கோவா,
11-வது ‘பிடே’ உலகக் கோப்பை செஸ் போட்டி கோவாவில் நடந்தது. இதன் இறுதி ஆட்டத்தில் உஸ்பெகிஸ்தான் கிராண்ட்ஸ்மாஸ்டர் ஜவோகிர் சிந்தாரோவ் – சீன கிராண்ட்மாஸ்டர் வெய் யி ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர். இறுதி சுற்றின் முதல் இரு ஆட்டங்களும் ‘டிரா’வில் முடிந்ததால் வெற்றியாளரை தீர்மானிக்க ‘டைபிரேக்கர்’ நேற்று நடந்தது.
விரைவாக காய் நகர்த்தக்கூடிய டைபிரேக்கரின் முதலாவது ஆட்டத்தில் வெள்ளை நிற காய்களுடன் ஆடிய ஜவோகிர் சிந்தாரோவ் 45-வது நகர்த்தலில் ‘டிரா’ செய்தார். இதைத்தொடர்ந்து நடந்த 2-வது ஆட்டத்தில் கருப்பு நிற காய்களுடன் ஆடிய ஜவோகிர் சிந்தரோவ் 60-வது நகர்த்தலில் வெய் யியை அடக்கினார். டைபிரேக்கர் முடிவில் ஜவோகிர் சிந்தாரோவ் 2.5-1.5 என்ற புள்ளி கணக்கில் வெய் யியை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இதன் மூலம் 19 வயதான ஜவோகிர் உலகக் கோப்யை உச்சி முகர்ந்த இளம் வீரர் என்ற பெருமையை பெற்றார்.