Doctor Vikatan: என் அக்காவுக்கு 45 வயதாகிறது. ப்ளீடிங் பிரச்னைகள் காரணமாக பல வருட சிகிச்சை எடுத்தார். இப்போது கர்ப்பப்பையை நீக்குவதுதான் ஒரே தீர்வு என்கிறார் மருத்துவர். தேவைப்பட்டால் சினைப்பைகளையும் சேர்த்தே அகற்ற வேண்டியிருக்கலாம் என்கிறார். இப்படி கர்ப்பப்பையை அகற்றும்போது சினைப்பைகளையும் சேர்த்தே அகற்ற வேண்டுமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.

வழக்கமாக, 45 வயதுக்குக் குறைவான பெண்களுக்கு, சினைப்பையில் பிரச்னைகள் இல்லாத பட்சத்தில் கர்ப்பப்பையை அகற்றும்போது, சினைப்பைகளையும் சேர்த்து அகற்ற மாட்டோம். கர்ப்பப்பையையும், சினைக்குழாய்களையும் மட்டும் நீக்கிவிடுவோம்.
சினைப்பைகளை பத்திரப்படுத்தவே நினைப்போம். அதையும் தாண்டி, சிலருக்கு குடும்பப் பின்னணியில் யாருக்கேனும் சினைப்பை புற்றுநோய் இருந்தால், கர்ப்பப்பையை நீக்கும்போது சினைப்பைகளையும் நீக்க மருத்துவர்கள் பரிந்துரைப்பதுண்டு.
இந்தியாவைப் பொறுத்தவரை பெண்களின் சராசரி மெனோபாஸ் வயது 50- 51 என்று இருக்கிறது. அந்த வயது வரை இதயத்தை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளவும், எலும்புகளின் ஆரோக்கியத்தைப் பேணவும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பு மிக அவசியம்.
அந்த ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனை சுரப்பவை சினைப்பைகள் என்பதால், முடிந்தவரை அவற்றை அகற்றாமல் பத்திரப்படுத்தவே முயல்வோம்.
குழந்தைப்பேற்றை முடித்துவிட்ட பெண்கள், கர்ப்பப்பையில் ஏதேனும் பிரச்னைகள் வந்தால், அதை அகற்றத் தயங்க வேண்டியதில்லை. அப்போதும் சினைப்பைகளைப் பாதுகாக்க வேண்டியது அவசியம்.

கர்ப்பப்பையை அகற்றும்போது, கர்ப்பப்பையின் வாயும் அகற்றப்படும். அதன் விளைவாக சில பெண்களுக்கு வெஜைனா வறண்டுபோவதால் தாம்பத்திய உறவில் சிக்கல்கள் வரலாம்.
இதைத் தவிர்க்க, ‘சப்டோட்டல் ஹிஸ்டரெக்டமி’ (subtotal hysterectomy) என்றொரு வழி இருக்கிறது. அதில் கர்ப்பப்பை வாய்ப்பகுதியைத் தக்கவைத்துவிடுவோம். எனவே, வெறும் ப்ளீடிங் தொடர்பான பிரச்னைக்காக மட்டும் கர்ப்பப்பையை நீக்குவோருக்கு, இது சிறந்த ஆப்ஷனாக இருக்கும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.