வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பாலக்காடு : கேரளாவில் தனது நான்கு மாத குழந்தையின் உடலை நெஞ்சோடு அணைத்தபடி, பழங்குடியின தந்தையொருவர் கொட்டும் மழையில் 4 கி.மீ., துாரம் நடந்தே வீடு வந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் பாலக்காடு மாவட்டத்திலிருக்கும் அட்டப்பாடி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன். பழங்குடி இனத்தைச் சேர்ந்த இவரது குடியிருப்பு வனப்பகுதிக்குள் அமைந்துள்ளது; போக்குவரத்து வசதியில்லை.
இவரது 4 மாத குழந்தை, உடல்நலக் குறைவால் உயிரிழந்தது. மாவட்ட அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்குப் பின், உடலை அய்யப்பனிடம் ஒப்படைத்தனர். அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம், தடிகூண்டு குடியிருப்பு பகுதி வரை வந்தனர். அதன்பிறகு, வாகனம் செல்ல முடியாது.
![]() |
இதனால், தன் சிசுவின் இறந்த உடலை நெஞ்சோடு அணைத்தபடி அய்யப்பன் நடக்கத் தொடங்கினார். பலத்த காற்று, கொட்டும் மழையில், குழந்தையின் சடலத்தைச் சுமந்தவாறே 4 கி.மீ., துாரம் நடந்து தன் குடியிருப்புக்கு வந்து சேர்ந்துள்ளார். உடன் வரும் நபர், குழந்தையின் உடல் மீது மழைத்துளி படாமல் குடைபிடித்தபடி வரும் வீடியோ வெளியாகி, மக்களின் நெஞ்சைக் கனக்க வைத்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement