TVK: "உயிர் மூச்சு உள்ள வரை அவரை முதலமைச்சராக உருவாக்க பணியாற்றுவேன்" – செங்கோட்டையன்

அதிமுகவில் 9 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்றைய தினம் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்தார்.

இந்த சூழலில் தனது முடிவை நியாயப்படுத்தும் வகையில் விஜய்யை தலைவராக ஏற்றுக்கொண்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார் செங்கோட்டையன்.

“மக்கள் சக்தியை எந்த சக்தியாலும் வெல்ல முடியாது”

அவர் பேசியதாவது, “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து புரட்சி தலைவர் மூன்று முறை ஆட்சிக்கட்டிலிலே அமர்ந்தார்கள். அவர் என்னை அடையாளம் காட்டினார். அதற்கு பிறகு கட்சி இரு கூறுகளாக பிரிந்த நேரத்தில் புரட்சி தலைவி அம்மா அவர்களோடு உடனிருந்து பணிகளை ஆற்றினேன். இன்றைக்கு மக்கள் சக்தியாக இருக்கிற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், நாளைய தமிழகத்தின் முதலமைச்சர், அவருக்கு எவ்வளவு தடைகள் வந்தாலும் 2026ல் மக்கள் சக்தி மூலமாக தமிழ்நாட்டுடைய முதலமைச்சராக அமருவார். வெற்றி உறுதிசெய்யப்பட்ட ஒன்று.

தமிழக வெற்றிக் கழகத்தில் செங்கோட்டையன்
தமிழக வெற்றிக் கழகத்தில் செங்கோட்டையன்

தமிழகத்தில் ஒரு மாற்றத்தை, புதிய சமுதாயத்தை, நேர்மையான ஆட்சியை, புனிதமான ஆட்சியை தமிழகத்தை உருவாக்குவதற்கு புறப்பட்டிருக்கிறார். மக்கள் சக்தியோடு 2026ல் தமிழ்நாட்டுடைய முதலமைச்சராக அவர் அமர்வார். மக்கள் சக்தியை வீழ்த்துவதற்கு எந்த சக்தியாலும் முடியாது.

இன்றைக்கு ஆண்டிற்கு 500 கோடி ரூபாய் வருவாய் வந்தாலும் கூட, அதை தூக்கி எறிந்துவிட்டு மக்கள் சேவை செய்வதற்காக, தமிழகத்திலே புனித ஆட்சியைக் கொண்டு வருவதற்காக துணிந்து இந்த இயக்கத்தை உருவாக்கி இருக்கிறார். அதிலே நான் இடம் பெற்றிருக்கிறேன். என் உயிர் மூச்சு உள்ள வரை அவரை (விஜய்) முதலமைச்சராக உருவாக்குவதற்கு பணியாற்றுவேன்.” என்றார்.

அண்ணாயிசம்… அன்று பத்திரிகையாளார்கள் எழுப்பிய கேள்வி!

தொடர்ந்து தவெகவின் எந்த கொள்கையால் ஈர்க்கப்பட்டார் என்ற கேள்விக்கு, “புரட்சி தலைவர் ஆட்சி துவங்குகிற போது அண்ணாயிசம் என்றால் என்ன என்று உங்க பத்திரிகையாளர் கேட்டார்கள். அப்போது அண்ணாயிசம் என்றால் ஒழுகாத வீடு, கிழியாத உடை, ஆறாத சோறு என்று சொன்னார். அதேப்போல இன்றைக்கு எல்லோருக்கும் வீடு வேண்டும், பொருளாதாரத்தில் உயர்த்தப்பட வேண்டும், எல்லோரும் இரண்டு சக்கர வாகனத்திலே பயணம் செய்ய வேண்டும் என்று மனிதநேயத்தோடு அறிவித்திருக்கிறார்.

vijay

புரட்சி தலைவர் வரையிலும் புரட்சி தலைவி அம்மா வரையிலும் புனித ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றது. இன்றைக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கிற இந்த இரண்டு ஆட்சியும் மாற்றப்பட வேண்டும் என்று எல்லோரும் விரும்புகிறார்கள்.” எனப் பதிலளித்தார்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகைப்படத்துடன் பேனர்?

மேலும் செங்கோட்டையன், “நேற்றைய தினம் பத்திரிகையாளர்கள் அம்மா படத்தை வைத்துக் கொண்டிருக்கிறீர்களே என்று கேட்டார்கள். நான் அப்போது அந்த இடத்திலே, ‘இங்கே ஜனநாயகம் இருக்கிறது. யார் படத்தை வேண்டுமானாலும் வைத்து கொள்ளலாம்’ என்பதை தெளிவாக சொன்னேன்.

அதுமட்டுமல்ல இன்று அவருடைய வாகனம் செல்கிறபோது ஒரு புறத்திலே புரட்சி தலைவர், ஒரு புறத்திலே அண்ணா படமும் இருக்கிறது என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது.

செங்கோட்டையன் அலுவலகம்.
செங்கோட்டையன் அலுவலகம்.

திராவிட இயக்கத்தை மீண்டும் தமிழகத்திலே உருவாக்குவதற்கு எங்களை போன்றவர்கள் புரட்சி தலைவருடைய வழியில் நின்று பணியாற்றினோம், அதற்கு பிறகு புரட்சி தலைவி அம்மா வழியிலே நின்று பணியாற்றி இருக்கிறோம், மூன்றாவது தலைமுறையாக இவரை ஆட்சிக் கட்டிலில் அமரவைக்க எல்லோருடைய உறுதுணையோடு, மக்கள் சக்தியோடு எங்கள் பணிகள் அமையும்.” எனப் பேசினார்.

அதிமுகவினர் பேச்சுக்கு பதிலடி

தொடர்ந்து, “ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறேன். எனக்கு பின்னாலே மக்கள் இல்லை என்று அவர்கள் சொல்லலாமே தவிர, மக்கள் அதை பார்த்துக் கொள்வார்கள். மூன்று முறை வாக்கே கேட்காமல் என்னை வெற்றி பெற வைத்த மக்கள் அங்கே இருக்கிறார்கள். யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் சொல்லலாம். ஒன்றே ஒன்றை நான் சொல்கிறேன், ‘நான் என்று ஒருவர் நினைத்தால், ஆண்டவன் தான் என்று காட்டி விடுவான்'” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.