தீ விபத்தில் சிக்கிய 3 பெண்கள், ஒரு குழந்தையைக் காப்பாற்றிய போலீஸ் கான்ஸ்டபிளுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மேலும் ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்டும் அவருக்கு பதவி உயர்வு வழங்கி பாராட்டியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் கரவுலி மாவட்டம் நதவுட்டி ஒன்றியம் படா காவோன் பகுதியைச் சேர்ந்தவர் நேத்ரேஷ் சர்மா (31). கோட்வாலி போலீஸ் நிலையத்தில் போலீஸ் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகிறார்.
அண்மையில் கோட்வாலி மார்க்கெட் பகுதியிலுள்ள கடைப் பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது கடை அருகிலிருந்த வீட்டுக்கும் தீ பரவியது. அந்த வீட்டில் 4 பேர் சிக்கிக் கொண்டனர்.
இதையடுத்து அங்கு சென்ற போலீஸார் தீ விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்ற போராடினர். நேத்ரேஷ் சர்மா துணிச்சலாக தீயால் சூழ்ந்த வீட்டுக்குள் நுழைந்து 3 பெண்களைக் காப்பாற்றினார். மேலும் அங்கு தீயில் சிக்கித் தவித்த மூன்றரை வயது குழந்தையை போர்வையால் சுற்றி அணைத்தபடி வெளியே வந்து காப்பாற்றினார். இதையடுத்து அவருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து தீ சூழ்ந்த வீட்டுக்குள் இருந்து குழந்தையை போர்வையால் சுற்றியபடி நேத்ரேஷ் சர்மா வெளியே ஓடிவரும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. சமூக வலைதளங்களில் பலரும் அவருக்குப் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து நேத்ரேஷ் சர்மா கூறும்போது, “தீ விபத்து ஏற்பட்ட வீட்டிலிருந்து காப்பாற்றுங்கள் என்று பெண்கள் கூவும் குரல் கேட்டது. பின்னர் நான் துணிச்சலாக இறங்கி 3 பெண்களையும், மூன்றரை வயது குழந்தையையும் காப்பாற்றினேன்.
என்னுடைய துணிச்சலைப் பாராட்டி மாநில முதல்வர் அசோக் கெலாட் தொலைபேசியில் அழைத்துப் பாராட்டினார். அவருடைய வாழ்த்து எனக்கு பெருமையாக இருந்தது. எனக்கு ஹெட் கான்ஸ்டபிள் பதவி உயர்வு வழங்கியுள்ளதாக தெரிவித்தார். ஆனால் நான் என் கடமையைத்தான் செய்ததாகச் சொன்னேன்” என்றார்.