மும்பை கிரிக்கெட்டில் ஓரங்கட்டப்பட்ட பிருத்வி ஷாவுக்கு மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் மிகப்பெரிய அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. சையத் முஷ்டாக் அலி டி20 தொடருக்கான மகாராஷ்டிரா அணியின் கேப்டனாக அவர் அதிரடியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய ஒருநாள் அணியில் ருதுராஜ் கெய்க்வாட் இடம்பிடித்துள்ளதால், இந்த தலைமை பொறுப்பு பிருத்வி ஷாவை தேடி வந்துள்ளது. சர்ச்சைக்குரிய ஃபார்ம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை காரணமாக மும்பை ரஞ்சி அணியிலிருந்து கடந்த ஆண்டு நீக்கப்பட்டவர் பிருத்வி ஷா. இதனால் மனம் சோர்ந்துவிடாமல், இந்த சீசனின் தொடக்கத்தில் மும்பையிலிருந்து விலகி மகாராஷ்டிரா அணியில் இணைந்தார். அங்கு தனது பழைய அதிரடி ஆட்டத்தை மீட்டெடுத்துள்ள அவர், தற்போது அணியை வழிநடத்தும் முக்கிய பொறுப்பைப் பெற்றுள்ளார்.
Add Zee News as a Preferred Source

ருதுராஜ் இல்லாததால் வந்த வாய்ப்பு
மகாராஷ்டிரா அணியின் வழக்கமான கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். இதனால் அவரால் உள்ளூர் டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி டிராபியில் லீக் சுற்றில் பங்கேற்க முடியாது. இந்த வெற்றிடத்தை நிரப்பவே பிருத்வி ஷா கேப்டனாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா அணிக்காக ரஞ்சி டிராபியில் விளையாடிய பிருத்வி ஷா, 5 போட்டிகளில் (7 இன்னிங்ஸ்) மொத்தம் 470 ரன்கள் குவித்துள்ளார். இதில் ஒரு அதிரடி இரட்டை சதம் (சண்டிகர் அணிக்கு எதிராக 156 பந்துகளில் 222 ரன்கள்) மற்றும் மூன்று அரை சதங்கள் அடங்கும். அவரது பேட்டிங் சராசரி 67.14 ஆக உள்ளது. அணியின் அதிகபட்ச ரன் குவிப்பாளர் அவர் தான் என்பதால், கேப்டன் பதவிக்கு அவர் தகுதியானவர் என்று தேர்வுக்குழு முடிவு செய்துள்ளது.
ஐபிஎல் ஏலத்திற்கு முன் ஜாக்பாட்
கடந்த ஐபிஎல் ஏலத்தில் பிருத்வி ஷா எந்த அணியாலும் வாங்கப்படாமல் போனது அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு பெரிய சறுக்கலாக பார்க்கப்பட்டது. ஆனால், வரும் டிசம்பர் 15-ம் தேதி அபுதாபியில் நடைபெறவுள்ள ஐபிஎல் ஏலத்திற்கு சில நாட்களுக்கு முன்பு, கேப்டன் பொறுப்பு கிடைத்திருப்பது அவருக்கக் கிடைத்த ‘ஜாக்பாட்’ வாய்ப்பாகும். இந்த தொடரில் அவர் சிறப்பாக செயல்பட்டால், ஐபிஎல் அணிகளின் கவனம் மீண்டும் அவர் பக்கம் திரும்பும். சையத் முஷ்டாக் அலி தொடரில் மகாராஷ்டிரா அணி Group B பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் ஜம்மு-காஷ்மீர், ஹைதராபாத், சண்டிகர், பீகார், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் மற்றும் கோவா ஆகிய அணிகள் உள்ளன. பிருத்வி ஷா தலைமையிலான மகாராஷ்டிரா அணி, தனது முதல் போட்டியில் நவம்பர் 26-ம் தேதி ஜம்மு-காஷ்மீர் அணியை எதிர்த்து கொல்கத்தாவில் விளையாடவுள்ளது.
மகாராஷ்டிரா அணி விவரம்
பிருத்வி ஷா (கேப்டன்), அர்ஷின் குல்கர்னி, ராகுல் திரிபாதி, அசிம் காசி, நிகில் நாயக் (விக்கெட் கீப்பர்), ராமகிருஷ்ண கோஷ், விக்கி ஓஸ்ட்வால், தனய் சங்வி, முகேஷ் சவுத்ரி, பிரசாந்த் சோலங்கி, மந்தர் பண்டாரி, ஜலஜ் சக்சேனா, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், யோகேஷ் டோங்கரே மற்றும் ரஞ்சித் நிகாம்.
About the Author
RK Spark