கொல்கத்தாவைச் சேர்ந்தவர் பாபு என்கிற இப்ராஹிம் (32). இவர் சென்னையில் கட்டட கட்டுமானப் பணி செய்யும் இடங்களுக்கு ஆட்களை அனுப்பும் மேஸ்திரி வேலை செய்துவருகிறார். இந்த நிலையில் பாபு அவரின் உறவினரான மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மார்ட்டின் ஷேக் (24) என்பவரை அண்ணாநகர் 5-வது மெயின் ரோடு எஃப் பிளாக் பகுதியில் கட்டுமானப் பணியில் சேர்த்திருக்கிறார். இந்த நிலையில், கடந்த 25.7.2022-ம் தேதி மாலை கட்டுமானப் பணி நடைபெறும் இடத்தில் இருவரும் மது அருந்தியிருக்கின்றனர்.

அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. ஆத்திரமடைந்த பாபு, கட்டையை எடுத்து மார்ட்டின் ஷேக்கின் தலையில் தாக்கியிருக்கிறார். அதனால் அவர் படுகாயமடைந்தார். பின்னர், பாபு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். மார்ட்டின் ஷேக்கின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வேலைப்பார்ப்பவர்கள் வந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இது தொடர்பாக அண்ணாநகர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீஸார் விசாரணை நடத்தி கொலை முயற்சி வழக்கு பதிவுசெய்தனர். பின்னர் பாபுவை போலீஸார் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த மார்ட்டின் ஷேக் உயிரிழந்தார். அதனால் கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. போலீஸார் நடத்திய விசாரணையில் மார்ட்டின் ஷேக்கை வேலைக்குச் சேர்த்தற்கு கமிஷனாக பணம் கேட்ட தகராறில் இந்தக் கொலை நடந்தது தெரியவந்தது.

இது குறித்து போலீஸார் கூறுகையில், “கைதான பாபுவிடம் விசாரித்தபோது மார்ட்டின் ஷேக், வேலை செய்யும்போது மாடியிலிருந்து கீழே விழுந்து விட்டதாக முதலில் தெரிவித்தார். ஆனால், விசாரணையில் மார்ட்டின் ஷேக்கை பாபு கட்டையால் அடித்த தகவல் தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் விசாரித்தபோது மார்ட்டின் ஷேக்கை போதையில் அடித்ததை அவர் ஒப்புக்கொண்டார். மேலும் உயிரிழந்த மாரட்டினுக்கு பாபு சித்தப்பா உறவு முறை. பிரேத பரிசோதனைக்குப்பிறகு மாரட்டின் ஷேக்கின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.”