்களின் புள்ளிவிவரங்களை எடுத்துக் கொள்ளலாம்.
இந்த ஒப்பீட்டில், சஞ்சு சாம்சன் 172 இன்னிங்ஸ்களில் 4704 ரன்களை எடுத்துள்ளார். அதேசமயம், எம்.எஸ். தோனி அதே எண்ணிக்கையிலான இன்னிங்ஸ்களில் 4461 ரன்களை எடுத்துள்ளார். ரன் குவிப்பில் பார்க்கும்போது சாம்சனே முன்னிலையில் இருக்கிறார். மேலும், சாம்சனின் ஸ்டிரைக் ரேட் 139.04. தோனியின் ஸ்டிரைக் ரேட்டை 137.94. சாம்சனின் ஸ்டிரைக் ரேட்டே சற்று அதிகமாக இருக்கிறது.
சாம்சன் ரன் குவிப்பிலும், ஸ்டிரைக் ரேட்டிலும் முன்னணியில் இருந்தாலும், தோனியின் பேட்டிங் சராசரி இங்கு தனித்து நிற்கிறது. தோனியின் சராசரி 42.49. சாம்சனின் சராசரி 30.94. இருவரின் ஆட்டத்தை ஒப்பிடும் அதேநேரதில் அவர்கள் விளையாடிய Batting Position-ஐயும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். சஞ்சு சாம்சன் அணியின் டாப் ஆர்டரில் களம் இறங்குகிறார். இதனால், அவருக்குப் போதுமான பந்துகள் கிடைக்கும். ஆனால், தோனியோ மிடில் அல்லது லோயர் மிடில் ஆர்டரில் தான் பெரும்பாலும் களம் இறங்குவார். அவர் களத்திற்கு வரும்போது, ஓவர்கள் மிகக் குறைவாக இருக்கும்; வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் மிக அதிகமாக இருக்கும். அழுத்தம் உச்சத்தில் இருக்கும்.
இத்தகைய இக்கட்டான சூழ்நிலைகளிலும், சாம்சனுக்கு நிகரான ஸ்டிரைக் ரேட்டைப் பராமரித்து, மிகச் சிறந்த சராசரியைக் கொண்டிருப்பதுதான், ஃபினிஷராகத் தோனி வைத்திருக்கும் அசைக்க முடியாத திறமை. எம்.எஸ். தோனி மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் ஐ.பி.எல் தொடரில் மிகச்சிறந்த பிளேயர்களே. அவரவர் நிலையில் ஜொலித்திருக்கிறார்கள். எனவே, இந்த ஓப்பீட்டில் யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. இருவருமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகப்பெரிய சொத்து தான்.
About the Author

Karthikeyan Sekar
I am Karthikeyan, a Senior Sub-Editor at Zee Tamil News Channel, bringing 10 years of experience in the media industry. I have extensive experience working in both news television and online website platforms.
…Read More