ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பை 2026: போட்டி அட்டவணை வெளியீடு.. இந்தியா – பாக். ஆட்டம் எப்போது தெரியுமா..?

மும்பை,

நடப்பு சாம்பியன் இந்தியா உள்பட 20 அணிகள் பங்கேற்கும் 10-வது ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா, இலங்கை இணைந்து நடத்துகின்றன. அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி 7-ந்தேதி தொடங்கி மார்ச் 8-ந்தேதி வரை இந்த போட்டி நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, முதல் முறையாக தகுதி பெற்றுள்ள இத்தாலி உள்பட 20 அணிகள் பங்கேற்கின்றன.

அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெறும். இந்நிலையில் இந்த தொடருக்கான போட்டி அட்டவணை இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பரம எதிரிகளான இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளன. அதன்படி ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் நெதர்லாந்து. நமீபியா, அமெரிக்கா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, அயர்லாந்து, ஓமன், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகள் இடம்பெற்றுள்ளன. ‘சி’ பிரிவில் வங்காளதேசம், இங்கிலாந்து, இத்தாலி, நேபாளம் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடம்பெற்றுள்ளன. ‘டி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், கனடா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் யுஏஇ அணிகள் இடம்பெற்றுள்ளன.

இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது. பிப்ரவரி 7-ந்தேதி மும்பையில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து நமீபியாவுடன் 12-ந்தேதி டெல்லியில் மோதுகிறது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் பிப்ரவரி 15-ந்தேதி கொழும்புவில் நடைபெற உள்ளது. இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்துடன் 18-ந்தேதி அகமதாபாத்தில் மோதுகிறது.

இந்தியாவில் அகமதாபாத், சென்னை கொல்கத்தா, மும்பை, டெல்லி ஆகிய நகரங்களிலும் இலங்கையில் கொழும்பு மற்று கண்டியிலும் போட்டிகள் நடைபெற உள்ளன.

2026 டி20 உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ள 20 அணிகளின் விவரம்:

இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்காளதேசம், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், கனடா, இத்தாலி, நெதர்லாந்து, நமிபியா, ஜிம்பாப்வே, நேபாளம், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.