BB Tamil 9 Day 53: வியானா செய்த அலப்பறைகள்; அந்நியன் அவதாரம் எடுக்கும் பாரு!

பாருவிற்கு வார்டன் பதவி கொடுத்தாலும் கொடுத்தார்கள். இன்றைய நாள் முழுக்க அவருக்கு சோதனை. ‘வார்டன்னா அடிப்போம்’ மோமெண்ட்டில் மாணவர்கள் இருந்தார்கள்.  சின்ன விஷயத்தைக் கூட ஊதிப்பெருக்கி மூன்று பிரமோக்களிலும் வந்து விட்டார் பாரு. 

பாருவிற்கு, வசந்தி என்று பெயர் வைத்ததற்குப் பதிலாக வதந்தி என்று வைத்திருக்கலாம். 

க்யூன்ட்ஸ் என்கிற பெயரில் வியானா செய்தது முழுக்க எரிச்சலூட்டுபவையாக இருந்தன. 

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? –  நாள் 53

காலையிலேயே தனது திருவிளையாடலை துவங்கினார் வியானா. நோட்டீஸ் போர்டில் தர்மலிங்கம் வாத்தியாரையும் வசந்தி மேமையும் இணைத்து, ஹார்ட் அம்புக்குறி எல்லாம் போட்டு கார்ட்டூன். இருவரும் ஒழிக என்று சாபம் வேறு. 

ஸ்கூல் டாஸ்க்கில், பொருட்களை ஒளித்து வைப்பதுதான் சுவாரசியம் என்று நினைத்து விட்டார்கள் போல. சபரியும் விக்ரமும் சேர்ந்து பாருவின் சேலையை ஒளித்து வைத்து பிராங்க் செய்ய முடிவு செய்தார்கள். இது ஒரு விளையாட்டுதான். பாரு இதை விளையாட்டாக எடுத்துக் கொண்டிருக்கலாம். அல்லது அவரே சொன்னது போல் ஏதாவது மாடர்ன் டிரஸ்ஸை போட்டுக் கொண்டிருக்கலாம். 

ஆனால் “என்ன இப்படிப் பண்றாங்க… சேலையைக் காணோம்ன்னு எப்படி நான் கேட்க முடியும்… கூச்சமா இருக்கு.  இவங்களுக்கு நான் ஏன் வடிச்சுக் கொட்டணும்..” என்றெல்லாம் புலம்ப ஆரம்பித்து விட்டார். ‘என் முடியை வேற கட் பண்ணிட்டாங்க’ என்கிற அனத்தல் வேறு. அது சுபிக்ஷாவின் முடி என்கிற பிராங்க் நேற்றே தெரிவிக்கப்பட்டு விட்டது. அழுது புலம்பிய பாருவிற்கு ஆபத்பாந்தவனாக வந்து ஆறுதல் சொன்னார் கம்மு. 

“அவங்க ரொம்ப அழறாங்க.. கொடுத்துடுங்க” என்று ரம்யா சொல்ல, “இப்பத்தான் ஆரம்பிச்சிருக்கோம். அதுக்குள்ளயா?” என்று இந்த விளையாட்டை இழுக்க முயன்றார் விக்ரம். என்றாலும் பாருவிடம் எதற்கு வம்பு என்று சேலையைக் கொண்டு போய் கொடுத்து விட்டார். “இது நல்லால்ல” என்று அதன் பிறகும் அழுது ஊரைக் கூட்டினார் பாரு.

பாருவிற்குப் போட்டியாக வியானா செய்த அலப்பறைகள்

பாருவின் அலப்பறை ஒரு பக்கம் இப்படியென்றால், இன்னொரு பக்கம் வியானாவின் அலப்பறை தொடர்ந்தது. ‘க்யூட்னஸைக் குறைச்சுக்கோ’ என்று ராணவ்வே அட்வைஸ் செய்தாலும் இவர் திருந்துகிற பாடாக இல்லை. மாறாக எரிச்சலூட்டும் வகையில் கூடியிருக்கின்றன. டாஸ்க் லெட்டரை கிழித்துப் போட்டு விக்ரமின் கோபத்திற்கு ஆளானார். (ஆனாலும் விக்ரம் ஓவர் பிக் பாஸ் கோண்டாக இருக்கிறார்!) 

வகுப்பில் சேட்டை செய்த வியானாவிடம் “மேக்கப் போட்டு வெளித் தோற்றம் மட்டும் அழகாக இருந்தால் போதாது. உள்ளமும் அழகாக இருக்க வேண்டும்’ என்கிற மெசேஜ் சொல்லி, அதற்கு தண்டனை தரும் பொறுப்பை விக்ரமிடம் ஒப்படைத்தார் கனி. சிவப்பு லிப்ஸ்டிக், கறுப்பு நிறம் என்று கலந்து வியானாவின் முகத்தில் பூசி ‘ஜோக்கர்’ படத்தின் Joaquin Phoenix மாதிரி ஆக்கி விட்டார் விக்ரம். 

இந்த சிறிய தண்டனைக்கும் அழுது சீன் போட்டார் வியானா. “உனக்கு நல்லாதான் இருக்கு. நீதான் தனியா தெரியற” என்று ஆறுதல் சொன்னார் ரம்யா. கோபித்துக் கொண்டு கட்டிலின் அடியில் ஒளிந்து கொண்டார் வியானா. எஃப்ஜேவும் சுபிக்ஷாவும் வீடு முழுக்க தேடி அவரைச் சமாதானப்படுத்தி அழைத்து வந்தார்கள். ‘I hate tamil amma’ என்று போர்டில் எழுதி பழிதீர்த்துக் கொண்டார் வியானா. 

மாணவர்கள் இணைந்து ஒரு புகார் பெட்டியைக் கொண்டு வந்தார்கள். முழுக்க முழுக்க அது கிச்சன் ஏரியா தொடர்பானது. ஏன் வசந்தி மேம் தொடர்பானது என்றே சொல்லி விடலாம். 

“சாப்பாட்டுலதான் உப்பு, காரம் இல்லைன்னு பார்த்தா.. கிச்சன் ஏரியாவே சுத்தமாவே இல்ல” என்று மாணவர்கள் குறை சொன்னார்கள். ‘தர்மத்துக்கு doing..’ என்று சொல்லி பாருவையே சிரிக்க வைத்தார் அரோரா. 

தர்மலிங்கம் – வசந்தி – வதந்தி – பொங்கியெழுந்த பாரு

அடுத்த கடிதம்தான் வெடிகுண்டாக மாறியது. பாருவையும் எஃப்ஜேவையும் கிச்சன் ஏரியாவில் ஒன்றாகப் போட்டால் பிரச்சினைகள் நடக்கும், கன்டென்ட் கிடைக்கும் என்று கணக்கு போட்ட பிக் பாஸின் பிளான் வேலை செய்தது. இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை. இதற்கிடையில் எஃப்ஜேவின் விரலில் அடிபட்டதால் அவர் ஒதுங்கிக் கொண்டார். 

கனியை மீறி கிச்சன் ஏரியாவை கைப்பற்றி பிறகு இந்த வீட்டையே கைப்பற்றுவேன் என்று வீரசபதம் ஏற்ற பாருவிற்கு ஒழுங்காக சுடுதண்ணீர் கூட வைக்கத் தெரியாது என்கிற உண்மை பிறகு தெரிய வந்தது. அதைக் கூட அவருக்கு யாராவது பிராம்ப்ட் செய்ய வேண்டும். 

இந்த நிலைமையில் பாருவிற்கு உதவியாக அமித் வந்தார். அவருடைய ஆலோசனைகளின் படி சமையல் பணிகளை பாரு ஒருவழியாக ஒப்பேற்றினார். இருவரும் பேசுவதை வைத்து மாணவர்கள் கிண்டல் செய்திருக்கிறார்கள். பாருவும் அப்போதைக்கு ஜாலியாக எடுத்துக் கொண்டார் என்று சொல்லப்படுகிறது. 

கிச்சன் ஏரியாவில் இருந்து தான் வெளியேற்றப்பட்டதற்கு பழிவாங்க எஃப்ஜே ஒரு மொட்டை கடுதாசி எழுதினார். அதை எழுதியது திவ்யா. தர்மலிங்கத்தை அவர் வசம் கொண்டு வர வைக்க குட்டி வார்டனை பாரு வெளியே துரத்தி விட்டார் என்பது மாதிரியான கான்டெக்ஸ்ட். 

இந்தக் கடிதத்தை மாணவர்கள் சபையில் வாசிக்கும் போது அனைவருடனும் இணைந்து சிரித்து மகிழ்ந்தார் பாரு. ‘பாரு -கம்ருதீனை பிரித்து வைத்த பெருமை அரோராவையே சேரும்’ என்கிற கடிதத்திற்கும் வெடித்து சிரித்தார் பாரு. 

டிராமா க்வீனாக நடித்து அனுதாபம் தேடுகிறாரா பாரு?

தேவாங்கு ஜோக் மாதிரி சிறிது நேரத்திற்குப் பின் பாருவிற்கு திடீர் ஞானோதயம் வந்து விட்டது. ‘மக்களே.. இந்தக் கடிதத்தை உன்னிப்பா வாசித்துப் பாருங்க. இதன் வாசகங்கள் வில்லங்கமா இருக்கு. இது காரெக்டர் அஸாஸினேஷன்” என்று ஊரைக்கூட்ட ஆரம்பித்தார். 

அமித்தும் இதில் சம்பந்தப்பட்டிருப்பதால் “இதை அப்படியே ஜோக்கா விட்டா அமுங்கிடும். இதை மறுபடி மறுபடி ஹைலைட் பண்ணாதீங்க.. என் பெயரும் இதில இருக்கு” என்று பாருவிடம் கெஞ்சினார். ஆனால் பாரு அதைக் கேட்கவில்லை. ‘அடப் போங்க சார்.. ஒரு கன்டென்ட் கிடைச்சிருக்கு. இதை சும்மா விட முடியுமா’ என்று தீர்மானித்துக் கொண்டவரைப் போல ‘பசுபதி கூட்றா பஞ்சாயத்தை.. எட்றா வண்டியை’ என்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்தார். 

பிரின்சிபல் பிரஜின் தலைமையில் இதற்கான பஞ்சாயத்து கூடியது. “இது பெரிய விஷயமா எனக்குப் படலை. திரும்பத் திரும்ப பேசறதாலதான் பெரிசாயிடும். நான் ஒரு குடும்பஸ்தன்” என்று அமித் சொல்ல, அதை ஒப்புக் கொள்ள பாரு உடன்படவில்லை. 

“லெட்டர் படிக்கறப்ப நீங்க சிரிச்சிக்கிட்டுதானே இருந்தீங்க” என்று லாஜிக்காக பிரஜின் மடக்கினாலும் பாரு அதை ஏற்கவில்லை. “இது பர்சனல் அட்டாக். என்னை டார்கெட் பண்றாங்க. என்னையே கன்வின்ஸ் பண்ணாதீங்க” என்று சீறி விழுந்தார். “லெட்டர்ல காரெக்டர் பெயர்தான் இருக்கு. ஒரிஜினல் பெயர் இல்ல. பார்க்கறவங்களுக்கு தெரியும்” என்று எஃப்ஜே சொன்னாலும் ஏற்கப்படவில்லை. 

பாருவின் அலப்பறையினால் அமித் மிகவும் எரிச்சலாகி விட்டார். “வந்த முதல் நாள்ல இருந்தே பாருவோட நோக்கம் இதுதான். நீங்க போய் மாட்டிக்காதீங்க” என்று அமித்திடம் வார்னிங் செய்தார் எஃப்ஜே. 

‘துரோகம் பண்ணிட்டீங்க’ – பாருவிடம் வெடித்த அமித்

இந்த தீவிரமான பிரச்சனைக்கு பொதுக் கருத்து கேட்கப்பட்டது. “இது பர்சனல் அட்டாக் மாதிரி தெரியல” என்றார் பிரின்சிபல். “இது ஜோக்தான். அப்படியே விட்டுடலாம்” என்றார் அமித். “எனக்கு சிரிப்பு வந்துடுச்சு” எ்னறு சொல்லி பாருவின் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொண்டார் கம்ருதீன். “நாங்க ரொம்ப என்ஜாய் பண்ணோம். தர்மலிங்கத்திற்கு கல்யாணம் கூட ஆகிடுமோன்னு நெனச்சோம்” என்று வினோத் அசந்தர்ப்பமாக ஜோக் அடிக்க “அதுக்குப் பதில் நான் தற்கொலை பண்ணிப்பேன்” என்று கோபமானார் அமித். (என்னே. பாருவிற்கு வந்த சோதனை?!)

அடுத்து எழுந்த விக்ரம் “ரெண்டு பேரையும் இணைச்சு கிண்டல் பண்ணும் போதெல்லாம் சும்மா இருந்த பாரு திடீர்னு கோபம் கொள்றது என்ன அர்த்தம். இது காமெடிக்கே செய்யும் அநீதி. நகைச்சுவை உரிமையைப் பறிப்பது” என்று ஓவராக பொங்கினார். 

என்றாலும் பாரு இந்தப் பிரச்சினையை கை விட மறுத்ததால் “வேணுமின்னே இதை பொிசாக்கறீங்க. உன்னை நம்பிய எனக்கு துரோகம் பண்ணிட்டீங்க. இனிமே உங்க கிட்ட பேசணுமான்னு இருக்கு” என்று கோபமானார் அமித். 

மூட் ஸ்விங்கில் அன்னியன் அவதாரம் எடுக்கும் பாரு

சபரி தள்ளியதில் தனக்கு ஆதரவாக விசே பேசியதையொட்டி, இந்தப் பஞ்சாயத்தும் தனக்கு ஆதரவாக கூடும் என்று பாரு கணக்குப் போட்டிருப்பார் போல. ஆனால் இது தனக்கு எதிராக திரும்பியதால் தனிமையில் சென்று அழுது புலம்பினார். “அரோராவை சொன்ன போது (ஆபாசக் குறியீடு) என்னைத் திட்டினாங்கள்ல.. இதுவும் அது போல சென்சிட்டிவ் விஷயம்தானே..இங்க இருக்க பிடிக்கவேயில்ல. நான் கிளம்பறேன்” என்பது அவரது புலம்பல். 

சாண்ட்ரா தன்னை ஆன்ட்டி என்று அழைத்த போது உடனே அதை கடுமையாக ஆட்சேபித்தார் பாரு. அதைப் போலவே தர்மலிங்கம் வாத்தியாருடன் இணைத்து மாணவர்கள் கிண்டலடிக்க ஆரம்பிக்கும் போதே இதை கடுமையாக ஆட்சேபித்திருக்கலாம். அதையெல்லாம் விட்டு விட்டு, கடிதம் வாசிக்கப்படும் போது ஜாலியாக சிரித்து விட்டு திடீரென்று கோபம் கொள்வது விநோதமாகப் படுகிறது. இன்னொரு டாஸ்க்கில் அமித்தை வைத்து ‘இவரு என்னோட புருஷன்” என்று முன்பு கேரக்டர் பிளே செய்தவர்தான் பாரு. 

இப்படியாக அழுது புலம்பிய பாரு, அடுத்த சில நிமிடங்களிலேயே ‘மாம்பழமாம்.. மாம்பழம்’ என்கிற பாடலுக்கு உற்சாகமாக டான்ஸ் ஆட ஆரம்பித்தையெல்லாம் எப்படிப் புரிந்து கொள்வது என்று தெரியவில்லை. இந்த டான்ஸ் கம்ருதீன் மற்றும் அரோராவுடன் நிகழ்ந்தது. ஒருவேளை மொட்டை கடுதாசி கம்முடன் இணைத்து எழுதப்பட்டிருந்தால் சந்தோஷப்பட்டிருப்பாரோ?!

இந்த எபிசோடில் பாருதான் ஹைலைட் –  Mission Accomplished 

நிலைமை சுமூகமாவதற்கு அனைவரும் ஒன்றாக கூடி சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்தார்கள். அதுவரை பாருவிற்கு சமையல் ஆலோசகராக இருந்த அமித், இப்போது வர மறுப்பதால் “எனக்கு தனியா சமைக்கத் தெரியாது. யாராவது கூட வாங்க” என்று வற்புறுத்தினார் பாரு. “ஏதோ பசங்க சொன்னாங்கன்னு இங்க வந்தேன். என்னால வர முடியாது. அந்த அளவிற்கு ஹர்ட் ஆயிருக்கேன். வேணுமின்னா பசங்களை வெச்சு நான் சமையல் பண்றேன்” என்றார் அமித். 

பாருவிற்கு உதவியாளராக செல்ல எவரும் முன்வரவில்லை. விதிமீறல் ஆகி விடும் என்பது காரணம். அதற்கும் தனியாகச் சென்று அழுது தீர்த்தார் பாரு. ஒருவழியாக பழைய கூட்டாளியான எஃப்ஜே எழுந்த வர, மக்களுக்கு வடித்துக் கொட்டுவதற்காக எரிச்சலுடன் எழுந்து சென்றார் பாரு. 

‘சேலை பிரச்சினை, லெட்டர் பிரச்சினை, சமையல் உதவி பிரச்சினைன்னு.. இன்னிக்கு மட்டும் மூணு முறை பாரு அழுது தீர்த்திருக்காங்க” என்று விக்ரம் சொல்லிக் கொண்டிருந்தது சரியாகப் போயிற்று. இந்த எபிசோடில் வெளியான மூன்று பிரமோக்களிலும் பாருவின் டிராமாதான் ஹைலைட். 

ஸ்கூல் டாஸ்க்கில் எல்லோரும் மறந்து போயிருந்த பாருவை, தனது அலப்பறைகள் காரணமாக மீண்டும் நினைவுப்படுத்தி ஸ்கீரின் டைமை ஆளத் துவங்கி விட்டார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.