கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதியில் சுற்றி திரிந்த ரோலக்ஸ் காட்டு யானையை வனத்துறை கடந்த அக்டோபர் 17 ம் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். சுமார் 3 வாரங்களுக்கு மேல் அந்த யானை ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட டாப்ஸ்லிப் வரகழியாறு மரக்கூண்டில் வைத்து கண்காணிக்கப்பட்டு வந்தது.

இதையடுத்து கடந்த நவம்பர் 12 ம் தேதி அந்த யானை மந்திரி்மட்டம் வனப்பகுதியில் விடப்பட்டது. இந்நிலையில் இன்று மதியம் ரோலக்ஸ் யானை திடீரென்று உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் வெங்கடேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ரோலக்ஸ் யானைக்கு ரேடியோ சிக்னல் பொருத்தி தினமும் நேரில் கண்காணித்து வந்தோம். இன்று (26.11.25) பிற்பகல் 2 மணி வரை யானை தொடர் கண்காணிப்பில் இருந்தது. யானை ஓடை அருகே தண்ணீர் குடிக்க சென்ற போது எதிர்பாராத விதமாக வழுக்கி விழுந்தது.

சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு ரோலக்ஸ் யானை அருகே சென்று பரிசோதித்த போது உயிரிழந்தது தெரியவந்தது. யானை மரணம் குறித்து விசாரிப்பதற்கு தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. யானை இறக்கமான பகுதியில் வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளது.
அது பெரிய அளவிலான சரிவு கிடையாது. சிறிய குன்றுகள் உள்ள பகுதி தான். மண் வழுக்கும் தன்மை கொண்டதால் வழுக்கி விழுந்து இறந்துள்ளது. ரோலக்ஸ் யானை ஆரோக்கியமாக இருந்தது. நல்ல முறையில் உணவு உட்கொண்டு வந்தது. இதேபோல நீலகிரியில் பிடிக்கப்பட்ட ராதாகிருஷ்ணன் கடந்த சில நாள்களுக்கு முன்பு நெல்லை அருகே பாறையில் இருந்து தவறி விழுந்து இறந்தது.

தற்போதுவரை 23 யானைகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. அவற்றில்10% மட்டுமே மாற்று இடங்களில் தங்கியுள்ளன. மற்ற யானைகளை மீண்டும் பிடிக்கும் நிலை அல்லது இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.” என்றார்.