வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தம் குறித்து சென்னை மாவட்டத் தேர்தல் அலுவலர் இன்று நடத்திய அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் மற்ற கட்சியினர் பல்வேறு ஆட்சேபனைகளை முன்வைக்க, திமுகவின் பிரதிநிதி பெரிதாக எதையும் பேசாமல் கப்சிப்பென அமர்ந்திருந்த சம்பவம் ஏனைய கட்சியினரை குழப்பத்தியில் ஆழ்த்தியிருக்கிறது.

சென்னை மாவட்டத் தேர்தல் அலுவலரும் சென்னை மாநகராட்சி ஆணையருமான குமரகுருபரன் S.I.R குறித்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தை ரிப்பன் பில்டிங்கில் நடத்தியிருந்தார். காலை 11 மணிக்கு தொடங்கிய இந்தக் கூட்டம் ஒரு மணி நேரத்துக்கும் மேல் நடந்திருந்தது. இந்தக் கூட்டத்தில் அதிமுக, பாஜக, நாதக, தேமுதிக கட்சிகளின் சார்பில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் S.I.R நடைமுறை குறித்து பல்வேறு ஆட்சேபனைகளை முன்வைத்தனர். ‘இறந்தவர்கள் மற்றும் இடம்பெயர்ந்தவர்களின் பெயரை நீக்குவதில் தெளிவில்லை.
இறந்தவர்களின் பெயரை நீக்குவதற்கான படிவத்தை இப்போதுதான் கொடுக்கிறார்கள். BLO க்கள் திமுகவினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றனர்.’ என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியிருந்தார். ‘தூய்மைப் பணியாளர்களை BLO க்களாக பயன்படுத்துகிறார்கள்.’ என பாஜகவும் குற்றஞ்சாட்டியது. ‘குறுகிய காலத்தில் செய்வதால்தான் இப்படியொரு குழப்பம். தேர்தல் அதிகாரிகள் சொல்வது BLO க்களுக்கு சென்று சேரவில்லை. ஆளுக்கொரு அதிகாரம் செய்கிறார்கள்.’ என நாதக குற்றஞ்சாட்டியது.

S.I.R யை ஆதரிக்கும் அதிமுக, பாஜக கூட இன்றைக்கு சில ஆட்சேபனைகளை முன்வைக்க, திமுக மற்றும் காங்கிரஸை சேர்ந்த பிரதிநிதிகள் தேர்தல் அலுவலரிடம் S.I.R குறித்து எந்த ஆட்சேபனையையும் தெரிவிக்காதது கூட்டத்தில் கலந்துகொண்ட மற்ற கட்சிகளையே குழம்ப வைத்திருக்கிறது.
திமுக தலைவர் ஸ்டாலின் S.I.R குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் S.I.R யை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டமும் நடத்தியிருந்தனர்.
ஆனால், இன்று ரிப்பன் பில்டிங் கூட்டத்தில் திமுக சார்பில் கலந்துகொண்ட தலைமை செயற்குழு உறுப்பினர் கே.சந்துரு S.I.R க்கு எதிராகவோ அல்லது அதிலுள்ள சிக்கல்கள் குறித்தோ களத்திலுள்ள சிரமங்கள் குறித்தோ எதைப் பற்றியுமே பேசியிருக்கவில்லை.
இதுதொடர்பாக இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஒரு சிலரிடம் பேசினோம். ‘திமுகவினர் பொதுவெளியில் S.I.R யை கடுமையாக எதிர்க்கின்றனர். S.I.R அமல்படுத்தப்படுவதற்கு முன்பு தேர்தல் அலுவலர் நடத்திய கூட்டத்தில் கூட நிறைய விமர்சனங்களை முன்வைத்திருந்தனர். ஆனால், இன்றைய கூட்டத்தில் அவர்கள் S.I.R குறித்து எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. அதிலுள்ள நடைமுறை சிக்கல்களை பற்றியும் பேசவில்லை.

கடந்த கூட்டத்திலேயே மாநகராட்சி ஆணையர் S.I.R படிவத்தில் முதல் பத்தியை மட்டும் நிரப்பினால் கூட போதும் எனக் கூறிவிட்டார். ஆனால், களத்தில் BLO க்களுக்கு அந்த விஷயம் போய் சேரவே இல்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக புரிந்துகொண்டு குழப்பத்தோடு வேலை செய்கிறார்கள். அதேமாதிரி, இந்த S.I.R குறித்து BLO க்களுக்கும் கட்சிகளின் BLA க்களுக்கும் மண்டபங்களில் பயிற்சி முகாம்களை நடத்தினார்கள். தேர்தல் ஆணைய தரப்புக்கும் கட்சிகளின் பிரதிநிதிகல் தரப்புக்கும் மோதல் ஏற்பட்டு அந்தக் கூட்டங்கள் கூட முறையாக நடக்கவில்லை.
இப்போது வாக்காளர் உதவி மையங்கள் என ஒன்றை வைத்திருக்கிறார்கள். அதிலும் ஏகப்பட்ட குழப்பங்கள் இருக்கிறது. இது எதையுமே திமுக பேசவில்லை. மாறாக, BLO க்களை அதிகப்படுத்துங்கள் மற்றும் உதவி மையங்களை நீட்டியுங்கள் என பொதுவான கோரிக்கைகளை வைத்துவிட்டு அமைதியாகிவிட்டார்கள். களத்தில் திமுக செய்யும் தில்லுமுல்லுகளைப் பற்றி மற்ற கட்சியினர் பேசுகையில் மட்டுமே மறுத்து ஓங்கிப் பேசினர். மற்றபடி முழுக்க மௌனமாகவே இருந்தனர். தேசியளவில் தீவிர திருத்தத்தை எதிர்க்கும் காங்கிரஸூம் இங்கே சத்தம் காட்டவில்லை. வெளியில் அத்தனை தீவிரமாக இதை எதிர்த்துவிட்டு உள்ளரங்கில் பம்முவதை பார்த்தால் திமுக இரட்டை வேடம் போடுகிறதோ எனும் சந்தேகம்தான் வருகிறது.’ என்றனர்.
புரியாத புதிர்!