கற்பனைகூட செய்து பார்க்க முடியாத விஷயத்தை சாத்தியப்படுத்திக் காட்டுவதுதான் ஏ.ஐயின் மேஜிக்.
கடந்த சில நாட்களாக கோலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களின் ஏ.ஐ புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த உச்ச நட்சத்திரங்கள் அணிந்திருக்கும் எளிய உடை, அவர்கள் இருக்கும் இடம் என அந்த ஏ.ஐ புகைப்படத்தில் பல ஹைலைட்டான விஷயங்கள் இருக்கின்றன.

சொல்லப்போனால், அந்தப் புகைப்படத்தை உற்று நோக்கினால்தான் ஏ.ஐ என்பதே தெரிய வரும்.
அந்தளவிற்கு ரியலாக அதனை செய்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த ஹரிஹரன்.
அவரிடம் நாம் பேசுகையில், “வணக்கம்ங்க! ரொம்ப நிறைவாக இருக்கு. நாங்க செய்த ஏ.ஐ எடிட்ஸ் இப்போ சமூக வலைதளப் பக்கங்கள்ல வைரலாகப் போயிட்டு இருக்கு.” என மகிழ்ச்சியை வெளிப்படுத்தியவரிடம் அவரைப் பற்றிக் கேட்டோம்.
என்னுடைய பெயர் ஹரிஹரன், சென்னையில்தான் வசிக்கிறேன். இப்போ நான் ‘Hoohoocreations80’னு ஒரு டிஜிட்டல் மார்கெட்டிங் நிறுவனத்தையும் நடத்தி வர்றேன்.
ஏ.ஐ இன்னைக்கு முக்கியமானதாக மாறியிருக்கு. அதை நேர்மறையாக என்னுடைய கரியருக்கும் பயன்படுத்திக்குவேன்.
கடந்தாண்டுதான் ஏ.ஐ சார்ந்த எங்களுடைய நிறுவனத்தைத் தொடங்கினோம். மக்களுக்கு ஏ.ஐ பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தணும்ங்கிறதுதான் எங்களுடைய நோக்கமாக இருக்கு.

நாங்க இன்ஸ்டாகிராமை எங்களுடைய மார்கெட்டிங் வேலைகளுக்கான கருவியாகப் பயன்படுத்திட்டு வர்றோம். அதுலதான் ஏ.ஐ எடிட்ஸ் பதிவுகளும் போட்டு வர்றோம்.
இப்போ வைரலாகி இருக்கிற இந்த ஏ.ஐ புகைப்படங்களை கூகுள் ஜெமினி, நானோ பனானா ப்ரோ டூலைப் பயன்படுத்திதான் உருவாக்கினோம்.
நானோ பனானா ரொம்பவே ரியலாக போட்டோஸை உருவாக்கித் தருது. சினிமாத் துறை தொடங்கி பல இடங்களிலும் இதே டூல்தான் பயன்படுத்தப்படுது.
ரொம்பவே ரியலிஸ்டிக்காக ரிசல்ட் கொடுக்குது. சொல்லப்போனால், இந்த ஏ.ஐ எடிட்டிற்குப் பின்னாடி பெரிய கதைகளெல்லாம் கிடையாது.
நம்ம அன்றாட வாழ்க்கையில செய்யுற விஷயங்களை சினிமா பிரபலங்கள் செய்தால் எப்படி இருக்கும்னு யோசிச்சு செய்ததுதான். அந்தக் கற்பனைக்குதான் இப்போ ஏ.ஐ மூலமாக வடிவம் தந்திருக்கோம்.
மக்களுக்கும் அது ரொம்ப பிடிச்சிருக்கு. சொல்லப்போனால், திரைப்பிரபலங்களுக்கு இப்படி ஜாலியாக சினிமா நண்பர்களோடு வெளியே போய் என்ஜாய் பண்ணணும்ங்கிற எண்ணம் இருக்கும்.
ஆனா, அவங்க பிரபலமாக இருப்பதனால ரியல் லைஃப்ல இதெல்லாம் சாத்தியம் கிடையாது. எந்த விஷயத்தைப் பண்ண முடியாதோ, அதை சாத்தியப்படுத்திக் காட்டுறதுதான் ஏ.ஐ. மக்களும் ரியலிஸ்டிக்காக இருக்குனு பாராட்டு தெரிவிக்கிறாங்க.
மற்ற விஷயங்களைத் தாண்டி, வடசென்னை ஏரியா, அதனுடைய லைட்டிங், பிரபலங்கள் அணிந்திருக்கிற எளிமையான உடை போன்ற விஷயங்களைதான் இதனுடைய ஹைலைட்டாக அமைந்திருக்குனு சொல்லலாம்.

மக்களுக்கு பிடிக்கணும்ங்கிற நோக்கத்துலதான் ஒவ்வொரு வேலையையும் செய்வோம். ஆனா, இந்தளவுக்கு எங்களுடைய போஸ்ட் டிரெண்டாகும்னு நினைச்சுக்கூட பார்க்கல.
வைரல் எப்போதுமே நாம செயற்கையாக உருவாக்க முடியாது. அது தானாகவே நடக்கணும். அது இப்போ இந்த ஏ.ஐ பதிவுக்கு நடந்திருக்கு. மக்கள் நிறையப் பேர் பாராட்டு தெரிவிக்கிறாங்க.
சில மீடியாக்கள்ல இருந்து பேட்டிக்கும் எங்களைக் கூப்பிடுறாங்க. இது புதிய அனுபவமாக இருக்கு. எங்களுக்கு ஏ.ஐ மூலமாக அதை செய்யணும், இதை செய்யணும்னு பெரிய திட்டமிடல்களெல்லாம் கிடையாதுங்க!
இப்படியான ஒரு அப்டேட் வந்திருக்குனு மக்களுக்கு தெரிவிக்கணும். அவ்வளவுதான்!” என்றார் உற்சாகத்துடன்.