ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஐந்தாவது முறையாக ஒடிசா மாநிலத்தை ஆட்சி செய்து வரும் பிஜு ஜனதா தளம் கட்சி கடந்த மாதம் 29ஆம் தேயுடன் தனது ஐந்தாவது பதவிக்காலத்தின் மூன்று ஆண்டுகளை நிறைவு செய்தது.
இதையடுத்து, அம்மாநில அமைச்சரவை விரைவில் மாற்றம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒடிசா மாநிலத்தில் அமைச்சர்கள் 20 பேரும் ராஜினாமா செய்துள்ளனர், அவர்கள் தங்களது ராஜினாமா கடிதத்தை அம்மாநில ஆளுநரிடம் சமர்ப்பித்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய அமைச்சரவை பதவியேற்கும் பொருட்டு அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, புதிய அமைச்சர்கள் நாளை மதியம் 12 மணிக்கு பதவியேற்பார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒடிசா மாநிலத்தில் வருகிற 2024ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக, கட்சியை வலுப்படுத்தவும் புத்துயிரூட்டும் நடவடிக்கையாகவும் இந்த மறுசீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிகிறது.
ஒடிசா மாநில ராஜ்பவனில் புதிய அமைச்சர்கள் நாளை பதவியேற்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், பிரதீப் அமத் மற்றும் லத்திகா பிரதான் ஆகியோருக்கு அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, பிரஜாராஜ்நகர் இடைத்தேர்தலில் ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சி மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், இந்த அமைச்சரவை மாற்றம் நிகழவுள்ளது. அந்த தேர்தலில் பாஜக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.