ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் இந்த 7 வீரர்களை யாரும் வாங்க போவதில்லை!

ஐபிஎல் 2026 சீசனுக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 16-ம் தேதி அபுதாபியில் நடைபெறவுள்ளது. இதில் பல இளம் வீரர்களுக்கு கோடிகள் கொட்டும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஒரு காலத்தில் ஐபிஎல்லை கலக்கிய சில மூத்த நட்சத்திரங்கள் இம்முறை விலைபோகாமல் ஏமாற்றம் அடைய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அவர்கள் யார் யார் என்று பார்ப்போம். ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். ஒவ்வொரு ஆண்டும் ஏலத்தில் நடக்கும் அதிரடி திருப்பங்கள் ஆட்டத்தை விட சுவாரஸ்யமாக இருக்கும். இந்த முறை மொத்தம் 77 இடங்களை நிரப்புவதற்காக 10 அணிகள் போட்டிபோடவுள்ளன. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் அதிகபட்சமாக 13 இடங்கள் காலியாக உள்ளன. பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் மிகக் குறைவாக 4 இடங்களே உள்ளன. இந்த சூழலில் வயது, ஃபார்ம் மற்றும் முந்தைய சீசன் செயல்பாடுகள் அடிப்படையில் பின்வரும் 7 வீரர்கள் ஏலத்தில் புறக்கணிக்கப்படலாம் என கருதப்படுகிறது.

Add Zee News as a Preferred Source

ஃபாப் டு பிளெசிஸ் (Faf du Plessis)

முன்னாள் தென்னாப்பிரிக்க கேப்டனும், சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தவருமான ஃபாப் டு பிளெசிஸுக்கு இப்போது வயது 41. கடந்த சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக 9 போட்டிகளில் விளையாடி 202 ரன்கள் மட்டுமே எடுத்தார். வயது மற்றும் குறைந்து வரும் வேகம் காரணமாக, இம்முறை எந்த அணியும் அவரை ஏலத்தில் எடுக்க முன்வர வாய்ப்பில்லை.

கிளென் மேக்ஸ்வெல் (Glenn Maxwell)

‘பிக் ஷோ’ என்று அழைக்கப்படும் மேக்ஸ்வெல், கடந்த சில சீசன்களாகவே தனது பெயருக்கேற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தத் திணறி வருகிறார். அதிக விலைக்கு வாங்கப்பட்டாலும், அதற்கேற்ற பங்களிப்பை அவரால் வழங்க முடியவில்லை. கடந்த முறை பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக 7 போட்டிகளில் வெறும் 48 ரன்கள் மட்டுமே எடுத்தார். தொடர் சொதப்பல் காரணமாக அணிகள் அவர் மீது நம்பிக்கை இழந்துள்ளன.

விஜய் சங்கர் (Vijay Shankar)

தமிழகத்தை சேர்ந்த ஆல்-ரவுண்டரான விஜய் சங்கர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த சீசனில் 6 போட்டிகளில் விளையாடி 118 ரன்கள் எடுத்தார். பந்துவீச்சில் பங்களிக்காதது அவருக்கு பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. இதுவரை 4 அணிகளுக்காக விளையாடியுள்ள அவருக்கு, 2026 சீசனில் வாய்ப்பு கிடைப்பது சந்தேகமே.

மொயீன் அலி (Moeen Ali)

இங்கிலாந்தின் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான மொயீன் அலிக்கு வயது 38. கடந்த முறை கேகேஆர் அணிக்காக 6 போட்டிகளில் விளையாடிய அவர், பேட்டிங்கில் வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்தார். பந்துவீச்சில் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினாலும், ஒட்டுமொத்த தாக்கம் குறைவாகவே இருந்தது. வயது மூப்பு மற்றும் சீரற்ற ஆட்டம் காரணமாக அவரும் விலைபோகாதோர் பட்டியலில் இணையலாம்.

ராகுல் திரிபாதி (Rahul Tripathi)

முன்பு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சிஎஸ்கே அணிகளில் ஆடிய ராகுல் திரிபாதி, கடந்த சீசனில் பெரும் சறுக்கலை சந்தித்தார். 5 போட்டிகளில் விளையாடி வெறும் 55 ரன்கள் மட்டுமே எடுத்தார். உள்ளூர் வீரர்களுக்கான போட்டி அதிகரித்துள்ள நிலையில், திரிபாதிக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம்.

மோஹித் சர்மா (Mohit Sharma)

37 வயதான வேகப்பந்து வீச்சாளர் மோஹித் சர்மா, கடந்த சீசனில் டெல்லி அணிக்காக 8 போட்டிகளில் ஆடி வெறும் 2 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றினார். அவரின் பந்துவீச்சு எடுபடாததால், இம்முறை அவர் ஏலத்தில் எடுக்கப்பட வாய்ப்புகள் மிகக் குறைவு.

கரன் சர்மா (Karn Sharma)

மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்த சுழற்பந்து வீச்சாளர் கரன் சர்மா, கடந்த சீசனில் 6 போட்டிகளில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். எகானமி ரேட் 8.53 ஆக இருந்தாலும், 38 வயதாகும் இவரைத் தொடர்ந்து அணியில் வைத்திருக்க நிர்வாகம் விரும்பவில்லை. இவரும் அன்சோல்ட் (Unsold) பட்டியலில் இடம்பெற வாய்ப்புள்ளது. ஐபிஎல் களம் எப்போதும் மாற்றங்களை வரவேற்கும். இந்த மூத்த வீரர்கள் ஓய்வுபெறும் நிலைக்குதள்ளப்பட்டாலும், அவர்கள் இதுவரை ஐபிஎல் அரங்கில் நிகழ்த்திய சாதனைகள் என்றும் நினைவுகூரப்படும்.

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.